குடை 19
அத்தியாயம் 19
படிக்கட்டிற்குள் வந்ததும்.. அவன் நேராக நின்று படியிறங்கவும் தான் அதிரா சுயநிலைக்கு வந்தாள். சட்டென்று பார்வையை அவனிடம் இருந்து அகற்றிக் கொண்டாள். இத்தனை நடந்த பிறகும்.. இத்தனை நடப்பதற்கு காரணமாக இருந்த தன்னுடைய இரசிப்பிற்கு பெரிய கொட்டு வைத்து அடக்கினாள். அதைக் கண்டு கொண்ட அர்ஜுன் முறுவலித்தான்.
படிக்கட்டில் இறங்கி கொண்டிருக்கும் பொழுது.. ஆங்காங்கே சிலர் நடமாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அதில் யாரும் இந்திய முகச்சாயலை கொண்டிருக்கவில்லை. பூடான், நேபாள் நாட்டை சேர்ந்தவர்கள் போல் இருந்தார்கள். அவர்கள் பேசும் பாஷை அவளுக்கு புரியவில்லை. அர்ஜுன் அவளை தூக்கி கொண்டு வருவதைப் பார்த்தவர்கள், அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். சிலர் அருகில் இருப்பவரிடம் சுட்டிக்காட்டி சிரித்தார்கள். அதிராவிற்கு மிகவும் சங்கடமாகி போனது. ஆனால் இந்த விடாக்கொண்டனிடம் இறக்கி விட கூறினால் செய்ய மாட்டேனே.. என்று இருந்தது. எப்படி இந்த அர்ஜுனிடம் இருந்து தப்பிப்பது என்று மனம் யோசித்தாலும்.. அவள் யோசிப்பதே அவன் அவன் கண்டுப்பிடித்து விடக் கூடாது என்று அவனுடன் பேச்சு கொடுத்தாள்.
“இதென்ன ஏதோ லாட்ஜ் மாதிரி இருக்கு..” என்றாள்.
அதற்கு அர்ஜுன் “லாட்ஜ் இல்லை. வேலை செய்பவர்கள் தங்குகிற கோர்ட்டர்ஸ்!” என்றான்.
அதிரா ஆச்சரியமாக பார்க்கவும், அவளது பார்வைக்கு அர்த்தம் புரிந்து அர்ஜுன் “சம்பளம் ரொம்ப கம்மியா தராங்க! என்ன செய்யலாம். இந்த சம்பளத்தை வச்சு எப்படி உன் கூட குடும்பம் நடத்தி.. குழந்தை குட்டிகளை பெருசாக்க போகிறேன் என்றுத் தெரியலை. ப்ச்” என்றான்.
அதைக் கேட்டு அதிரா முகத்தை திருப்பிக் கொள்ளவும், அர்ஜுன் சிரித்தவாறு உண்மையான காரணத்தைக் கூறினான்.
“நம்மை தேடிட்டு இருக்கிறவங்களுக்கு டவுட் வரக் கூடாது. இங்கு இருக்கிறவங்களுக்கும் நம் மேலே டவுட் வரக் கூடாது.” என்றான்.
அதற்கு அதிரா “இதெல்லாம் தேவை தானா! நான் ஒண்ணும் அந்த அளவிற்கு வொர்த் இல்லை. நான் ரொம்ப டம்மி பிஸு! இதுவரை யாரும் என்னை ப்ரோபோஸ் செய்தது இல்லை. பெரெண்ட்ஸ் அரேன்ஜ் செய்து வச்சவனும் என்னைப் பார்த்து.. இம்பரஸ் ஆகி.. அவனோட எக்ஸ் லவ்வரை மறக்கலை. என்னைப் பார்த்து.. இன்னும் அவனோட எக்ஸ் லவ்வரை மிஸ் செய்தானாம். அதனால என்னை விட்டுட்டு போயிட்டான். இந்தளவிற்கு இருக்கு என்னோட ஹிஸ்டரி! எனக்காக போய்.. இப்படி அலையறீங்களே..” என்றதும்.. பக்கென்று என்றுச் சிரித்த அர்ஜுனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. படியிறங்க போனவன், சிரித்தவாறு நின்றுவிட்டான்.
உடல் குலுங்க அர்ஜுன் சிரிக்கவும், அவனது கையில் இருந்தவள், விழுந்து விடுவோமோ என்றுப் பயத்தில் நன்றாக இருந்த ஒரு கரத்தால் இறுகப் பற்றிக் கொண்டாள்.
அர்ஜுன் சிரிப்பை நிறுத்திவிட்டு படியிறங்கியவாறு “உன்னை எனக்கு ஏன் இவ்வளவு பிடிச்சுருக்குனு லிஸ்ட் போடட்டுமா!” என்றுக் கேட்டு முறுவலித்தான்.
அதற்கு அதிரா “நீங்க எவ்வளவு பெரிய லிஸ்ட் போட்டாலும்.. இஷ்டமில்லாத பெண்ணை இன்னும் காதலிக்க சொல்லி.. கம்பேல் செய்வதில் எல்லாம் அடிப்பட்டு போயிரும்.” என்றாள்.
அர்ஜுன் “இஷ்டமில்லாம தான் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி அப்படிப் பார்த்தியா?” என்றுக் கேட்டான்.
“அந்த சின்ன தப்பை செய்து தான்.. நான் இப்படி உங்க கிட்ட மாட்டியிருக்கேன் என்பதை மறந்துட்டு செய்துட்டேன்.” என்றாள்.
அதைக் கேட்டு மேலும் சிரித்தவன், “உனக்கு ஹுயுமர் அதிகம் என்று எடுத்துக்கவா.. இல்லை. என்னை சைட் அடிச்சதைப் பற்றி.. வருத்தமா சொல்றீயேனு கோபமா எடுத்துக்குவா..” என்றுக் கேட்டான்.
அதற்கு அதிரா “நான் என்ன செய்தாலும்.. சொன்னாலும் இரசிக்கிறதுக்கு.. இப்படியொரு அடிமை கிடைக்கும் என்று நான் நினைச்சு கூடப் பார்க்கலை.” என்றுச் சிரிக்கவும், நன்றாகவே சிரித்த அர்ஜுன் “நீ என்னை வெறுப்பேற்ற என்ன பேசினாலும் நான் பெருசா எடுத்துக்க மாட்டேன். உன்னை விடவும் மாட்டேன்.” என்றான்.
அதிராவோ “அப்படியா! நான் சொன்னது சரித்தான்.. நான் சொன்னதை செய்ய ஒரு ஆள் கிடைச்சா வேண்டான்னா சொல்ல போறேன். ஒகே காதலிக்கலாம். ஆனா டிஸ்டர்ன்ஸ் கிப்அப் செய்யணும். ஒகே!” என்றாள்.
அதற்கு அர்ஜுன் “என்னோட காதலை விளையாட்டாய் நினைச்சு விளையாட்டாகவே முடிச்சுட நினைச்சுராதே அதி! அதோட பலன் விபரீதமா இருக்கும்...” என்றான்.
அவனை கோபப்பட வைத்து வெறுப்பை ஏற்ற தான்.. அதிரா இவ்வாறு பேசினாள். ஆனால் அவனோ அதைக் கண்டு கொண்டதோடு அவளை எச்சரிக்கவும், அவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அதிராவிற்கு கிலியை ஏற்படுத்தியது.
அங்கு லிப்ட் இருக்கவும், கேள்வியாக பார்த்த அதிராவிடம் “நாம இருக்கிற மாடி வரை லிப்ட் வொர்க் ஆகாது.. இங்கிருந்து தான் இருக்கு!” என்றுவிட்டு அர்ஜுன் இரண்டாம் தளத்தில் இருக்கும் லிப்டிற்குள் நுழைகையில்.. அதிலிருந்து மோசஸ் வெளியே வந்தான்
அர்ஜுன் அதிராவை கையில் தாங்கியிருப்பதை பார்த்து “இந்த அளவிற்கு உடம்பிற்கு முடியலையா! வீல் சேர் அரேன்ஜ் செய்யட்டுமா..” என்றுக் கேட்டான்.
அதற்கு அர்ஜுன் “பரவாலை! இதோ.. லிப்டில் ஏறியாச்சு.. இனி க்ரவுண்டில் இருக்கிற.. ஷெட்டுக்கு தானே போகணும். டு மினிட்ஸ் வாக் தானே பரவாலை.” என்றான்.
ஆனால் அவர்களுடன் லிப்டில் மீண்டும் ஏறிக் கொண்ட.. மோசஸ் “ஒரு பேஸன்ட்டை தூக்கிட்டு போவதை பார்க்க சொல்றீங்களா! உங்களுக்கு வீல்சேர் அரேன்ஜ் செய்வதில் பிராப்ளம் இல்லை.” என்றான்.
அதற்கு அர்ஜுன் “என் லவ்வரை நான் தூக்கிட்டு இருக்கேன். செம ஹாப்பியா இருக்கேன். இப்படியே எங்க ரூமில் இருக்க தான் ஆசை! ஆனா வேலை இருக்குனு ஃபோன் வந்ததால் போயிட்டு இருக்கேன். இதுக்கு மேலே விளக்கம் வேணுமா..” என்றுக் கேட்டு அவனை அழுத்தமாக பார்க்கவும், மோசஸ் வாயை மூடிக் கொண்டான்.
உடனே அதிரா சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “வீல்சேர் அரேன்ஜ் செய்யுங்க ப்ளீஸ்! எனக்கு கூச்சமா இருக்கு!” என்றாள்.
அந்த வார்த்தைக்காக காத்துக் கொண்டு இருந்தவன் போன்று.. “இதோ..” என்றவன், செல்பேசியில் எண்களை அழுத்தி சக்கர நாற்காலியை தொழிலாளர்கள் தங்கியிருக்கும்.. விடுதிக்கு முன் கொண்டு வரக் கூறினான்.
அர்ஜுன் அதிராவை ஒரு மாதிரி பார்க்கவும், அவள் மெல்லிய குரலில் “நான் ஒன்றும் நீங்க என்னைக் கடத்திட்டு வந்திருக்கீங்கனு சொல்லுலை. வீல்சேர் தான் கேட்டேன்.” என்றாள். அதற்குள் லிப்ட் தரைத்தளத்தில் நின்றிருக்கவும், மோசஸ்.. சக்கரநாற்காலி வந்துவிட்டதாக என்றுப் பார்க்க முதல் ஆளாக லிப்டில் இருந்து வெளியேறினான்.
ஆனால் நிதானமாக வெளியே வந்த அர்ஜுன் “நான் என்ன கூறினாலும்.. அதை அப்படியே ஒத்துக்காம தட்டிப் பேசினாலும் எனக்கு கோபம் வரும் அதிரா!” என்றான்.
அதிரா “நான் அப்படித்தான்! என் வாழ்க்கையை மற்றவங்க கையில் கொடுப்பதை விரும்ப மாட்டேன். ஆனா நீங்க.. மற்றவங்க வாழ்க்கையை காதல் என்ற பெயரில் கையில் எடுத்துயிருக்கீங்க.. நமக்குள் எப்படி ஒத்துப் போகும்!” என்றுக் கேட்டாள்.
அதற்கு அர்ஜுன் பார்வையில் மென்மையுற “ஜஸ்ட் லவ் மீ! அந்த மேஜீக் கண்டிப்பாக நடக்கும்.” என்றான்.
அவனது மென்மையான குரலில் தொலைய இருந்த மனதை அடக்கி.. சற்றுமுன் கிலியை ஏற்படுத்திய குரலை நினைவிற்கு கொண்டு வந்தாள்.
‘அந்த குரலுக்கு உடையவன் தான் உண்மையான அர்ஜுன்! அந்த அர்ஜுன் எப்பொழுதும் வேண்டுமென்றாலும் வெளிப்பட்டு தன்னைக் குதறி விடக் கூடும். எனவே இந்த பொய் முகத்தை போட்டுக் கொள்ளும் மென்மையான அர்ஜுனை நம்ப கூடாது.’ என்று மனதிற்கு கூறிக் கொண்டாள்.
அதற்குள் மோசஸ் சக்கரநாற்காலியுடன் வந்திருந்தான்.
“உட்கார வையுங்க..” என்றான்.
ஆனால் அர்ஜுனின் பிடி இறுகவும், அதிரா “சின்ன வயசில் விளையாடியது. சோடா பெட்டி எடுத்துட்டு போற சைக்கிள் பெட்டி வண்டியில் உட்காருவேன். அப்பறம் சேன்ஸே கிடைக்கலை. இப்போ உட்கார்ந்துக்கிறேனே..” என்றாள்.
அதைக் கேட்டு முறுவலுடன் அர்ஜுன் அவனை மென்மையாக சக்கரநாற்காலியில் அமர வைத்தான்.
அவர்களுக்கு எதிரே நின்றிருந்த.. மோசஸ் “ஹவ் க்யுட்!” என்றான்.
சடார் என்று நிமிர்ந்த அர்ஜுன் பார்த்த பார்வையில் மோசஸ் சற்று பயந்து தான் போனான்.
எனவே “ஸாரி! நான் அந்த மீனிங்கல சொல்லுலை. உங்க லவ்வர்..” என்கையில் நாற்காலியில் அமர்ந்திருந்த அதிரா.. மோசஸை பார்த்து அவசரமாக மறுப்பாக தலையசைத்தாள்.
மோசஸின் பார்வை தன்னை தாண்டி மீண்டும் அதிராவிடம் செல்வதைக் கண்ட அர்ஜுன் “மோசஸ்! ஒருத்தர் கிட்ட பேசும் போது.. அவங்க முகத்தை பார்த்து பேச மாட்டிங்களா..” என்று அழுத்தத்துடன் கேட்டான்.
மோசஸ் “இல்லை.. அவங்களுக்கு வீல்ஷேர் ஒகேவானு பார்த்தேன்.” என்றவாறு மீண்டும் அதிராவிடம் பார்வையை திருப்பினான். அவள் அர்ஜுனை கண்களால் சுட்டிக்காட்டி மறுப்பாக தலையசைத்தாள்.
மோசஸின் பார்வை மீண்டும் அதிராவிடம் சென்றதைக் கவனித்த.. அர்ஜுன் மோசஸை நெருங்கி “என்ன என் லவ்வரை சைட் அடிக்கறீங்களா!” என்று அவனது சட்டை காலரை சரிச் செய்தவாறு கேட்டான்.
மோசஸ் பதட்டத்துடன் “இல்லை இல்லை.. என்ன பேசறீங்க! அவங்க கொஞ்சம் டல்லா.. அதாவது உடம்பு சரியில்லை தானே அதுதான்.. அவங்களை பார்தேன்.” என்றான்.
அர்ஜுன் அவனை ஒரு மாதிரி பார்த்துவிட்டு.. சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு சென்றான்.
அவர்களுக்கு பின்னால் சென்றுக் கொண்டிருந்த மோசஸிற்கு முதலில் தோன்றிய சந்தேகம் வலுத்தது. அர்ஜுன் சாதாரணமாக வேலை தேடும் வாலிபன் அல்ல! அவனது தோரணை மட்டுமின்றி.. அவனது பேச்சு செய்கை என்று அனைத்தும் அவன் மேல்தட்டு இளைஞன் என்பதை பறைச் சாற்றியது. தற்பொழுது மோசஸிற்கு இன்னொரு சந்தேகமும் தோன்றியது. இந்த பெண் அவனது காதலி அல்லவோ! ஏனெனில் அந்த பெண்ணின் முகத்தில் காதலனை பார்த்தால் தோன்றுகிற மகிழ்ச்சி சிறிதும் இல்லை. அவளது விருப்பமின்றி அழைத்து அல்லது கடத்தி வந்திருக்கிறானோ! இந்த பெண்ணிற்கு ஏற்ப்பட்ட விபத்து வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதோ.. அதுவும் இவனே செய்து அவளை நடக்க விடாமல் செய்திருப்பானோ! அதனால் தான் அவளை இறக்கி விடவே அவ்வளவு யோசித்தானோ! அவனுக்கு தெரியாமல் அந்த பெண் தன்னிடம் எதோ சைகையில் கூறுவது புரிந்தது. அவளை காப்பாற்ற கூறுகிறாளோ என்று பல்வேறாக எண்ணியவாறு அர்ஜுனின் பின்னால் மோசஸ் சென்றான்.
இங்கே தமிழ் பேச தெரிந்த ஒருவனான மோசஸ்.. அவளது சைகை புரிந்துக் கொண்டானா என்று அதிராவிற்கு குழப்பமாக இருந்தது. அவனிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்த அதிரா.. அவன் பின்னோடு வருகிறானா என்றுத் தெரிந்துக் கொள்ள தலையைத் திருப்ப முயன்றவள், அர்ஜுனும் பின்னோடு தான்.. அதுவும் அவளது சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு தான் வருகிறான் என்பது புரியப்படவும், விரைப்புடன் நேராக அமர்ந்து கொண்டாள்.
அர்ஜுன் தன்னுடன் வந்துக் கொண்டிருந்த மோசஸிடம் “வெட்டி ஆபிசரா நீங்க.. என் பின்னாடி வந்துட்டு இருக்கீங்க!” என்று இளக்காரத்துடன் கேட்டான்.
அதைக் கேட்டு மோசஸ் “நோ நோ.. எனக்கு நிறையா வேலை இருக்கு..” என்றவன், சிறிது தயங்கிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
அவனது மனதில் ‘அதிராவை எப்படியாவது தனியாக சந்தித்து தனது சந்தேகங்களையும், அவளது சைகைக்கு அர்த்தத்தையும் கேட்க வேண்டும்.’ என்று எண்ணமிட்டவாறு சென்றான்.
சற்று தூரத்தில் தெரிந்த உடற்பயிற்சி கூடத்தை நோக்கி அமைதியாக சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு சென்ற அர்ஜுன் திடுமென “அதிரா! நீ தி டார்க் நைட் என்கிற பேட்மேன் படத்தை பார்த்திருக்கிறாயா! அதுல ஹீத் லெஜர் என்கிற ஆக்டர் ஜோக்கர் கேரக்டரில் பின்னி பெடல் எடுத்துருப்பார். அதுல ஒரு சீன் வரும்.. ஜோக்கர் கேரக்டர்.. அவனோட லைஃப்ல எப்பவும் சிரிச்சுட்டு இருக்கணும் என்கிறதுக்காக வாயிற்கு இரு பக்கமும் கத்தியால் கீறிட்டேன்னு சொல்லிட்டு ஒரு டையலாக் சொல்வான். ‘ஒய் சோ சீரிஸ்’ செமையான சீன் அது! நீ அந்த படம் பார்த்துருக்கியா?” என்றுக் கேட்டான்.
திடுமென ஏன் இப்படிப்பட்ட படக்காட்சியை பற்றிக் கேட்கிறான் என்றுப் புரியாது.. அந்த படத்தை பார்க்கவில்லை என்பது போல் தலையசைத்தாள்.
அர்ஜுன் “ஓ.. டைம் கிடைச்சா பாரு..” என்றான்.
அதன்பின் அவர்களிடம் சிறிது அமைதி நிலவியது.
அர்ஜுன் அவள் பின்புறம் குனிந்து அவளது காதருகே “அதி! ஒய் சோ சீரிஸ்!” என்றுவிட்டு கடகடவென சிரித்தான்.
அதிராவிற்கு பக்கென்று இருந்தது. தற்பொழுது அர்த்தம் புரிந்தது.
ஆசிரியர் பேசுகிறேன்:
அழகா பெயற மழை.. சில சமயம் படபடன்னு சத்தத்தோட.. பலமாக.. விடாது பெய்துட்டே இருக்கிறதை மிரட்சியோட பார்த்திருக்கீங்களா!
அதிராவோட நிலைமை இப்போ அதுதானோ!?
- 1 Forums
- 19 Topics
- 39 Posts
- 0 Online
- 28 Members