Forum

Notifications
Clear all

குடை 2

1 Posts
1 Users
1 Reactions
274 Views
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 4 months ago
Posts: 13
Topic starter  

அத்தியாயம் 2

 

தன் முன் நிற்பது அகிலாவின் அண்ணன் என்றுத் தெரிந்ததும்.. அவன் யார் நீ என்று உரிமையாக அதட்டியதில் தவறில்லை என்று‌ புரிந்தது. அவசரமாக அவனிடம் மன்னிப்பு கேட்க அதிரா எதானிக்கையில்.. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன், அவளைப் பற்றி கவலையில்லாமல் தலையை துவட்டியவாறு அவளுக்கு முதுகு காட்டியபடி நடந்துக் கொண்டிருந்தான். அவள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே.. அகிலாவின் அறைக்கு அடுத்து இருந்த அறைக்குள் நுழைந்தான்.

 

அதிரா தோள்களைக் குலுக்கி விட்டு மீண்டும் தனது அறைக்குள் சென்றாள். படுக்கையில் சிறிது நேரம் கண்களை மூடி படுத்தவளுக்கு உறக்கம் வராதலால்.. தலைவலி தான் வந்தது. எனவே மீண்டும்‌ வெளியே வந்தவள்.. மெல்ல எட்டிப் பார்த்தாள். அங்கு யாரும் இல்லை. எனவே அந்த சிட்அவுட்டிடம் மீண்டும் சென்று மனதின் வெறுமையை போக்க முயன்றாள். ஆனால் அது முடியாததால்.. ப்ச் என்ற சலிப்புடன் தலையை திருப்பியவளுக்கு.. திறந்தவெளி மேல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டு கண்ணில் பட்டது. 

 

தற்பொழுது தான் அகிலாவின் அண்ணன் அர்ஜூன் அங்கிருந்து வந்தான். அகிலாவின் தந்தை கார்த்திகேயனும் அன்னை மாலதியும் முதல் தளத்தில் தான் இருக்கிறார்கள். அவர்கள் அங்கு இருக்கிறார்களோ.. அல்லது வெளியே சென்றுவிட்டார்களோ அவள் அறியாள். ஆனால் யாரும் மேலே இருக்க வாய்ப்பில்லை. மேலே வரவும் மாட்டார்கள். அதனால் தான் ஏன் சென்று பார்க்க கூடாது என்று அவளுக்கு தோன்றியது.

 

இந்த இரு தளங்களைப் போன்று மேல்தளத்தில் அப்படியென்ன ஆடம்பரம் செய்து வைத்திருக்கிறார்கள்.. என்றுத் தெரிந்துக் கொள்ள ஆர்வமும் பிறக்கவும், அதற்கு மேல் தயங்காமல் மெல்ல படிகளின் மேல் ஏறி சென்றாள். கடலின் உட்பகுதியில் காணப்படும் பாறைகள் மற்றும் தாவரங்களை போன்று வடிவமைக்கப்பட்டு அதற்கு நடுவே அமைக்கப்பட்ட படியில் ஏறியவள்.. அதன் வடிவமைப்பை வியக்காமல் இருக்க முடியவில்லை.

 

மெல்ல மேற்பரப்பிற்கு வந்தவளின் கண்கள் வியப்பில் விரிந்தன. அங்கு கடலலையுடன் கூடிய நீச்சல் குளமும்.. அருகிலேயே உடற்பயிற்சி செய்ய கருவிகளும் இருந்தன. அதற்கு பக்கத்தில் சிறு பூங்கா போன்று அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு நடுவில் தளர்வாக அமர்ந்து பேச நாற்காலிகளும்.. சிறுவர்கள் விளையாட என்று சிறுப் பகுதியும் இருந்தது. இவற்றைப் பார்த்து அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. 

 

இப்படி ஆங்காங்கு குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பேச என்று அமைப்புகள் அமைக்கப்பட்டிருக்க.. இவர்களோ வருவது கூடத் தனித்தனியாக வந்திருக்கிறார்கள். இதற்கு “பேமலி கெதரிங் பார்ட்டி” என்றுப் பெயர் வேற! அதிராவிற்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போன்று இருந்தது. 

 

இவ்வாறு இரசித்தவாறு வந்தவளின் கண்ணில்.. கண்ணாடி கூரையுடன் இதே வீட்டின் அமைப்பு கொண்ட மாதிரி சிறு வீடு கண்ணில் பட்டது. அதைப் பார்த்ததும்.. அதிரா உற்சாகத்துடன் வேகமாக சென்றாள். அவளுக்கு சிறு வயதில் வீட்டில் இருக்கும் பாய் மற்றும் போர்வையை கொண்டு வீடு கட்டி விளையாடியது நினைவிற்கு வந்தது.

 

அவளது உயரத்திற்கு இருந்த அந்த வீட்டின் மாதிரியிடம் சென்றவளின் மனம் குதுகலித்தது. அப்பொழுது.. ஏதோ சத்தம் கேட்க.. மெல்ல அந்த கண்ணாடி கூரைக்குள் எட்டிப் பார்த்தவளின் கண்கள் மேலும் விரிந்தன. ஏனெனில் அங்கு பழுப்பு, கருப்பு, வெள்ளை மற்றும்.. இவை அனைத்தும் கலந்த நிறத்தில் என்று மொத்தம் நான்கு நாய்க்குட்டிகள் உள்ளே சுற்றிக் கொண்டிருந்தன. அங்கு குட்டியாக போடப்பட்ட ஷோபா, படுக்கை மற்றும் மேஜைகள் என்று ஆளுக்கொன்றில் ஏறிப் படுத்துக் கொண்டிருந்தன. 

 

அவற்றை பார்த்ததும்.. அதை வருட அதிராவின் மனம் துடிக்கவும், மெல்ல குனிந்து சிறிதாக அமைக்கப்பட்டிருந்த கதவினை திறந்தாள். அதிரா கதவை திறந்ததும்.. நான்கு நாய்க்குட்டிகளும்.. வாலை ஆட்டிக் கொண்டு வெளியே ஓடி வந்து.. அவளது கை மற்றும் மடிக்குள் புகுந்துக் கொண்டன. இதை எதிர்பாராத அதிரா குதுகலத்துடன் அவற்றை அள்ளி மடியில் போட்டவாறு தரையில் அமர்ந்துவிட்டாள். அவை மாறி மாறி.. அவளது மேல் புரண்டுக் கொண்டிருந்தன.

 

அப்பொழுதே பார்த்த அவளிடம் அந்த நாய்கள் ஒட்டிக் கொண்டது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த நாய்க்குட்டிகளை யார் வளர்ப்பது? இவர்கள் கொண்டு வந்ததா.. அல்லது இந்த வீடு, நீச்சல் குளம், ஜிம் போன்று.. இந்த நாய்க்குட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டதா என்று யோசித்தாள்.

 

பின் தோள்களை குலுக்கி விட்டு எப்படியிருந்தால்.. என்ன தனது மனதில் முதலில் இருந்த வெறுமை தற்பொழுது அவளுக்கு இல்லை. அது போதும்.. என்றுவிட்டு மற்ற யோசனைகளை மூளையில் இருந்து ஒதுக்கிவிட்டு.. அந்த நாய்க்குட்டிகளுடன் விளையாடினாள். அவற்றுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது.. இன்னொன்று தோன்ற வயிறு குலுங்க சத்தமாக சிரித்தவள், யாருக்காவது கேட்டு விடுமோ.. என்று வாயையும் மூடிக் கொண்டு சுற்றிலும் பார்த்தாள். நல்லவேளை யாருமில்லை. தற்பொழுது மட்டும் அவளை யாராவது பார்த்திருந்தால்.. அவளுக்கு பைத்தியம் என்று நினைத்திருப்பார்கள்.  மீண்டும் அந்த நாய்குட்டிகளை பார்த்தவளுக்கு சிரிப்பு பொங்கியது.

 

இந்த மாதிரி வடிவில் அமைக்கப்பட்ட சிறு வீட்டில்.. நான்கு நாய்க்குட்டிகள் இருந்தது என்றால்.. அந்த நான்கு நாய்குட்டிகளும்.. இந்த குடும்பத்தினரை குறிப்பிடுகிறதா.. என்று நினைத்து மீண்டும் சிரித்துவிட்டு.. அதனுடன் விளையாட ஆரம்பித்தாள்.

 

சிறிது நேரம் அவளுடன் விளையாடிய நாய்களுக்கு அவள் அலுத்துவிட்டது போல.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் தனது வாலை ஆட்டியவாறு சிதறி ஓடின. ‘இதென்னடா வம்பா போயிற்று!’ என்று அதிராவும் அதன் பின்னால் ஓடினாள்.

 

ஆளுக்கொரு பக்கம் ஓடியதின் பின்னால் ஓடுவது சிரமமாக இருக்கவும், மீண்டும் அதை அந்த சிறு வீட்டினுள் அடைத்து விட முடிவு செய்தாள். எனவே ஒவ்வொரு பக்கமாக ஓடியதின் பின்னால் ஓடிப் பிடிக்க முயன்றாள். அவை எளிதாக அவளின் கையில் சிக்கவில்லை. இரண்டை பிடித்து வீட்டினுள் அடைத்தவள், மற்ற இரண்டிடம் வெகு பாடுபட்டாள். அதில் ஒன்று அவளிடம் ஓடிப்‌பிடித்து விளையாடியது. அவள் ஒரு பக்கம்‌ போனால்.. அது மறுபக்கம் ஓடியது..‌ என்று ஒரு ஷோபாவை சுற்றி ஓடி ஆட்டம் காட்டி பின் மாட்டியது. அதைப் பிடித்து அடைத்து விட்டு மூச்சு வாங்க நிமிர்ந்தவள், நான்காவது நாய்க்குட்டி எங்கே என்றுப் பார்த்தாள்.

 

அது சற்று தூரத்தில் நின்றுக் கொண்டு அவளைப் பார்த்து வந்து பிடிப் பார்க்கலாம் என்பது போல் வாலை ஆட்டியது. 

 

அதிரா "இதோ வரேன்.." என்று தனது குர்தாவின் நீண்ட கையை தூக்கி விட்டு கருவியவாறு அந்த நாய்க்குட்டியை நோக்கி சென்றாள். 

 

அந்த நாய்க்குட்டியோ அவள்‌ பக்கம் வரும் வரை வாலை ஆட்டியவாறு நின்றுவிட்டு.. அவள் அருகில் வந்ததும்.. துள்ளி குதித்து ஓடியது. இவ்வாறு கொஞ்ச நேரம் அவளிடம் ஆட்டம் காட்டியது. ஒருதரம் அவள் திரும்புவதற்குள் வேகமாக ஓடிய அந்த நாய்க்குட்டி அவளது கண்ணில் அகப்படவில்லை.

 

அதிரா "ஏய்! மரியாதையா முன்னே வந்திரு! என்கிட்டவே ஆட்டம் காட்டறீயா! இப்போ என் முன்னாடி வரலைன்னா.. ஆட்டிட்டு இருக்கிற அந்த வாலை சுற்றி கட்டி வச்சுருவேன். மத்தவங்க எல்லாம் எவ்வளவு அமைதியா வீட்டிற்கு போயிட்டாங்க.. நீ மட்டும்‌ ஏன் இந்த அலும்பு செய்யறே!" என்றவாறு தேடியவளின் மனதில் குறும்பு கூத்தாட.. சற்று குரலை இறக்கி "இந்த ஆட்டம் காட்டறீயே! இந்த வீட்டில்‌ நீ யார் மாதிரி?" என்றுக் கேட்டுவிட்டு சத்தமாக சிரித்தாள்.

 

இவ்வாறு தேடியவாறு வந்தவள், அந்த நாய்க்குட்டி நின்றுக் கொண்டிருந்த இடத்தைப் பார்த்ததும்.. மயக்கம் போட்டு விழாத குறையாக அதிர்ந்து நின்றாள்.

 

ஏனெனில் அது நீச்சல் குளத்திற்கு அருகில் இருந்த கைப்பிடி சுவரில் ஏறி நின்றுக் கொண்டிருந்தது. அதன் நான்கு கால்களில் ஒரு காலை அந்த பக்கம் வைத்தாலும் பேலன்ஸ் தவறி கீழே வந்துவிடும். அந்த பக்கம் கடல் மணற்பரப்போ, புல்வெளி தளமோ இருந்தால் பரவாயில்லை. ஆனால் அந்த நாய்க்குட்டி நின்றிருந்த பக்கம் கீழே செயற்கை பூங்கா உருவாக்க.. கற்களால் சிப்பி போல் வடிவமைக்கப்பட்ட நீரூற்று ஒன்று‌ உள்ளது. 

 

எனவே அதிரா மிகவும் பயந்து போனாள். பதறியவாறு அதனைப் பிடிக்க போகவும், அவள் வருவதைக் கண்டு அந்த நாய்க்குட்டி.. அந்த கைப்பிடி சுவற்றில் இருந்து கொத்தாக நான்கு பெரிய இலைகள் அடுக்காக தொங்குவது போன்று வடிவமைக்கப்பட்டதில் இறங்கியது. இன்னும் பதறிய அதிரா கைப்பிடி சுவற்றில் ஏறி அந்த பக்கம் இருந்த முதல் இலைப்பகுதியில் காலை வைக்க போகையில்..

 

"ஹெ ஸ்டாப்!" என்ற அதட்டலில் திரும்பிப் பார்த்தாள்.

 

அங்கு அர்ஜூன் அவளைப் பார்த்தவாறு வேகமாக வந்தான். அவனைப் பார்த்ததும்.. நாய்க்குட்டிகளை அவள் வெளியே விட்டதால் தான் இந்த விபரீதம் என்ற குற்றவுணர்வு மேலோங்க.. அவன் திட்டுவதற்குள்.. நாய்க்குட்டியை பிடித்துக் கொடுத்து விட வேண்டும் என்று.. அந்த இலைப்பகுதியில் பாதத்தை வைத்தாள்.

 

உடனே "இடியட்! நகராதே!" என்றவன், அதற்குள் அவளது அருகில் வந்திருந்த அர்ஜூன் அவளது முழங்கையை பற்றியிருந்தான்.

 

அதிரா அந்த நாய்க்குட்டியை சுட்டிக்காட்ட திரும்பிப் பார்த்தவள்.. இன்னும் அதிர்ந்தாள். ஏனெனில் இவள் அங்கு வருவதைப் பார்த்து அந்த நாய்க்குட்டி இன்னும்.. இறங்கி நுனி பகுதிக்கு போயிருந்தது. அடுத்து அது செய்த காரியத்தை கண்டு இருவரும் அதிர்ந்தார்கள். நுனி பகுதியில் நின்றுக் கொண்டு அந்த நாய்க்குட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த அதிர்ச்சியில் அதிரா தன்னிசை செயல் போல் எட்டிப் பிடிக்க போனாள். அதனால் இன்னொரு பாதத்தையும் முழுவதுமாக இலை பகுதியில் வைக்கவும், அவளது பேலன்ஸ் தவறியது.

 

நொடியில் விபரீதத்தை உணர்ந்த அர்ஜூன், முதலில் அவளது இடுப்பை சுற்றி கரத்தால் வளைத்து இறுக பற்றி.. அவளது முழு எடையும் அந்த மெல்லிய இலை போல் வடிவமைக்கப்பட்ட பகுதியில் இறங்காமல் பார்த்துக் கொண்டான். பின் மறுகரத்தை சட்டென்று நீட்டி நாயின் வாலை பிடித்து இழுத்தான். அதனால் ஏற்பட்ட வலியில் நாய் அன்னிசை செயல் போல் குரைத்தவாறு துள்ளியது.

 

ஆனால் விடாமல் பிடித்து தூக்கிய அர்ஜூன் அது துள்ளி விடுபடும் முன் அவனுக்கு பின்னால் இருந்த நீச்சல் குளத்தில் ஏறிந்தான். பின் தன்னை இறுக பற்றியவாறு இருந்த அதிராவை மறுகரத்தாலும் வளைத்து.. அப்படியே தூக்கியவன், பின்னோடு நகர்ந்தான். அதிராவின் முழு உடலும் வெளி வரும் வரை பின்னால் நகர்ந்துக் கொண்டே போனவன்.. பின்னால் இருந்த நீச்சல் குளத்தில் கால் இடறி அவளுடன் விழுந்தான்.

 

நீச்சல் குளத்தில் விழுந்த அர்ஜுனும் திகைத்து தான் போனான். அதிராவிடம் இருந்து கையை அகற்றி விட்டு.. நீச்சல் குளத்தின் விளிம்பிற்கு வந்தவன், அதில் இரு கைகளையும் ஊன்றி.. நீச்சல் குளத்தில் இருந்து மேலே வந்தவன் ‘ஆ’ என்று அலறல் கேட்டு திரும்பிப் பார்த்தான். அங்கு அதிரா கை கால்களை அடித்தவாறு அலறிக் கொண்டிருந்தவள், அப்படியே நீரினுள் மூழ்கினாள். அவளை அதிசயமாக பார்த்தவன், அடுத்த நிமிடம் நீரினுள் பாய்ந்து அவளை தூக்கிக் கொண்டு வந்து நீச்சல் குளத்தின் விளிம்பில் அமர வைத்து அருகில் அமர்ந்துக் கொண்டான்.

 

இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருமி குடித்த நீரை துப்பிக் கொண்டிருந்தவளின் முதுகில் பலமாக தட்டி குடித்த நீரை வெளியேற்றினான். பின் இன்னும் அவள் மூச்சு வாங்கவும், ஆதரவாக தடவிக் கொடுத்தான். 

 

அர்ஜூன் சிரித்தவாறு "என்னடா இந்த மாலத்தீவிற்கு வந்த சோதனை! ஸ்விமீங் தெரியாத ஆள் இங்கே வந்திருக்கீங்க.." என்றான்.

 

பின் அர்ஜுன் “உன் பேர் என்ன?” என்றுக் கேட்டான்.

 

ஆனால் அதிரா நினைவு வந்தவளாய் “அச்சோ அந்த நாய்க்குட்டி?” என்றுப் பதறியவளாய் நீச்சல் குளத்தை பார்க்கும் போதே.. அவளிடம் ஆட்டம் காட்டிய அந்த நாய்க்குட்டி.. உல்லாசமாக நீந்திக் கொண்டிருப்பதை பார்த்தாள்.

 

அர்ஜுன் “சிபி இஸ் ஃபைன்! வாட்ஸ் யுவர் நேம்?” என்று மீண்டும் வினாவினான்.

 

பெயர் சொல்ல அவனைப் பார்த்த பொழுது தான்.. அவளது உடலுடன் அவன் ஒட்டி அமர்ந்திருப்பது புரிந்தது. மேலும் ஈரத்தால் ஆங்காங்கு உடலில் ஒட்டிய ஆடையுடன்.. அவனுடன் அவ்வளவு நெருக்கமாக அமர்ந்திருப்பது ஒரு மாதிரி இருந்தது. எனவே “நா..நா..நான் போ..போகணும்.” என்று எழ முயன்றாள். 

 

அர்ஜுன் அப்படி ஒட்டியமர்ந்ததால் தான்.. உடலில் வெம்மை பரவ குளிர் எடுக்காமல் அவளுக்கு இருந்தது என்று அவள் அறியவில்லை. அவனிடம் இருந்து அகன்று எழ முயன்றவளுக்கு உடல் வெடவெடத்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன்.. சட்டென்று அவளது காலை இடறி விட்டான். மீண்டும் நீரில் விழுந்த அதிரா அலறுவதை ஒரு கணம் பார்த்தவன், மெல்ல நீரில் இறங்கி.. அவளை அள்ளிக் கொண்டு சென்று நீச்சல் குளத்தின் நடுவில் அன்னம் போன்று இருந்த வாட்டர் ஃபோட்டில் ஏற்றிவிட்டான்.

 

அர்ஜூன் தள்ளிவிட்டு மீண்டும் நீரில் விழுந்ததில் அதிர்ந்து போயிருந்த அதிரா.. அவளை கரையேற்றாமல் நீரிற்கு நடுவில் இருக்கும் வாட்டர் ஃபோட்டில் அமர வைக்கவும், மேலும் அதிர்ந்தவளாய் அவனைப் பார்த்தாள்.

 

நிதானமாக சாய்வு நாற்காலி போன்று.. இருந்த வாட்டர் ஃபோட்டில் ஏறியமர்ந்தவன், "நான் கேள்வி கேட்டேன்.. நீ பதில் சொல்லுலை. எழுந்து போக பார்த்தே.. அதுனால தான் நீ எழுந்து போக முடியாத இடத்துல உட்கார வச்சேன். இப்போ சொல்லு உன் பேர் என்ன?" என்றுக் கேட்டவனை அயர்ந்து போய் பார்த்தாள்.

 

அவளது முகபாவனையை பார்த்து சிரித்த அர்ஜூன் "இப்பவும் பதில் சொல்லுலைன்னா! ஆல்ரைட் நான் கிளம்பறேன். நீ தனியா வந்துக்கோ.." என்று அதில் இருந்து நீரில் குதிக்க எதானிக்கையில் "அதிரா.." என்று நடுங்கும் குரலில் கூறியவள் "இட்ஸ் நாட் குட்.." என்றுச் சிறுக் குரலில் கூறினாள்.

 

அர்ஜுன் புருவத்தை உயர்த்தி “எது?” என்றுக் கேட்டான்.

 

அதற்கு அதிரா “இப்படி ஒரு பெண்ணை டீஸ் செய்வது!” என்றாள்.

 

அர்ஜுன் “பார்த்தா.. அப்படித்தான் தெரியும். ஆனா என்னைப் பற்றித் தெரிந்திருந்தால்.. அப்படித் தோணியிருக்காது.” என்றவன், தொடர்ந்து “ஆனா உனக்கு என்னைப் பற்றித் தெரியாதலால்.. நான் செய்தது தப்பு தான்..” என்றுவிட்டு.. அதற்கு மன்னிப்பு கேட்காமல் சிரித்தான். 

 

சிரித்தவனை அதிரா வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில்.. அர்ஜுன் சிரிப்பை நிறுத்திவிட்டு “என்ன பேர் சொன்னே? ஸாரி ஐ கான்ட் கெட் இட்!” என்றுக் கேட்டான்.

 

அதிரா பற்களைக் கடித்துக் கொண்டு “அதிரா” என்றுச் சத்தமாக கூறினாள்.

 

அர்ஜூன் "அதிரா!" என்றுச் சொல்லிப்‌ பார்த்தவன், "சம்திங் டிப்ரென்ட் அன்ட்‌ கேட்சி நேம்" என்றான். பின் தொடர்ந்து "அகி.. கூட வந்திருக்கியா?" என்றுக் கேட்டான்.

 

அவள் ஆம் என்றுத் தலையை ஆட்டினாள்.

 

“ஒய் இயர்?” என்றான். அதிராவால் திகைத்துப் பார்க்க தான் முடிந்தது. அதைப் பார்த்து சிரித்தவன், "அவ கூப்பிட்டாளா!" என்றுக் கேட்டான்.

 

"ஆமா!"

 

"பிரெண்ட்டை இவ்வளவு செலவு பண்ணி கூட்டிட்டு வர அளவிற்கு அவ ஒண்ணும் ரொம்ப நல்லவள் இல்லை! சம்திங் பிஸ்ஸிங்" என்றுச் சிரித்தான்.

 

நீரின் தளும்பலுக்கு ஏற்ப ஆடியவாறு இருந்த அன்ன வடிவ ஃபோட் விழுந்து விடுமோ என்ற பயத்துடன் அதைக் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்த அதிராவிற்கு.. அகிலா தன்னை இங்கே அழைத்துக் கொண்டு வந்த காரணம் தெரிந்திருந்தாலும்.. அவளைக் காட்டிக் கொடுக்காது.. தன்னிடம் இப்படி அதிகாரம் செலுத்துபவனுக்கு உறைக்க வேண்டும் என்று.. "பேமலி மெம்பர்ஸ் இருந்தாலும்.. இங்கே லோன்லியா இருப்பேன்னு சொல்லி.. என்னைக் கூட்டிட்டு வந்தா.." என்று அகிலா.. தன்னை அழைத்து வரக் கூறிய காரணத்தை கூறினாள்.

 

அதைக் கேட்டு அர்ஜூன் நக்கலுடன் "வாட்! வாட் டிட் யூ ஷே? ஷே இட் அகைன்!" என்றுக் கேட்டான்.

 

அவனது நக்கலுக்கு அர்த்தம் அதிராவிற்கு புரிந்து தான் இருந்தது. பின்னே தனியாக இருப்பேன் துணைக்கு வா என்று அழைத்து வந்துவிட்டு.. துணைக்கு அழைத்து வந்தவளை தனியாக விட்டுச் சென்றால்.. அவன் நக்கலடிக்காமல் என்ன செய்வான்!

 

பின் அர்ஜுன் “அவளை நம்பி நீ வந்திருக்க கூடாது. ஆனா நல்லவேளை உன்னை விட்டுட்டு போயிட்டான்னு சந்தோஷப்படு! அவ.. சென்னையிலேயே அந்த தீபக் கூட சுற்றுவதைப் பார்த்திருக்கேன். அவன் பக்கா ரோக்! அவளுக்கு வேற ஆளே கிடைக்கலையே! எப்படியும் அவன் இங்கே வருவான். அவன் கூடத் தான் அவ சுற்ற போயிருப்பா! அனேகமா என் பெரெண்ட்ஸிற்கு நீ இன்னைக்கு அவ கூட போகாததே தெரிந்திருக்காது. ஆனா அவங்க உன் கூடத் தான் அகிலா சுற்ற போயிருப்பான்னு நினைச்சுருப்பாங்க! ம்ம் நல்ல பிளன் தான்! இது எனக்கு தெரியாம நான் ஒப்பான என் கேர்ள் பிரெண்ட்டை கூட்டிட்டு வந்து திட்டு வாங்கியிருக்கேனே..” என்றுச் சிரித்தான்.

 

பின் தொடர்ந்து “நீ அவ கூடப் போகாதது தான் பெட்டர்! பிகாஸ் நீ ரொம்ப மூடி டைப்பா இருக்கே..” என்று இரு பொருள்பட கூறிவிட்டு சிரித்தான்.

 

மீண்டும் அவனது இரு பொருள்படும் பேச்சில் முகம் சுருங்கியவள், "தீபக் மோசமான டைப் என்றால்.. அகியை அவன் கூட போக விடாமல் செய்திருக்கலாமே!" என்றாள்.

 

அதைக் கேட்டு சத்தமாக சிரித்த அர்ஜுன் “அவளோட விசயத்தில் நான் எதுக்கு தலையிடணும்? அப்படி நான் சொன்ன மட்டும் அவள் கேட்டுருவாளா..” என்றான்.

 

அன்னத்தின் பெரிய கழுத்து போன்ற பகுதியை பிடித்துக் கொண்டு அதிரா என்ன பதில் கூறுவது என்றுத் தெரியாது அமைதியாக அமர்ந்திருந்தாள். அன்னத்தின் கழுத்து பகுதி அவளை மறைக்கவும், அர்ஜுன் தலைசரித்து அவளைப் பார்த்தவன், அவளை நன்றாக ஒரு கணத்திற்கும்‌ மேலாக பார்த்தான்.

 

பின் தொடர்ந்து “உனக்கும் இந்த இடம், எங்க கிரின்ஜ் ரிலேன்ஸ் அன்ட் ஏ ஜோக்ஸ் எல்லாம் செட் ஆகாதே! பட் நீ இங்கு வந்துட்டே! எந்த ரிஷனுக்காக வந்தே” என்று யோசனையுடன் தலையை ஆட்டினான். பின் சட்டென்று நீரில் குதித்து நீச்சல் விளிம்பு சுவரிடம் நீந்தி சென்று ஏறியமர்ந்தான்.

 

தன்னை இப்படியே விட்டு.. அவன் மட்டும் செல்லவும் திகைத்த அதிரா "நான்தான் பதில் சொல்லிட்டேனே.." என்று அழுக்குரலில் கூறுகையில் அர்ஜூன் அங்கே கட்டியிருந்த கயிறு ஒன்றைப் பிடித்து இழுக்கவும், நீரினுள் மூழ்கியிருந்த கயிறு மேலே வந்தது. அதனுடன் அந்த அன்ன வடிவ ஃபோட் இணைத்திருந்தது. அவன் இழுக்கவும்.. சிறிது சிறிதாக அவனை நோக்கி வந்தது. 

 

அந்த மஞ்சள் நிற அன்ன வடிவ வாட்டர் ஃபோட்டில் நீல வண்ணத்தில் இளஞ்சிவப்பில் மலர்கள் பிரின்ட் செய்யப்பட்ட குர்தாவில், நீச்சல் குளத்தில் விழுந்ததால் ஆடைகள் மட்டுமின்றி.. விரித்து போட்ட அவளது கூந்தலும், முகத்தில் ஒட்டியிருக்க.. அவனை மிரட்சியும் கோபமுமாக பார்த்தவாறு‌ அவன் இழுக்க வந்த அன்ன வடிவ வாட்டர் ஃபோட்டில் வந்தவளை பார்த்தவனின் மனதில் ஏனோ திடுமென மெல்லிய சலனம் தோன்றி மறைந்தது. ஆனால் மனதில் தோன்றிய சலனத்தால் முகத்தில் பூத்த முறுவல் மறையாமல் அங்கேயே ஒட்டிக் கொண்டது.

ஆசிரியர் பேசுகிறேன் :

 

மேகமூட்டம் சூழ்ந்ததும் ஏற்பட்ட மந்த நிலையில்.. நமக்கு ஒண்ணுமே தோணாது தான்! அதுக்கு பிறகு சிறு சிறு மழைத்துளிகள் ஆங்காங்கு விழும். ஒரு துளி பூமில விழும், இன்னொரு துளி எதாவது பொருள் மேலே விழும், சில துளிகளோ சாக்கடையில் கூட விழும். ஆனா சில துளிகள் நம் மேலே விழும் போது.. தானே தோன்றிய சிலிர்ப்புடன் வானத்தை பார்க்கும் போது.. இன்னொரு மழைத்துளி அண்ணாந்து பார்க்கும் நம்ம முகத்துல விழுந்துட்டா.. அதுல கிடைக்கிற சின்ன சந்தோஷம் கூட அந்த நிமிஷம் பேரின்பம் தான்!

 

வேற வேற இடத்தில் விழுந்த மழைத்துளிகள்.. கடைசியா முகத்தில் விழுந்த மாதிரி.. அர்ஜுன் அவளை கோபமடைய செய்து, வெறுப்பேற்றி, திகைக்க வைத்து.. கடைசியா அவ மனம் பற்றி யோசிப்பானோ! 


   
Vidhushini reacted
Quote
Share: