Forum

Notifications
Clear all

குடை 3

1 Posts
1 Users
1 Reactions
275 Views
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 4 months ago
Posts: 13
Topic starter  

அத்தியாயம் 3

வாட்டர் ஃபோட்டை நிதானமாகவே தன் பக்கம் இழுத்த அர்ஜுன்.. அது நீச்சல் குளத்தின் விளிம்பை எட்டியதும்.. அதிரா இறங்கி வர.. கரத்தை நீட்டினான். அக்கரத்தை பற்ற.. அதிரா தயக்கம் காட்டுவதைப் பார்த்து “வேற சான்ஸே இல்லை. வேற சான்ஸ் இருந்தாலும்.. அந்த சான்ஸை நான் உனக்கு கொடுக்க விரும்பலை.” என்றான்.

 

அர்ஜுன் கூறியதைக் கேட்டு அதிரா திகைத்தாள். வேறு எப்படி இதிலிருந்து இறங்கி வர முடியும் என்றுக் கூறுகிறான். ஒருவேளை இந்த வீட்டில் வேலை செய்யும் பெண்ணை வரவழைத்து அவளுக்கு உதவ முடியாது என்றுக் கூறுகிறானா.. என்று எண்ணினாள். இவன் தீபக் ‘ரோக்’ என்றுக் குறிப்பிட்டது அதிராவிற்கு வேடிக்கையாக இருந்தது. தற்போதைக்கு.. அவன் கூறியது போல்.. வேறு யாரும் உதவ முடியாது என்பதால்.. அவன் நீட்டிய கரத்தைப் பற்றினாள்.

 

அந்த வலிய கரத்தின் உதவியுடன் நீரில் ஆடிய வாட்டர் ஃபோட்டில் இருந்து இறங்கினாள். இறங்கியதும்.. உடலில் ஒட்டிய ஆடைகளை சரிச் செய்வதில் கவனமானாள். அவளுக்கு நன்றி கூற வேண்டும் என்றுத் தோன்றவில்லை. ஏனெனில் இந்த சிரமத்தையே ஏற்படுத்தியதே அவன்தானே! சொல்ல போனால்.. அவன்தான் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எனவே அவனது முகத்தினை பார்ப்பதைத் தவிர்த்தாள். ஆனால் போகும் போது.. சொல்லிக் கொண்டாவது போக வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் சாதாரண பேச்சு எடுக்க கூட.. விருப்பமில்லாமல் நின்றிருந்தாள்.

 

அவனும் அதை உணர்ந்திருந்தானோ.. ஆனால் அவளைப் பற்றிக் கவலையில்லாது. “சிபி! கம்” என்று விசிலடித்தான். 

 

உடனே நீந்திக் கொண்டிருந்த அந்த நாய்க்குட்டி.. அருகில் இருந்த நாற்காலி வடிவம் கொண்ட வாட்டர் ஃபோட்டினை தொற்றிக் கொண்டது. அதைப் பார்த்து தலையைப் பின்னால் சாய்த்து சிரித்த அர்ஜுன் “ஹெ ஃபடி! ஆர் யு ஜெலஸ்..” என்றுவிட்டு.. அங்கு கட்டப்பட்டிருந்த மறுகயிற்றை பிடித்துக் கொண்டு.. இன்னொரு பக்கம் சென்றவன், அந்த வாட்டர் ஃபோட்டினை இழுக்க ஆரம்பித்தான். அதுவும் கெட்டியாக தொற்றியவாறு வந்தது. அதைப் பார்த்து அதிராவிற்கு கூட முறுவல் மலர்ந்தது. ஆனால் அடுத்து நடந்ததைக் கண்டு.. அவளது முறுவல் மறைந்தது. 

 

ஏனெனில் அந்த நாய்க்குட்டி தொற்றிய வாட்டர் ஃபோட்.. நீச்சல் குளத்திற்கு அடியில்.. சாய்வாக போடப்பட்டிருந்த சரிவான பாதை வழியாக வந்து.. நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்தது. தரைக்கு வந்ததும்.. வாட்டர் ஃபோட்டில் இருந்து குதித்த அந்த சிபி நாய்க்குட்டி.. உடலை சிலிர்த்து வாலை ஆட்டி.. உடலில் இருந்த நீரை வெளியேற்றி விட்டு.. ஓடியது.

 

இது போன்று.. அதிராவையும் வெளியே இழுத்திருக்கலாம். ஆனால் வேண்டுமென்றே.. அவன் உதவி செய்வது போல்.. அவன் பக்கம் இழுத்து அவனது கரத்தினைப் பற்றி தடுமாறியவாறு வெளியே வந்திருக்கிறாள். அவன் அப்பொழுது சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தம் தற்பொழுது புரிந்தது. எனவே.. அவனிடம் சொல்லிக் கொண்டு போகலாம் என்று எண்ணியது கைவிட்டு.. முகத்தை திருப்பிக் கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினாள். அவள் மறையும் அர்ஜுன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. என்பதை அவள் அறியாள்!

 

அறைக்கு வந்ததும் நனைந்த ஆடைகளை மாற்றிவிட்டு.. கூந்தலையும் உலர்த்தினாள். அடுத்து என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை. வெளியே செல்லவும்.. விருப்பமில்லை. ஆனால் மனம் அமைதியாக இருந்தால்.. மீண்டும் மனம் சோர்ந்து போகும்.. என்று உடலுக்கு வேலை கொடுக்க எண்ணினாள். எனவே மடித்து அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அவளது ஆடைகளை எடுத்து கலைத்து படுக்கையில் போட்டாள். பின் மீண்டும் மடித்து அழகாக அடுக்கி வைக்க ஆரம்பித்தாள். எப்பொழுது உறங்கினாள் என்று அவளுக்கு தெரியவில்லை. தன்னை யாரோ உலுக்கும் அசைவில் கண்விழித்தாள்.

 

பசை போல் ஒட்டிய இமைகளை மெல்ல பிரித்த போது.. அங்கு அகிலா நின்றிருந்தாள். அதிரா விழித்ததைக் கண்டதும் “ஹெ அதிரா! போதும் எழுந்திரு.. என்ன இந்நேரத்தில் இப்படியொரு தூக்கம்!” என்றாள்.

 

அகிலா நின்றிருப்பதைப் பார்த்து அதிரா மீண்டும் தலையணையில் முகத்தை சாய்ந்தவளாய் “இந்த நேரத்தில் தூங்காம! வேற எப்போ தூங்கிறது!” என்று விட்டுப் போன உறக்கத்தை மீண்டும் தொடர முயன்றாள்.

 

ஆனால் அகிலா மீண்டும் பலமாக உலுக்கி “வாட்! டைம் இப்போ என்னனு தெரியுமா?” என்றுக் கேட்டாள்.

 

அதிரா கண்களை திறக்காமல் “நீ இப்போ தானே வந்தே! அப்போ டைம் நடுநாத்திரியை தாண்டிய நேரம்.. அதாவது ஒண்ணுல இருந்து மூணுக்குள்ள இருக்கும். கரெக்கட்டா..” என்றுச் சிறு சலிப்புடன் கேட்டாள்.

 

அதற்கு அகிலா “இப்போ டைம் சாயந்திரம் ஏழு மணி.. நான் ஆறு மணிக்கே வந்துட்டேன்.” என்றாள்.

 

அதைக் கேட்டு “என்ன” என்று எழுந்த அதிரா தனது செல்பேசியை எடுத்து அதில் நேரத்தை பார்த்தாள். அகிலா கூறியதைப் போல் நேரம் சரியாக ஏழை தான் காட்டியது. அப்படிப் பார்த்தாலும் அவள் மதியம் மூன்று மணியில் இருந்து உறங்கியிருக்கிறாள். ‘ஏன் இவ்வளவு அசதி’ என்று சோம்பல் முறித்தவள் அகிலாவிடம் “தப்பா சொன்னது.. என் தப்பில்லை. நீ சீக்கிரமா வருவேன்னு எனக்கு தெரியாதே..” என்றுச் சிரித்தாள்.

 

அதற்கு அகிலா “நான் ஜாலியா தீப் கூட சுற்றிட்டு இருந்தேன். ஆக்சுவலா அப்படியே இன்னைக்கு நைட் பீச் வாலிபால், பீச் ரெஸ்லீங் மேட்ச் பார்க்க பிளன் போட்டிருந்தோம். ஆனா என் அம்மா அர்ஜுன் வந்திருக்கிறான். அதிசயமா உன்னைக் கேட்கிறான். சீக்கிரம் வான்னு ஆர்டர் போட்டுட்டாங்க! என்னடா இது ஆச்சரியமா இருக்குனு தான் இருந்துச்சு! நான் உடனே வரலைன்னா.. என் அம்மா கிட்ட இருந்து அவரோட அருமை புத்திரன் கூப்பிட்டும் நான் வரலைன்னு திட்டு விழுன்னு.. தீப்பை கன்வின்ஸ் செய்துட்டு வந்தேன். தீபக் முகமே சரியில்லை பாவம்! இப்படி பல விசயங்களை கேன்சல் செய்துட்டு வந்தா.. அந்த இடியட் என்னை திட்டுறதுக்காக கூப்பிட்டுக்கான். அதுவும் உன்னால தான் எனக்கு திட்டு விழுந்தது. என்னால எதிர்த்து கூடப் பேச முடியலை.” என்றுப் பொரிந்தாள்.

 

அகிலா கூறுவதை சிறு சலிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த அதிரா முடிவில் அவளால்.. அர்ஜுனிடம் இருந்து திட்டு வாங்கினாள்.. என்றுக் கூறியதைக் கேட்டு திகைத்தாள். 

 

அதிரா இன்னும் நம்ப முடியாமல் “என்ன சொல்றே?” என்றுக் கேட்டாள்.

 

அகிலா “ஆமா! உன்னை எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்தே.. பின்னே ஏன் தனியா விட்டுட்டு போயிருக்கேனு திட்டினான். நான் இன்னைக்கு உன்னை கூப்பிட்டேன் தானே.. நீதானே வர மாட்டேன்னு சொன்னே.. அதைத்தான் சொன்னேன். அதுக்கு.. அப்போ யார் கூடப் போனேன்னு கேட்கிறான் இடியட்! அவனுக்கு ஏதோ தெரிஞ்சுருச்சுனு நினைக்கிறேன். அவன் யார் என்னை கேள்வி கேட்கிறதுக்கு? நானாவது அம்மா அப்பாக்கு தெரிந்தால்.. திட்டுவாங்கனு இரகசியமா தீபக் கூட டேட்டிங் போயிட்டு இருக்கேன். ஆனா அவன் அந்த ரிஷிதா கூட ஓப்பனா சுத்திட்டு இருக்கான். இவனுக்கு என்ன தகுதி இருக்கு.. என்னைப் பற்றிப் பேச! ஆனா அவன் கிட்ட என் பெரெண்ட்ஸ் கேள்வியே கேட்க மாட்டாங்க!” என்று மீண்டும் பொருமினாள்.

 

மதியம் அர்ஜுன் அவளைச் சீண்டிய நினைவில் அதிரா சிறு எரிச்சலுடன் “உன் அண்ணனுக்கு நான் எங்கே இருந்தா என்ன! நீ சொல்றது சரி தான்.. உன்னைத் திட்ட உன் அண்ணனுக்கு ரைட்ஸ் இருக்கலாம். ஆனா தகுதி இல்லை. ஒரு பெண் கூட ஊரை சுத்திட்டு உன்னைப் பற்றி உன் லவ்வர் பற்றி குறை கூறிட்டு இருக்கிறார். முக்கியமா முன்னே பின்னே பழக்கமில்லாத பொண்ணு கூட எப்படிப் பேசறது பழகிறதுனு தெரியலை.” என்று அதுவரை யாரிடம் கூறுவது என்றுத் தெரியாமல்.. அர்ஜுனின் மீதிருந்த கோபத்தை அடக்கி வைத்திருந்திருந்ததை.. தற்பொழுது அகிலா அர்ஜுனனை திட்டவும், தானும் உடன் சேர்ந்து திட்டினாள்.

 

அகிலாவும் அவளது பேச்சை ஆமோதிப்பாள் என்று அவளைப் பார்க்க அவளோ “ஹெ! நீ பேசறதைப் பார்த்தா.. அர்ஜுனை மீட் செய்திருப்பே போல..” என்றாள்.

 

அதற்கு ஆம் என்றுத் தலையை ஆட்டிய அதிரா மதியம் நடந்ததைக் கூறினாள்.

 

பின் அதிரா “நீயே சொல்லு.. இப்படியா ஒரு பெண் கிட்ட பிஹேவ் செய்வாங்க! இது எவ்வளவு தப்பு தெரியுமா..” என்றாள்.

 

அதற்கு அகிலா “அவன் கூடப் பழக்கம் இல்லாதவங்களுக்கு தப்பா தான் தெரியும். ஆனா அவன் இப்படித்தான்! ரொம்ப டாமினேட் டைப்! அவன் என் விசயத்தில் மூக்கு நுழைக்காமல் இருந்தால்.. நான் அவனுக்கு ஃபேனே ஆகிருப்பேன். பட் இடியட் என்னை இரிடெட் செய்ய வேண்டுன்னே.. என் விசயத்தில் புகுந்து குட்டையை குழப்புவான். இப்போ கூடப் பாரு..” என்றுக் கூறிக் கொண்டே போனவளின் பேச்சில் இடையிட்ட அதிரா “ஹெ! என்னை டீஸ் செய்தார்னு சொல்றேன். அதுக்கு உன் ரியாக்ஷன் இவ்வளவுத்தானா..” என்றாள்.

 

படுக்கையில் இருந்து எழுந்த அகிலா “பின்னே என்ன செய்ய சொல்றே! ஸாரி கேட்க வைக்கணுமா.. சேன்ஸே இல்ல! அவனைப் பார்த்த நல்லா திட்டிரு! என் அண்ணன் என்றெல்லாம் நீ தயங்க தேவையில்லை. அதுதான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும். ஏன்டா என் பிரெண்ட்டை டீஸ் செய்தேன்னு கேட்டா.. நீ வேணுன்னா என் பிரெண்ட்டை டீஸ் செய்துக்கோன்னு சொல்வான். ஆனா.. அவனோட பிரெண்ட் சர்கிள்குள்ள என்னை இதுவரை இன்டர்டுஸ் கூட செய்தது இல்லை.” என்றுத் தோள்களைக் குலுக்கினாள்.

 

அதிரா “சரி.. அடுத்த டைம் மீட் செய்தால்.. நானே கண்டிப்பா..” என்றுக் கூறிக் கொண்டே போனவள், திடுமென “இல்லை, இல்லை..” என்றுத் தலையை ஆட்டினாள்.

 

அகிலா என்ன என்பது போல் பார்க்கவும், நின்றுக் கொண்டிருந்த அகிலாவின் கரத்தைப் பற்றிய அதிரா “அகி! நான் இங்கே வந்தது.. உன் பெரெண்ட்ஸிற்கும் பிடிக்கலை. உன் பிரதருக்கும் பிடிக்கலை அப்பறம்..” என்றவள், சற்று நெளிந்தவாறு “உன் லவ்வர் கூட இருப்பதற்கு நான் நடுவில் டிஸ்டர்ப்பா வேற இருக்கேன். அதுனால தான் நான் இன்னைக்கு உன் கூட வரலை. இங்கே தனியா இருக்க போர் அடிக்குது. அதுனால ப்ளீஸ் நான் இந்தியாவிற்கே போயிரேனே..” என்று இதுதான் சமயம் என்று அவள் முடிவெடுத்ததை கூறினாள்.

 

அதற்கு அகிலா “ஹெ.. இன்னேரத்திற்கு நீயே கண்டுப்பிடிச்சுருப்பே.. தீபக்கை தனியா இங்கே மீட் செய்ய தான் உன்னைக் கூட்டிட்டு இங்கே வந்தேன். அப்படியே நீயும்.. அந்த என்சாய் செய்வேனு நினைச்சேன். இன்னைக்கு உன்னைக் கூட கூட்டிட்டு போகாதாலே பாரு.. அவங்களுக்கு டவுட் வந்துருச்சு! பாதியிலேயே வர வேண்டியதா போச்சு. உனக்கு தான் யாரும் இங்கே பிரெண்ட் இல்லையே.. ஏன் தனியா போறேன்னு அம்மா கூடக் கேட்டாங்க! எல்லாம் அர்ஜுன் இடியட் செய்த வேலை. என்னை இந்த குரூப் பீப்பிள் கூட பழக விட மாட்டாங்க.. அதுக்கு அர்ஜு தான் காரணம்! பதினெட்டு வயசு இருக்கும் போது.. பீர் டேஸ்ட் செய்துட்டேன்னு.. என்னைப் போட்டு கொடுத்துட்டான். ஆனா அவன் மட்டும் ஜாலியா சுத்தரான். சோ ப்ளீஸ் யா! நானும் தீபக்கும் ஒருத்தர் ஒருத்தர் சரியான ஆள் தானான்னு.. டைம் ஸ்பென்ட் செய்து தான் தெரிஞ்சுக்கணும். அதுனால ப்ளீஸ் என் கூடவே இரு அதிரா! நீ எங்களுக்கு டிஸ்டர்ப்பா இல்லை. நீயும் என்சாய் பண்ணேன். நீ என்ன கிழவியா! டுவின்டி த்ரீ தான் ஆச்சு! சுற்றியும் செமையான பிளேஸா இருக்கு.. நம்ம வயசுல எத்தனை யங்ஸ்டர்ஸ் எப்படி என்சாய் செய்யறாங்க பாரு! நீயும் என்சாய் செய்யேன்.” என்றவள், அதிரா ஏதோ கூறத் தொடங்கவும், “புரியுது! புரியுது! இங்கே எல்லாரும் கொஞ்சம் ஒப்பனா ட்ரஸ் மட்டுமில்ல பழகவும் செய்வாங்க! உனக்கு அது சரிப்பட்டு வராது.. உன்னையும் அந்த மாதிரி இருக்கவும் சொல்லுலை. என்னடா பைத்தியங்களா.. என்று வேடிக்கை பார்ப்பதற்காக ஆவது கூட வாயேன்.” என்று மூக்கை சுருக்கி கெஞ்சினாள்.

 

அகிலா பேசிய விதத்தில் அதிரா சிரித்துவிட்டாள்.

 

அகிலாவின் இந்த பேச்சு தான் அதிராவிற்கு அவளிடம் நட்பு ஏற்பட்டது. 

 

அவள் வேலை செய்யும் அழகுநிலையத்திற்கு.. தன்னை அழகுப்படுத்திக் கொள்ள வந்தவள், அதிராவின் அழகை பார்த்து வியந்து முதலில் பேசினாள். தன்னையே கிண்டல் செய்துக் கொள்வாள். ஒருமுறை.. அதிரா மாதவிடாய் நேரத்தில் அதிக நேரம் நிற்க முடியாமல் அவளுக்கு வேலை செய்வதைப் பார்த்து.. ஹெர்ஸ்டைல் செய்ய வந்தவள், தனக்கு பெடிக்குயர் மெடிக்குயர் செய்ய வேண்டும் என்றுக் கூறி.. அவளை நாற்காலியில் அமர வைத்தவள், தனது காலை அதிராவிடம் காட்டாமல்.. அன்று நடந்ததைப் பற்றி.. அரட்டை அடிக்க ஆரம்பித்தாள். அதுவரை.. அதிராவிற்கு கிடைத்த அன்பான கஸ்டமர் என்றுத் தான் நினைத்திருந்தாள். ஆனால் அடுத்த முறை சந்தித்த சமயம் அகிலாவின் பிறந்தநாள் வரவும்.. தன்னுடைய தோழிகளுடன் வந்தவள், அதிராவையும் தனது தோழியாக மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள். அதன் பின் எந்த சுவாரசியமான விசயம் என்றாலும்.. அதிராவிற்கு ஃபோன் செய்து கூறிவிடுவாள். பின் நேரில் வந்து.. மறுபடியும் கூறுவாள். அகிலாவிடம் காணப்படும் அசட்டையும்.. எதைப் பற்றியும் கவலைப்படாத தன்மையும், சிறு அப்பாவித்தனமும் அதிராவிற்கு கவலை அளித்தாலும்.. எப்படி என்றுத் தெரியாமல் அகிலாவிடம் சிறு அன்பு தோன்றி அது நட்பாக மாறியது உண்மையே! உடன் பயிலும்.. அல்லது ஒத்த வயதுடையவர்கள் தான் நண்பர்கள் ஆக முடியுமா.. என்று இருவரும் நண்பர்கள் ஆனார்கள். சில நேரங்களில்.. அகிலாவிடம் அதிராவிற்கு பிடிக்காத விசயங்கள் மற்றும் குணங்களால் அதிராவிற்கு சிக்கலையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தும்.. தற்பொழுது.. இங்கு அழைத்து வந்தது போல்!

 

அகிலா “என்ன அதிரா! கன்வின்ஸ் ஆகிட்டியா! இங்கே இருப்பே தானே..” என்று தலையைச் சாய்த்து கேட்டாள். அந்த செய்கை ஏனோ அவளுக்கு அவளது அண்ணனை நினைவுப்படுத்தியது. தலையை உலுக்கி அந்த நினைவை கலைத்துவிட்டு.. இப்படிக் கேட்கிறவளிடம் மறுக்க இயலாது. மேலும்.. அவள் கூறியது போல்.. இங்கே அடிக்கும் கூத்தை வெறுப்புடன் பார்க்காமல்.. அட முட்டாள்களா என்றுப் போலாவது பார்க்கலாம்.. அப்பொழுதும் முடியவில்லை என்றால்.. இங்கிருந்து செல்வதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டு அகிலாவிடம் சம்மதம் தெரிவித்தாள். 

 

உடனே அகிலா “வாவ் அப்போ ஒகே.. பத்து நிமிஷத்தில் ரெடியா இரு! விட்ட ப்ரோகிராமை தொடர போறேன். நீயும் கூட வா..” என்று உற்சாகத்துடன் கூறினாள்.

அதிராவிற்கு தீபக்கை பற்றி.. அர்ஜுன் கூறியதும், அகிலாவின் வயதும் அப்பாவித்தனமும்.. இளமை வேகமும் பயத்தைக் கிளப்பியது. தற்பொழுது.. பெற்றோருக்கு தெரியாமல் இப்படி காதலிப்பவனிடம் வெளிப்படையாக பழகுவது எதில் நிறுத்துமோ.. என்று அச்சம் கொண்டாள். ஆரம்பத்தில் இருவரையும் நெருக்கமாக பார்த்த பொழுது.. தனது சங்கடத்தை விட்டு உரிமையாக ஆட்சேபணை தெரிவித்திருக்க வேண்டுமோ என்றுத் தோன்றியது. 

 

அர்ஜுனுக்கு அகிலாவின் அசட்டுத்தனம் பற்றியும், தீபக்கை பற்றியும் ஏதோ தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவ்வாறு பேசியிருக்கிறான். ஆனால் அப்படி எச்சரித்தவன், அண்ணனாய் அகிலாவை காப்பாற்ற தெரியவில்லை.. என்பதை விட தேவையில்லை என்று நினைப்பது அதிராவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. 

 

அகிலா “என்ன அதிரா யோசனை பலமா இருக்கு! நீ பயப்படற மாதிரி.. ஒண்ணும் இருக்காது. இங்கே வந்திருப்பவங்க.. எல்லாம் பெரிய மில்லியனர் பசங்க.. அவங்க லோக்கல் பாய்ஸ் மாதிரி பிஹேவ் செய்ய மாட்டாங்க..” என்றாள்.

 

அதைக் கேட்டு சிரித்த அதிரா “பெண்களைத் தவறாக பார்ப்பதற்கு.. பெரிய மில்லியனர், லோக்கல் என்று எல்லாம் இல்லை. மனசுல அழுக்கு இருந்தாலே போதும். எங்க ப்யுட்டிபார்லரில் ஜென்ஸ் செக்ஷனுக்கு வரும்.. பெரிய புள்ளிகளோட வாரிசுகள் சில பேர் எப்படி பிஹேவ் செய்வாங்கனு தெரியும். அவங்க கிட்ட எப்படி பேஸ் செய்யணும் என்று எனக்கு தெரியும்.” என்றாள்.

 

ஒரு நிமிடம் அமைதியான அகிலா “ம்ம்! ஒத்துக்கிறேன். அதுதான் நான் கவனமா இருந்திருக்கிறேன்னு சொன்னேனே.. உனக்கும் எப்படி ஜாக்கிரதையா இருக்கணும் என்றுத் தெரிந்திருக்கே.. அப்பறம் வருவதற்கு என்ன!” என்றுக் கேட்டவள், பின் தொடர்ந்து “வெறும் ஸ்போர்ட்ஸ் தான் அதிரா! எஸ் எல்லாரும் கொஞ்சம் ட்ரீங்க்ஸ்ல இருப்பாங்க! நான் ட்ரீங்க்ஸ் எடுத்துக்க மாட்டேன். இன்னொரு பெண் பழக்கமாச்சு.. அவளுக்கு சுகர் இருக்கிறதாலே அவளும் ட்ரீங்க்ஸ் எடுத்துக்க மாட்டா.. நாம் ஒன்றா தனியா தான் இருப்போம். எல்லாரும் பெரிய பணக்கார வீட்டு பசங்க.. பெயர் போயிரும்.. எந்த ரிப்போர்டர் கெமராவோட சுத்த போறானோ என்று பயத்தோட இருப்பாங்க.. அதுனால அத்துமீறி பழக மாட்டாங்க! என்ன வரத் தானே..” என்று மீண்டும் கேட்டாள்.

 

அதிரா தலையை ஆட்டி “கண்டிப்பா வரேன். பட் எனக்கு இன்னொரு ப்ராமிஸ் தரணும். நீ தீபக்கை லவ் செய்யறே ஒகே தான்! ஆனா அவன் கூடத் தனியா போக கூடாது.” என்றாள்.

 

அகிலா “ஹெ! அப்படியெல்லாம் இல்லப்பா.. பார்த்தா கிஸ்ஸடிப்போம். அவ்வளவுத்தான்! அவனுக்கு என் மேலே லவ் அதிகம் அதைக் கொஞ்சம் ஓவரா காட்ட ட்ரை செய்வான். ஆனா எனக்கு அந்த மாதிரி லவ்வை காட்ட கூச்சமா இருக்குமா.. அவனைக் கூட தடுத்திருவேன். அதுல கொஞ்சம் அப்செட்டும் ஆவான்.” என்று வெட்கத்துடன் சிரித்தாள். 

 

அகிலா தொடர்ந்து “என்னமோ என்னோட லவ்வர் கூட இருக்கிறதைப் பற்றி.. மோசமா அர்ஜுன் சொல்லியிருக்கானே.. அவனைப் பற்றி உனக்கு தெரியுமா! அவன் இதுவரை.. ஆறு கேர்ள்பிரெண்ட் மாத்தியிருக்கான். அவனோட கேர்ள்பிரெண்ட்ஸ் இவனை இம்பரஸ் செய்ய கொஞ்சம் ஒரு மாதிரி தான் ட்ரஸ் போடுவாங்க! பார்க்கிறதுக்கு.. சினிமா வில்லன் கூட சுத்தர பொண்ணுங்க.. என்று ஒரு மாதிரி காட்டுவாங்க பார்த்தியா.. அந்த மாதிரி தான் இருப்பாங்க! இவனும் பக்கா வில்லன் தான்! அர்ஜுன் உன் கூட கொஞ்சம் நிதானமா பேசினான் என்பதற்காக.. நல்லவன்னு நினைச்சுராதே! அவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு!” என்றாள்‌.

 

அதிரா அசட்டையாக “உன் அண்ணன் எப்படியிருந்தா எனக்கு என்ன! இனி‌ நான் எதுக்கு அவர் கூடப்‌ போய் பேசப் போறேன். எனக்கு பார்த்ததுமே பிடிக்கலை.” என்றாள்.

 

அகிலா “அவன் கிட்ட விலகி இருக்கணும் என்றால்.. என் கூடவே இரு! அவன் வாயை மட்டும் இல்ல.. என் பெரெண்ட்ஸ் வாயையும் அடைச்சுரலாம்.” என்று முடிவில் சேர்த்தி கூறவும், அதிரா பக்கென்று சிரித்தாள்.

 

“ஒகே! ஒகே! வரேன்! இந்த இடம் ஒட்டாததாலே கொஞ்சம் அப்செட் ஆகிட்டேன். உன் அண்ணன் வேற வந்து.. இங்கே எதுக்கு நீ வந்தே.. நீ இங்கே வந்திருக்க கூடாது. அகிலா கூட எப்படி பிரெண்ட் ஆனே.. என்கிற மாதிரியே பேசவும்,  இங்கிருந்து எப்படியாவது போகணும் என்று முடிவு செய்துட்டேன்.” என்றாள்.

 

அகிலா “நான்தான் சொன்னேனே.. அவன் டேன்ஞரஸ்னு! உன்னை இங்கே இருந்து துரத்திவிட்டுட்டு.. என்னையும் துரத்திவிட்டுட்டு என் பெரெண்ட்ஸுக்கு இங்கு ஆப்பு ரெடி செய்ய போறான் அதுதான்  அவனோட பிளன்..” என்றாள்.

 

அதிரா புரியாது பார்க்கவும், அகிலா “ப்ச்! அது எங்களோட பேமலி பாலிடீக்ஸ் அதை விடு! நாம் என்சாய் செய்யலாம்.” என்று கண்ணடித்தாள். அதிராவிற்கு அவளது உற்சாகம் தோற்றிக் கொள்ளவும்.. சரி என்று தலையை ஆட்டினாள்.

 

பின் அகிலா தனக்கு தானே பேசியவாறு சென்றாள். 

 

“வர மாட்டேன்னு நினைச்சுருப்பான். திடீர்னு போய் நின்னா அவனுக்கு சர்பரைஸ்ஸா இருக்கும்.” என்று குதிகலித்தவாறு ஓடினாள். அதிரா அங்கு செல்ல ஏதுவான உடையாக ஜீன்ஸும், தொடை வரை நீண்ட டாப்பும் அணிந்துக் கொண்டு தானும் தயாரானாள். தொடையளவு கொண்ட ஷாட்ஸும் க்ராப் டாப்பும் அணிந்துக் கொண்டு.. தயாராகி வந்த அகிலா.. “போகலாமா..” என்று முன்னே சென்றாள்.

 

அதிரா “உன் பெரெண்ட்ஸ் கிட்ட சொல்ல வேண்டாமா!” என்றுக் கேட்டாள். அதற்கு அகிலா “கண்டிப்பா விட மாட்டாங்க! அதுனால கேட்க வேண்டாம்.” என்று அசட்டையாக கூறினாள்.

 

அதிரா “அட்லீஸ்ட் உன் அண்ணன் கிட்ட..” என்று முடிப்பதற்குள் அகிலா “ஜய்யே அவன் கிட்ட எதுக்கு நான் பர்மிஷன் கேட்கணும். முதல்ல நீ சொன்னவங்க.. இங்கே இருந்தா தானே.. என் பெரெண்ட்ஸ்.. அவங்க செட் எல்லாரும் ஜாயின் ஆகிற பார்ட்டிக்கு கிளம்பிருப்பாங்க.. என்னைத் திட்டின அந்த ராஸ்கலும் இங்கே இல்லை. அவன் எங்கே ஊர் சுற்ற போயிருப்பானோ! வா நாம்‌ போகலாம்.” என்று முன்பை விட அசட்டையாக பதிலளித்தாள்.

 

பின் இருவரும் அங்கிருந்த காரில் ஒன்றில் ஏற..‌ அகிலா காரை ஓட்டினாள். கார் வேகமாக விருந்து நடைப்பெறும் இடத்தை நோக்கி சென்றது.

 

அந்த இடம் மூன்று‌ பேரின் வாழ்க்கையை மாற்றியமைக்க போகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

ஆசிரியர் பேசுகிறேன்:

 

துளியாய் விழுந்த மழைத்துளிகளை அனுபவிக்க.. உள்ளங்கையை நீட்டிவிட்டு.. எதோ தோன்ற சுற்றியும் பார்த்தால்.. தெருவில் நடந்து சென்றுக் கொண்டிருக்கும் மற்றவர்கள்.. ஒரு மாதிரி பார்க்கிறதை பார்க்கலாம். இந்த பொண்ணு ஏன் இப்படி fake ஆ இருக்கு. பெரிய சினிமா நடிகைன்னு நினைப்பா.. அப்படிங்கிற மாதிரி பார்ப்பாங்க! இப்படி மழையை இரசிப்பது அழகான விசயம் என்கிறதாலே தான்.. சினிமாவில் அப்படி‌ எடுத்தாங்க! ஆனா அதை மறந்து சினிமாவில் அப்படி செய்யறதாலே தான்.. அதைப் பார்த்து நிஜத்தில இப்படி சிலர் செய்து மற்றவங்க அட்டென்ஷனை ஈர்க்க பார்க்கிறதா நினைக்கிறாங்க! என்னங்க அநியாயம் இது! மழையின் அதன் அழகும்.. அது தரும் சுகமும்.. இயற்கையான விசயம்!

 

இந்த கதையில் ஹீரோ ஹீரோயினின் அழகான சந்திப்பு.. அவ்வளவு அழகானது இல்லை போலன்னு.. அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் உணர்த்துவதாய் வர மாதிரி தானோ!


   
Vidhushini reacted
Quote
Share: