Forum

Notifications
Clear all

குடை 18

3 Posts
2 Users
3 Reactions
176 Views
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 5 months ago
Posts: 28
Topic starter  

அத்தியாயம் 18

அர்ஜுன் கூறியதைக் கேட்டு திகைத்த அதிரா தன்னைக் குனிந்துப் பார்த்தாள். நீல வண்ணத்தில் முழு நீல கவுனை அணிந்திருந்தாள். மீண்டும் சுற்றிலும் பார்த்தாள். அங்கு செவிலி பெண் எவரும் இல்லை. அப்படியென்றால்.. தோன்றிய சந்தேகத்தை அவனிடமே கேட்டாள்.

 

“என்னை இங்கே கடத்திட்டு வந்து.. நீங்க தான் பார்த்துக்கிட்டிங்களா!” என்றுவிட்டு அடுத்ததைக் கூற தயங்கியவள், பின் கடகடவென “எனக்கு ட்ரஸ் செய்து விடுவதில் இருந்து எல்லாத்தையும் செய்து விட்டிங்களா!” என்றுக் கேட்டு முடித்தாள்.

 

அதற்கு அர்ஜுன் “ஆமா! வேற யார் செய்வா! அதுதான் சொன்னேனே.. ஏர்போர்ட்டில் இருந்து உன்னை மயக்கத்திலேயே கடத்திட்டு இங்கே வந்துட்டேன். நீ இங்கே வந்து மூன்று நாட்கள் ஆகுது. இனி நாம் இங்கே தான் இருக்க போகிறோம். அன்ட் ஹெப்பிலி லிவ் எவர் ஆஃப்டர் மாதிரி! குழந்தை குட்டி பெத்துக்கிட்டு.. அவங்களை படிக்க வச்சு கல்யாணம் பண்ணி கொடுத்து.. இங்கேயே இருந்துக்கலாம்.” என்றதும்.. அதிரா ஓங்கிய குரலில் அழ ஆரம்பித்தாள்.

 

நமட்டுச் சிரிப்புடன் கூறிக் கொண்டு வந்தவன், அதிரா அழவும்.. பதட்டத்துடன் அவளருகே வந்தவன் “ஹெ! ஹெ! இங்கே பார்..” என்றான். ஆனால் அவள் தொடர்ந்து அழவும்.. “சரி! சரி! அழாதே! பொய் தான் சொன்னேன்.” என்றவன், அவளது இரு கன்னங்களையும் பற்றி தன் முகத்தைப் பார்க்க வைத்து “லிசன்! இத்தனை நாட்கள் நீ ஹாஸ்பெட்டல இருந்தே! இப்போ தான் ரூமிற்கு வந்திருக்கே போதுமா! இத்தனை நாட்கள் அவங்க தான் பார்த்துக்கிட்டாங்க! அதே மாதிரி நாம் இங்கே மாலத்தீவில் இப்படியே நம்ம லைஃப்பை ஓட்ட மாட்டோம். சும்மா பொய் சொன்னேன்.” என்றான்.

 

அதிரா அழுகையை நிறுத்திவிட்டு மூக்கை உறிஞ்சியவாறு பார்த்தாள். அவளது நுனி மூக்கில் மெல்லிய முத்தம் ஒன்றை பதித்துவிட்டு “மத்தது எல்லாம் உண்மை தான்! நாம் குழந்தை குட்டி பெத்துக்கிட்டு.. அவங்களுக்கு கல்யாணம் செய்து வைத்து.. பார்க்க போகிறோம். இந்த ட்ரஸ் பிடிக்கலை. நான் வேற மாத்தி விட போவதும் உண்மை..” என்று அவளது ஆடையில் கை வைக்கவும், அவள் மீண்டும் அலறியவாறு தனது கையால் தடுக்க முயன்றவள், அது கொடுத்த வலியில் கத்தினாள். 

 

மெல்ல இறங்கலாம் என்றுப் பார்த்தால் கால்களை‌ அவளால் அசைக்க கூட முடியவில்லை. கையில் தானே அடிப்பட்டிருக்கு என்றுக் கூறினான். மற்றபடி வெறும் தசைப்பிடிப்பு தானே.. பின்பு ஏன் கால்களை‌ அசைக்க முடியவில்லை என்று அதிர்ந்தாள்.

 

அர்ஜுன் “ஷ்ஷ்! இந்த கையை அசைக்காதேனு சொன்னேன் தானே..” என்றுக் கடிந்தான். அப்பொழுது அவனது செல்பேசி அழைக்கவும்.. எடுத்துப் பேசினான்.

 

அந்த பக்கம் என்ன சொன்னார்களோ! 

 

“டுவன்டி மினிட்ஸ்ல நான் அங்கே இருப்பேன்.” என்று‌ அழைப்பைத் துண்டித்தான்.

 

பின் அதிராவிடம் “சீக்கிரம் ட்ரஸ் மாத்து அதிரா! வேலைக்கு போகணும்.” என்று அவளிடம் சிறு‌ பையை‌ நீட்டினான்.

 

அர்ஜுன் “ஈஸியா போடர மாதிரி புல் மேக்ஸி தான்! நீயே தான் மாத்திக்க போறே! நான் சின்ன ஹெல்ப் தான் செய்யப் போறேன்.” என்றவன், அவளது பின்னந்தலையில் கையை வைத்து இழுத்து தன் மார்பில் சாய்த்தவன், அவனது பின் முதுகில் இருந்த இரு நாடா முடிச்சுகளை இழுத்து அவிழ்த்து விட்டான்.

 

உடனே விருக்கென்று அவனிடம் இருந்து விலகிய அதிரா படுக்கையில் நன்றாக சாய்ந்து படுத்துக் கொண்டு.. அவனை மிரட்சியுடன் பார்த்தாள். 

 

அதற்கு அர்ஜுன் “சின்ன ஹெல்ப் அதி!” என்றுச் சிரித்தான்.

 

அதிரா இன்னும் பயம் விலகாமல் “அம்மா! அம்மா! அம்மா, அப்பா கிட்ட போகணும். அவங்க என்னைத் தேடுவாங்க! ப்ளீஸ் அர்ஜுன்.. இந்த மாதிரி எல்லாம் வேண்டாம். நீ ஒண்ணும் வில்லன் இல்லை. கொஞ்சம் நல்லவன் தானே! மூணு நாளா என்னை இங்கே வச்சுருக்கியே அவங்க பயந்துக்க மாட்டாங்களா!” என்றாள்.

 

அப்பொழுது அர்ஜுனின் கையில் இருந்த செல்பேசி மீண்டும் ஒலிக்கவும், யார் என்றுப் பார்த்தவன் “நீ கேட்டதிற்கு பதில்..” என்றுவிட்டு அழைப்பை ஏற்று.. ஸ்பீக்கரில் போட்டான்.

 

“அர்ஜு! அதிரா இன்னைக்கு ரூமிற்கு கூட்டிட்டு வந்திருவாங்க! பிரஷர், ஆக்ஸிஸன் லெவல் சரியாகிடுச்சுனு சொன்னீயே! வந்துட்டாளா?” என்றுக் கேட்டது அகிலாவின் குரல் தான்!

 

உடனே அதிரா “அகிலா! அகிலா! எங்கே இருக்கே! என்னை காப்பாத்துடி..” என்றாள்.

 

அகிலா “அதி! ஏன் கத்தறே! உனக்கு கான்ஸியஸ் வந்துச்சா! தேங்க் காட்!” என்றாள்.

 

ஆனால் அதிரா “என்னையும் கூட்டிட்டு போக சொன்னேன் தானே! நீயும் உன் அண்ணன் கூட சேர்ந்துட்டு.. அவங்க கிட்ட என்னை விட்டுட்டு போயிட்டே பார்த்தியா! ப்ளீஸ்டி எப்படியாவது வந்து என்னைக் கூட்டிட்டு போடி! உன் அண்ணன் என்ன செய்தான்னு தெரியலை. எனக்கு கையையும் காலையும் அசைக்க முடியலை.” என்று அழுங்குரலில் கேட்டாள்.

 

அதைக் கேட்டு அர்ஜுன் குபீர் என்றுச் சிரித்துவிட அகிலா “ஹெ! நீ பைத்தியம் மாதிரி ஓடிப் போய்.. வண்டில முட்டி விழுந்துட்டு.. என் அண்ணன் மேலே பழியை போடறீயா! அங்கே என்ன நடந்ததுனு தெரியாம பேசாதே! ஆக்சுவலா இப்போ நீங்க இரண்டு பேரும் எங்கே இருக்கீங்கனு எனக்கு தெரியாது. இரண்டு நாளைக்கு முன்னாடி தெரியாத நம்பரில் இருந்து ஃபோன் வந்துச்சு! அர்ஜுன் தான் பேசினான். நாங்க சேஃப்பா இருக்கோம். அதிரா இன்னும் மயக்கத்தில் இருக்கிறானு சொல்லிட்டு வச்சுட்டான். அவனே பெரிய சிக்கலில் மாட்டிட்டு இருக்கான். அதுல நீயும் போய் சிக்கிட்டே.. அதை வேணுன்னா.. ஒத்துக்கிறேன். ப்ளீஸ்டி.. அவனைப் புரிஞ்சுக்கோ! அப்படியும் அவன் உனக்கு செட் ஆக மாட்டான்னு தோன்றினா! அதை நயமா சொல்லு.. அவனே கொண்டு வந்து விடுவான். அதை விட்டுட்டு அவனைப் பிடிக்கலைனு சொல்லி.. அவனோட வெறியை ஏத்தாதே! எனக்கு தெரிந்த வரை.. அர்ஜுக்கு பிடிவாதம் ரொம்ப அதிகம்!” என்றாள்.

 

அதைக் கேட்ட அதிரா கப்பென்று வாயை மூடிக் கொண்டாள். மெல்ல அர்ஜுனை நிமிர்ந்துப் பார்த்தாள். அவன் அவளைத் தான் குறுஞ்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அகிலா கூறுவது சரித் தானோ! தான் அவனுக்கு உகந்தவள் அல்ல என்பதை அவன் உணர்ந்துவிட்டால்.. தன்னை விட்டு விடுவானோ! ஆனால் அதற்குள்? அதுவரை? இங்கு தான் இருக்க வேண்டுமா! என் மனம் மாறிவிடும் என்று நினைக்கிறானா! அது மாறாது என்று அவனுக்கு ஏன் தெரியவில்லை என்று யோசித்தவளுக்கு தனது பெற்றோர் பற்றிய நினைவு வரவும், அகிலாவிடம் “அகி! அம்மா அப்பா என்னைக் கேட்கலையா! உன் கூடத் தானே அனுப்பினாங்க! அவங்க என்னைத் தேடுவாங்களே..” என்று பதட்டத்துடன் கேட்டாள்.

 

அதற்கு அகிலா சிறிது தயங்கிவிட்டு “பொய் தான் சொன்னேன். உனக்கு இங்கே வேலை கிடைச்சுருச்சு! நல்ல சம்பளம் தராங்க! ஓனர் உனக்கு நல்ல பழக்கமாகிட்டாங்கனு சொன்னேன்.” என்றாள்.

 

அதிரா “என்ன!” என்றுத் திகைக்கவும், அகிலா “பின்னே என்ன சொல்ல சொல்றே! அர்ஜு உண்மையை சொல்ல சொன்னான். அதைச் சொல்லட்டுமா!” என்றுக் கேட்டாள்.

 

அதைக் கேட்டு மேலும் அதிரா அதிர்ந்தவள், “வேண்டாம்! வேண்டாம்!” என்று அலறினாள். பின் “என்னைச் சுற்றி என்ன தான் நடக்குது அகிலா? எதுவுமே என் கையில் இல்லையா! என் வாழ்க்கையில் எல்லாரும் புகுந்துட்டு அவங்கவங்க இஷ்டப்படி.. நடத்திட்டு இருக்கீங்க..” என்றுக் கேட்டவளின் நா தழுதழுத்தது.

 

அகிலா “என் அண்ணனோட காதலாட்டம் தான் நடந்துட்டு இருக்கு அதிரா! அதை இரசிக்க ஆரம்பிச்சுருனு தான் முதலிலேயே சொன்னேனே! இரசிக்க ஆரம்பிச்சுட்டா.. உனக்கு பயம் தெரியாது அதிரா! சரி நான் காலேஜ்ஜில் இருக்கேன். நான் கிளாஸிற்கு போகணும். நீ உன் பெரெண்ட்ஸ்க்கு ஃபோன் போட்டு.. அவங்க சந்தோஷப்படற மாதிரி பேசு.. உன் பிரச்சினையை ஸாரி ஐ மீன்.. உன் காதலை நீ பார்த்துக்கோ..” என்று பெரிய மனுஷியாக அறிவுரை கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

 

ஸ்பீக்கரில் போட்டு.. அகிலா பேசிக் கொண்டிருந்ததை கேட்டவளின் கவனம் மீண்டும் அர்ஜுனின் பக்கம் திரும்பியது. அவள் இருக்கும் நிலைமையில் அழுது ஆர்ப்பாட்டம் செய்வது பயனில்லை என்றுத் தெரிந்து போனது. மேலும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால்.. அவளது உடலும் மனமும் தான் பலவீனமாகும் என்றுப் புத்திக்கு உறைத்தது. இப்போதைக்கு அவளுக்கு இருக்கும் ஒரே வழி.. அகிலா கூறியது போல் அவனது மனம் மாறுவது தான்! என் மனம் மாறாது.. என்று அவன் கூறியதை அவள் நம்பவில்லை. இப்படி அதிரடியானவனால்.. பொறுமையாக இருக்க முடியாது என்பது நிச்சயம்! எனவே மெல்ல அவனிடமே “என் மேலே இருக்கிற உங்க காதல் மாறிட்டா என்னை விட்டுருவீங்களா?” என்றுக் கேட்டாள்.

 

ஆனால் அவனோ “டைமாச்சு அதி! வேலைக்கு போகணும். நீயும் அங்கே வா! மூணு நாளா.. நீ மட்டுமில்ல உன்னோட செல்ஸ், பிளட், வீன்ஸ் என்று‌ எல்லாமே தூங்கிருச்சு! அதையெல்லாம் தட்டி‌ எழுப்பணும். அதனால தான் உன் காலை அசைக்க முடியலை. நீயும்‌ என் கூட வந்தா.. சின்ன எக்ஸர்சைஸ் செய்தால் சரியாகிடும். சீக்கிரம் ட்ரஸ் சேன்ஜ் செய்..” என்றான்.

 

அதிரா “என்ன வேலை? இது என்ன இடம்?” என்றுப் புருவத்தை சுருக்கியவாறு கேட்டாள்.

 

அவளது சுருங்கிய புருவத்தை மெதுவாக நீவி விட்டவன், “இது ஏஜ் பீப்பிளுக்கான டுரிஸ்ட் ஹோம்! நான் இங்கே பிஸிக்கல் டிரைனரா வொர்க்கிற்கு சேர்ந்திருக்கேன்.” என்றான்.

 

அர்ஜுன் புருவத்தை வருடவும், தலையை அசைத்து.. அவனது வருடலில் இருந்து.. விடுவித்துவிட்டு.. அவனை அதிசயமாக பார்த்தாள். அவனையும் அவளையும் இந்தியாவிற்கு அனுப்ப அவனது அப்பா செய்த ஏற்பாட்டில் இருந்து தப்பித்து.. அவளை கடத்தி வந்திருக்கிறேன்.. என்ற வார்த்தைகளில்.. பல அர்த்தங்களும் பல விளைவுகளும் இருக்கிறது என்பது தற்பொழுது விளங்கியது.

 

எனவே அவளது வாய் துடுக்கு தானே வர “உங்க அப்பா.. இங்கே நீங்க மறைஞ்சுட்டு இருக்கிறதைக் கண்டுப்பிடிச்சா.. என்னை உங்க கிட்ட இருந்து பிரிச்சுருவாங்களா..” என்றுக் கேட்டவள், பெரும்பாடு பட்டு குரலில் ஆர்வம் காட்டாதிருந்தாள். 

 

ஆனால் அதைக் கண்டுக் கொண்ட அர்ஜுன் “உன்னாலேயே என்கிட்ட இருந்து போக முடியாது போது.. அவரால் மட்டும் உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க முடியுமா! என் மனம் மாறும் வரை உன்னால் என்னை விட்டுப் போக முடியாது.” என்று முறுவலித்தான். அகிலா சற்றுமுன் கூறிய பிடிவாதம் அதிகம் என்ற வார்த்தைகள் அவளது செவியில் அழுத்தமாக ஒலித்தது.

 

அர்ஜுன் தொடர்ந்து “உன் பெரெண்ட்ஸ் கிட்ட பேசறீயா..” என்றுக் கேட்டான்.

 

அதற்கு அதிரா “எனக்கு பொய் பேச வராது. பொய் பேசினா.. வாய் வார்த்தை தடுமாறும்.. அவங்க கண்டுப்பிடிச்சுருவாங்க..” என்றுச் சிறுக் குரலில் கூறினாள்.

 

அதைக் கேட்டவனின் முகத்தில் யோசனை பரவியது. 

 

பின் “சரி உண்மை ஆக்கிரலாம். நீ சீக்கிரம் எழுந்து ட்ரஸ் செய்! எக்ஸர்ஸைஸ் செய்யணும்!” என்றான்.

 

அவன் நின்றுக் கொண்டு பேசிக் கொண்டிருக்க.. தான் படுக்கையில் படுத்திருப்பது ஒரு மாதிரி இருக்கவும், எழ முயன்றவளுக்கு ஏன் படுக்கையில் சாய்ந்தாள்.. என்பது நினைவிற்கு வரவும், நலிந்த குரலில் “சரி.. உங்க மனம்‌ மாறுகிற வரை நான் இங்கே இருக்கேன். நீங்களும் அகிலாவும் சொன்ன மாதிரி.. இந்த பிரச்சினை என்னில் இருந்து தான் தொடங்குச்சு! நானே முடிச்சு வைக்கிறேன். ஆனா அதுவரை என்கிட்ட தப்பா.. நடந்துக்க மாட்டிங்க தானே!” என்றுக் கேட்டாள்.

 

இம்முறையும்‌ அவளது கேள்விக்கு பதிலளிக்காமல் அர்ஜுன் “டைம் ஆச்சுன்னு சொன்னேனே அதி! நீயே ட்ரஸ் சேன்ஜ் செய்வது என்றால்.. கஷ்டமா இருக்கும், நேரமும் ஆகும். அதனால நானே‌‌..” என்று நெருங்கவும், அதிரா அந்த பையை ஒரு கையால் இறுக மார்பருகே அழுந்த பற்றிக் கொண்டு உடலை சுருக்கி கொண்டாள்.

 

அவளது செய்கை கொண்டு முறுவலித்துவிட்டு “கதவை சும்மா சாத்திட்டு வெளியே நிற்கிறேன்.” என்றுவிட்டு கூறியபடி‌ செய்தான்.

 

ஒரு கரம் கொண்டு மருத்துவமனை ஆடையை கலைத்துவிட்டு.. அர்ஜுன் கொடுத்த உடையை அணிவித்து கொண்டாள். ஆனால் பின் ஜீப்பை அவளால் ஒரு கரத்தால் போட முடியவில்லை. அவன் கூறியது நினைவு வந்தாலும்.. பிடிவாதமாக போட முயன்றாள். அவன் வந்து தொடும் வரை வைத்துக் கொள்ள கூடாது என்று நினைத்தாள்.

 

ஆனால் சிறிது நேரத்தில்.. அர்ஜுன் “இன்னும் டு மினிட்ஸில் நான் உள்ளே‌ வருவேன்.” என்று அறிவித்தவன், சொன்னது போல்.. அடுத்த இரண்டாவது நிமிடத்தில் உள்ளே நுழைந்தான். அங்கு ஒரு கரத்தால் அதிரா ஜீப் போட முயன்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து.. முன்பு போல் அவளை தனது மார்பில் சாய்ந்தவன், ஜீப்பை இழுத்து விட்டான். அத்தோடு அமர்ந்துக் கொண்டு போட்டதால்.. தொடையளவு இருந்த மேக்ஸியை கணுக்கால் வரை இழுத்துவிட்டான். அப்பொழுதே அதிரா அதைக் கவனித்தாள். ஜீப் போடுவதில் மும்மரமாக இருந்தவள், இதைக் கவனிக்கவில்லை. அவன் இழுத்து விட்டதும் விதிர்த்து போனவளாய் அவனைப் பார்த்தாள். அவனது முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லை. ஒருவேளை அடக்கியிருந்தனோ! ஆனால் அதிரா நிம்மதியாக உணர்ந்தாள்.

 

அவளது கையில் மாதுளைச் சாறு அடங்கிய டம்ளரை வைக்கவும், அதிரா கடகடவென குடித்தாள். 

 

அர்ஜுன் “உனக்கு இன்னைக்கு மட்டும்.. கொஞ்சம் லிக்வீடாக தான் கொடுக்க சொல்லியிருக்காங்க.. நாளையில் இருந்து சாலிடா சாப்பிட்டுக்குவியாம்.” என்று அவளுக்கு கூடுதல் தகவலை கூறினான்.

 

பின் அர்ஜுன் போகலாமா எ்னறுக் கேட்டுவிட்டு “ரெஸ்ட் ரூம் போகணுமா?” என்றுக் கேட்கவும், அதிரா பலமாக தலையை ஆட்டினாள். 

 

அர்ஜுன் “என்கிட்ட இந்த மாதிரி விசயத்தில் தயக்கமும் கூச்சமும் இருக்க கூடாது ஒகேவா..” என்றுவிட்டு படுக்கையில் இருந்தவளை கரங்களால் அள்ள முற்பட்டான். உடனே அவனது மார்பில் நன்றாக இருந்த கரம் கொண்டு தடுத்தவள், “வீல் சேர் இல்லையா..” என்றுக் கேட்டாள்.

 

அதற்கு மறுப்பாக தலையசைத்தவன், “இருக்கு! நான் கொண்டு வர வேண்டான்னு சொல்லிட்டேன்.” என்றுக் குறுஞ்சிரிப்புடன் கூறிவிட்டு அவளை கைகளில் அள்ளி தாங்கிக் கொண்டான். 

 

அதிரா வாயடைத்து போனாள்.

 

அதிராவை கையில் ஏந்திக் கொண்டு.. அர்ஜுன் அறையை விட்டு வெளியே வருகையில்.. மொட்டை மாடியில் அவர்களது அறை அமைந்திருந்ததால் மேலும் நேரம் பகல் பதினொரு மணி ஆகிவிட்டதால் சூரியனின் ஒளி சுளீர் என்று அடித்தது. மூன்று நாட்கள்.. வெயில் படாது இருந்ததால்.. அதிராவிற்கு கண்கள் கூசியது. எனவே இமைகளை மூடிக் கொண்டாள். 

 

சில கணங்களில் மூடிய இமைகளில்.. வெயில் குறைந்ததையும் நிழல் படிந்ததையும் உணர்ந்த அதிரா மெல்ல இமைகளைத் திறந்துப் பார்த்தவள், திகைத்தாள். ஏனெனில் சுள்ளென்ற வெயிலை மேகம் தடுக்கவில்லை. அர்ஜுனின் தலை தடுத்திருந்தது. முன்பு சூரியன் வெயில் அடிக்கும் திசைக்கு நேராக நின்றுக் கொண்டிருந்தவன், தற்பொழுது.. திரும்பி நின்றிருந்தான். அதனால் அதிராவின் முகத்தில் வெயில் படாமல் அவனது நிழல் அவள் மேல் விழுவதற்காக அவ்வாறு நின்றிருக்கிறான்.

 

கண்ணிமைக்காமல் அவள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே.. அவர்களுக்கு பின்னால் இருந்த படிக்கட்டிற்கு செல்ல.. மெதுவாக பின்னால் எட்டுக்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

 

அவனது கரங்களில் அவள் வானத்தை நோக்கி படர்ந்திருக்க.. ஒரு பக்கம் முழுவதும் இருந்த கடலலையின் ஓசை அவளது செவியில் நிறைந்திருக்க.. கடற்காற்று அவளது மேனியில் தவழ்ந்து.. அவள் அணிந்திருந்த மேக்ஸில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்க.. பின்னால் நகரும் அவனது முகத்தைப் பார்த்தவாறு இருந்தவளுக்கு வானத்தில் மிதப்பது போன்று இருந்தது.

 

—---------------------------------------

 

மாலதியினால் கார்த்திகேயனை நெருங்க கூட முடியவில்லை. சற்றுமுன்.. கார்த்திகேயனின் நண்பர் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அதுபோல் என்னேரமும் யாராவது வந்தால் நன்றாக இருக்கும் என்றுத் தோன்றியது. அந்த நேரத்தில் மட்டும் தான் சிரித்தவாறு பேசினார். பையனுக்கு சென்னையில் முக்கியமான வேலை என்றும் பொண்ணுக்கு.. செமஸ்டர் எக்ஸாம் என்றும் அதனால் சென்றுவிட்டார்கள்.. என்றுக் கூறி சமாளித்தார். மற்ற நேரங்களில் எரிமலை போல் கொதித்துக் கொண்டே இருந்தார். அவர் நினைத்து நடக்காததால் வந்த கோபம் இது! பொய் சொல்லி வந்தவர்களை சமாளிக்க வேண்டியதால் வந்த கோபம் இது! 

 

அர்ஜுனின் மேல் பொய் புகார் அளித்து.. இந்தியாவிற்கு அனுப்பிவிட்டு.. அங்கு அர்ஜுனின் பெயர் வெளிவராமல் பார்த்துக் கொண்டு.. அவர் ஏற்பாடு செய்து வைத்த ஆட்கள் மூலம் விசாரணை என்று பத்து நாட்கள் அவனை அங்கேயே கட்டிப் போடப் பார்த்தார். அதற்குள்.. இங்கு அவரது தொழில்முறை ஒப்பந்தங்களை முடித்து கொள்ள எண்ணினார். அது நடக்கவில்லை.

 

அதே போல்.. அர்ஜுன் காதலிப்பதாக உளறிக் கொண்டிருக்கும் பெண்ணையும்.. இந்தியாவிற்கு அனுப்பி வைத்து.. அவளது குடும்பத்தினரை மிரட்டி.. இந்தியாவின் வேறு எல்லைக்கு மாற்றி விட முடிவு செய்திருந்தார். அதுவும் நடக்கவில்லை.

 

அர்ஜுன் அந்த பெண்ணுடன் விமானநிலையத்தில் இருந்து தப்பித்து.. இந்த மாலத்தீவிலேயே தான் மறைந்து இருக்கிறான். மூன்று நாட்கள் ஆகியும்.. அவனைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

 

அவரின் கோபம்.. முழுவதும் அதிராவின் மேல் திரும்பியிருந்தது. அவர்கள் ஏற்பாடு செய்த விருந்தின் நடுவில் இந்த பெண் விபத்தில் மாட்டிக் கொண்ட போதே யார் என்ன எப்படி என்ற சலசலப்பு ஏற்பட்டது. 

 

“அகிலாவிற்கு உதவியாக வந்த பெண்.. திருடிவிட்டு தப்பித்து ஓடுகையில் விபத்தில் மாட்டிக் கொண்டு விட்டாள் என்றுச் சமாளித்தார். தற்பொழுது.. அர்ஜுன் அதிராவையும் சேர்த்து தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றிருப்பது கண்டு.. அவள் மீது இன்னும் ஆத்திரம் மிக.. அவளை வைத்தே.. அர்ஜுனின் பெயர் வெளியே வராது பிடிக்க நினைத்தார். எப்படியும் அந்த பெண்.. அர்ஜுனிடம் இருந்து தப்பித்து வருவாள். அவள் மீது இவர் சுமத்திய திருட்டுப்பட்டத்தை போக்க.. அர்ஜுன் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுப்பாள் என்று நம்பினார். அர்ஜுன் இருக்கும் இடத்தை அதிரா காட்டிக் கொடுத்ததும்.. அவளின் மீது சுமத்தப்பட்ட புகாரின்படி சிறையில் அடைக்கப்படுவாள் என்று நினைத்தார். விரைவில் அவர்களை கண்டுப்பிடித்து விடலாம் என்று நினைத்திருக்க.. இங்கு இரண்டு நாட்கள் ஆகியும்.. அவர்களை கண்டுப்பிடிக்க முடியாது அவரது கோபத்தை அதிகப்படுத்தியிருந்தது.

ஆசிரியர் பேசுகிறேன்

 

சுள்ளென்று அடிச்சுட்டு இருந்த வெயிலை.. இந்த அடைமழை மேகம் மறைச்சுருச்சு.. அதே மாதிரி.. கார்த்திகேயனிடம் இருந்து.. அர்ஜுன் அதிராவை காப்பானா!

 


   
Quote
(@vidhushini)
Active Member
Joined: 5 months ago
Posts: 10
 

Right advise at right time form Akila. Relax Adhira. Your Arjun will take care of everything.


   
rajianbu reacted
ReplyQuote
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 5 months ago
Posts: 28
Topic starter  

@vidhushini அது அதிராவிற்கு புரியணுமே.. வேற மாதிரியில்ல புரிஞ்சுக்கிட்டா! அவனே அவளை வெறுக்க வைக்க ட்ரை செய்கிறாள்.


   
ReplyQuote
Share: