Forum

Notifications
Clear all

குடை 11

1 Posts
1 Users
2 Reactions
309 Views
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 5 months ago
Posts: 26
Topic starter  

அத்தியாயம் 11

அதிரா சென்ற பிறகும்.. முகத்தில் புன்னகையுடன் தனது அறையில்.. வலம் வந்த அர்ஜுனுக்கு.. எந்நேரமும் அதிரா அவனது அருகிலேயே இருக்க வேண்டும் போல் தோன்றியது. அவனை நினைத்தே அவனுக்கு வியப்பாக இருந்தது. தான் காதலிக்கிறேனா.. என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் இது வரை கடந்து வந்ததையும்.. காதல் என்ற பெயரில் கூத்தடிப்பவர்களைப் பார்த்த பின்.. தனக்கு காதல் என்ற ஒன்று நிச்சயம் வர வாய்ப்பில்லை என்று நினைத்தான்.

 

கல்லூரியில் படிக்கும் பொழுது.. அந்த வயத்துக்குரிய ஈர்ப்பு ஒரு பெண்ணிடம் தோன்றியது. அது காதலா என்று அவன் அறிவதற்குள்.. தீபக் பொறாமையில் அதைக் கெடுத்துவிட்டான். தான் அவ்வாறு படம் எடுக்கவில்லை என்று அவன் எவ்வளவு கூறியும் அந்த பெண் கேட்காதது போகவும், தன் மேல் நம்பிக்கையில்லாதவள் தேவையில்லை என்று வந்துவிட்டான். பின் அவனைப் பார்த்தும் அவனது அந்தஸ்த்தை பார்த்தும்.. மயங்கிய பெண்கள் அவன் பின்னால் சுற்றினர். பெரும்பாலும் ஒதுங்குபவன்.. சில நேரம்.. அவர்களை சீண்டவும்.. அவர்களைக் கொண்டு.. தனது பெற்றோரை சீண்டவும், அந்த பெண்களுடன் அளவுடன் எல்லை மீறாமல் பழகுவான். அவன் எதிர்பார்த்தது போல்.. அந்த பெண்கள்.. அவனின் மேல் பைத்தியமான வேளையில் அவர்களை கழற்றி விடுவான்.. அல்லது அவனது வெறுப்பையும் ஒதுக்கத்தையும் கண்டு.. அந்த பெண்களே கழன்று விடுவார்கள். அந்த பெண்கள் அடுத்த ஆண்களை தேடி சென்றுவிட்டார்களே தவிர.. அவனை நினைத்து ஏங்கிக் கொண்டு இருக்கவில்லை. இதிலேயே அவர்களின் காதலின் இலட்சணம் தெரிந்துவிடவும், இளக்காரத்துடன் அதைக் கடந்து விடுவான். இவ்வாறு தான் ரிஷிதாவும் பழக்கம் ஆனாள். ரிஷிதாவும் அவனை ஆழ்ந்து காதலிக்கவில்லை. பெருமைக்காக அவனுடன் சுற்றுகிறாள். எப்படியும் தனது விருப்பமின்மையை இங்கு கூறலாம் என்று நினைத்திருந்தான். அவனைப் பொருத்தவரை.. இம்மாதிரியான விசயங்கள் தேவையற்றது.. அவனுக்கு கிடைக்கும் தொந்திரவுகள் என்று நினைத்திருந்ததால்.. அதிராவிடம் இதைக் கூற வேண்டும் என்றுத் தோன்றவில்லை. அதனால் அவளது நம்பிக்கையை இழக்க போகிறோம் என்றும் அவன் எதிர்பார்க்கவில்லை.

 

அர்ஜுனோ.. முழுதாக விழுந்த காதல் உணர்வை அணு அணுவாக இரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தான்.

 

முதன் முதலில் அதிராவை பார்த்தது அர்ஜுனுக்கு நினைவிற்கு வந்தது. மொட்டை மாடியில் நீச்சல் அடித்துவிட்டு.. வந்த பொழுது.. யாரோ ஒரு பெண் நின்றிருப்பதை பார்த்தான். அவன் வருவது தெரிந்து.. அந்த பெண் விலகவும், சுவாரசியத்துடன் பின்னால் சென்றவன், அவள் அகிலாவின் தோழி என்றுத் தெரிந்துக் கொண்டான். அவள் இந்த இடத்திற்கு சற்று பொருந்தாதவள் என்று அவனுக்கு தெரிந்தது. 

 

அகிலா தீபக்குடன் சுற்றுவது தெரிந்து.. அதைக் கண்டித்து.. அகிலாவை இங்கிருந்து அனுப்ப முடிவு செய்திருந்தான். அவள் வந்ததே தவறு என்று நினைத்திருந்தவன், அவள் தனது தோழியையும் அழைத்து வந்திருப்பது எரிச்சலை தந்தது. எனவே இருவரையும் இங்கிருந்து அனுப்ப நினைத்தான். 

 

தன்னைப் பார்த்தாலே மருண்டு விழிக்கும் அதிராவிடம் சீண்டி‌ விளையாடுவது அர்ஜுனுக்கு பிடித்திருந்தது. தன்னைப் பார்த்து அவளுக்கு பயம் என்று நினைத்திருந்தான். ஆனால் அது பயமில்லை. தன் மேல் அவளுக்கு இருந்த காதலை மறைக்கும் முயற்சி என்றுத் தெரிந்துக் கொண்ட பொழுது இனிமையாக அதிர்ந்தான். அந்த புது உணர்வே அவள்‌புறம் அவனை ஈர்த்தது. இதோ முழுமையாக அவளிடம் வந்துவிட்டான். அந்த புது அனுபவம் தந்த புத்துணர்வில் குதுகலத்துடன் வலம் வந்தான்.

 

மாலையில் விருந்திற்கு தயாராகி வெளியே வந்த அர்ஜுனுக்கு அதிராவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. தான் அவளை மீண்டும் சந்தித்தால்.. தனது பெற்றோருக்கு அவள் மீது அதிருப்தி எற்படும் என்று அதுவரை அவளைப் பார்க்க துடித்த இதயத்தை கட்டுப்படுத்தி வைத்திருந்தான். ஆனால் அவனது கட்டுப்பாட்டிற்கு ஆயுள் மிக குறைவாக இருந்தது.

 

அவளது அறைக்கு சென்று பார்த்துவிடலாமா என்று நினைக்கையில்.. அகிலா தயாராகி அவளது அறையில் இருந்து வெளியே வந்தாள்.

 

அதிராவின் அறை கதவை பார்த்தவாறு “அதிரா! அவ ரூமிலா இருக்கா?” என்றுக் கேட்டான்.

 

அதற்கு அகிலா அர்ஜுனின் பார்வையை மறைத்தவாறு நின்று கையை பின்னால் கட்டிக் கொண்டு “நான் அவளை ரூம் விட்டு வெளியே வர வேண்டான்னு சொல்லிட்டேன்.” என்று அறிவித்தாள்.

 

அர்ஜுன் “தட்ஸ் குட்..” என்று‌ முறுவலுடன் கூறிவிட்டு படிக்கட்டை நோக்கி திரும்பினான்.

 

அகிலா தொடர்ந்து “நாளைக்கு நாங்க இந்தியா கிளம்பிருவோம்.” என்கவும், அர்ஜுன் தனது நடையை நிறுத்தாது “தட்ஸ் ஈவன் மோர் பெட்டர்..” என்றவாறு படியிறங்கினான். அவனது பின்னாலேயே அகிலா வரவும், தனது வேகத்தை குறைத்தான். 

 

அகிலா அருகில் வந்ததும் அர்ஜுன் “அதிரா எந்த ஹோட்டலில் வொர்க் செய்கிறாள்?” என்றுக் கேட்டான்.

 

அதைக் கேட்டு அதிர்ந்த அகிலா “என்னது வொர்க் செய்யறாளாவா! அவ என் காலேஜ் பிரெண்ட்!” என்றாள்.

 

அதற்கு முறுவலித்தவாறு திரும்பி அகிலாவை பார்த்த அர்ஜுன் “நேத்து ஆஃப் நைட் புல்லா அவ என் கூட இருந்தா என்கிறதை மறந்துடாதே! இந்த ஹெர்கட் கூட அவ தான் செய்துவிட்டா!” என்றான்.

 

அகிலாவிற்கு மீண்டும் அந்த சந்தேகம் தோன்றியது. அதிராவிற்கும் அர்ஜுனிற்கும்.. சீண்டி விளையாடுவதை தவிர்த்து.. மேலும் என்னமோ இருக்கிறது. அது கெடுதலா அல்லது நல்லதா என்று அவளால் முடிவுக்கு வர முடியவில்லை. எதுவாக இருந்தாலும்.. இருவரும் தன்னிடம் இருந்து மறைப்பது அவளுக்கு கோபத்தை தரவும், “ம்ம்! அவ ஒரு ப்யுட்டிஷியன் சொன்னவ.. எங்கே வொர்க் செய்கிறேன்னு சொல்லாமல விட்டுருப்பா! அதையும் அவ கிட்டவே கேட்டுக்கோ..” என்றுவிட்டு அர்ஜுனை தாண்டிச் செல்ல முயலவும், தனது தங்கையின் கோபத்தைக் கண்டு.. சிரித்த அர்ஜுன் அவளது கழுத்தை வளைத்து மறுகையால் அவளது தலையில் கொட்டியவன், “எங்களுக்கு.. பேச வேண்டியது நிறையா விசயம் இருந்ததால் இதைப் பற்றிப் பேசலை. போதுமா..” என்று அவளை விடுவித்துவிட்டு அவளுக்கு முன்னால் சென்றான்.

 

உடனே தனது அண்ணனின் முதுகில் தொற்றிய அகிலா “அப்படி என்ன பேசனீங்க! மரியாதையா சொல்லுங்க..” என்று மிரட்டினாள்.

 

தனது முதுகில் தொற்றியவளை பின்னால் கரங்களை கொண்டு சென்று‌ விழாமல் பிடித்துக் கொண்டவன், “அதை அவ கிட்டவே கேளு!” என்றான்.

 

அகிலா அவனது காதருகே குனிந்து “சொல்லு! சொல்லு!” என்றுக் கத்தினாள்.

 

அர்ஜுன் “ஹெ மன்கி! கத்தறதை நிறுத்து இல்லைன்னா கீழே போட்டுருவேன்.” என்றான்.

 

அகிலா குரலை தணித்து “குட் நீயுஸா? அதை மட்டும் சொல்லு..” என்றாள்.

 

அதற்கு அர்ஜுன் “இப்போதைக்கு யார் கிட்டவும் ஷேர் செய்யற ஐடியா இல்லை!” என்றான்.

 

அகிலா “வாட் எவர்! அதிரா பேரை சொல்லும் போது.. உன் முகத்துல தௌசன்ட் வாட்ஸ் பல்ப் எரியுது, உன் பேரை உன்னால் அவள் எதையோ திருடிட்டு வந்தவ மாதிரி முழிக்கிறா.. இதைப் பார்க்கும் போது.. இப்போ தான் ஒண்ணு புரியுது. நீங்க இரண்டு பேரும் ஜோடியான நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். நீ ஒரு ஆள் மயக்கினு தெரியும். அதனால தான் அவ கிட்ட வார்ன் செய்தேன். அப்பவும்.. உன் பக்கம் விழ வச்சுட்டியா! சரி பரவலாலை விடு! இனி யாரும் உன்கிட்ட விழக் கூடாது அவ தாங்க மாட்டா! உன்னை என்னேரமும்.. காவல் காக்கிறது அவ வேலையா இருக்க கூடாது.” என்று உண்மையான சந்தோஷத்துடன் கூறினாள்.

 

அர்ஜுன் “நீயெல்லாம் எனக்கு அட்வைஸ் சொல்ற மாதிரி ஆகிடுச்சா..” என்றுச் சிரித்தான். 

 

அப்பொழுது மாலதியின் குரல் கேட்டது.

 

“அகி! வாட் இஸ் திஸ்! ட்ரஸ், மேக்கப் எல்லாம் கலையுது பார்!” என்று கீழே இருந்து அதட்டினார்.

 

அகிலா இறங்க முற்பட.. ஆனால் அர்ஜுன் விடாது.. பற்றிக் கொண்டு.. படியிறங்கினான். பின்பே அவளை விட்டான். சில வருடங்களுக்கு முன்.. இருந்தது போல்.. அண்ணன் தங்கை விளையாடியது இருவருக்கும் மகிழ்ச்சி அளித்தது. அப்பொழுதும் அப்படித்தான்.. ‘அகி! அண்ணன் கிட்ட சண்டைக்கு நிற்காதே!’ ‘அர்ஜு! அகியை அடிக்காதே!’ என்று மாலதி திட்டிக் கொண்டே இருப்பார். எனவே தற்பொழுது அவர்களுக்கு மாலதி அதட்டியது பெரிதாக தெரியவில்லை. இருவரும் சிரித்தவாறே.. விருந்து நடைப்பெறும் பின் வாசலில் இருந்த தோட்டத்திற்கு சென்றார்கள். 

 

தோளுக்கு மேல் வளர்ந்த தனது இரு பிள்ளைகளையும்.. அந்த பகட்டான ஆடைகளில்.. இளவரசன் இளவரசி போன்று தோற்றமளித்தவர்களை பெரிமிதத்துடன் மாலதி பார்த்தார்.

 

விருந்து தொடங்கவும்.. ஒவ்வொருவராக தங்களது குடும்பத்துடன் வரத் தொடங்கினர். வந்தவர்களில் இருந்த இளைஞர்கள் நேற்று நடந்த கேளிக்கை கூத்தில் கலந்துக் கொண்டு.. காவலர்கள் வந்ததும்.. அடித்து பிடித்து.. ஓடி வந்தவர்கள் தான்! தற்பொழுது டிப்டாப்பாக உடையணிந்து கொண்டு நல்ல பிள்ளைகள் போல்.. வந்தார்கள்.

 

கார்த்திகேயனும் மாலதியும் ஒன்றாக நின்று வருபவர்களை வரவேற்றார்கள். அர்ஜுன் அவர்களுடன் நிற்க மறுத்துவிட்டு.. சென்றுவிட்டான். அகிலா வேற வழியில்லாது அவர்களுடன் நின்றிருந்தாள். வருபவர்களும்.. உங்கள் மகன் எங்கே என்றுக் கேட்டு கார்த்திகேயனை கோபம் கொள்ள செய்தார்கள். மாலதி தான் கணவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.

 

ஒரு ஓரமாக அமர்ந்துக் கொண்டு.. வருபவர்கள் சிறு வெறுப்புடன் அர்ஜுன் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

இங்கு வந்தவர்கள் அனைவரும்.. சம்பாதிக்கும் பணம் பத்தாது என்று மேலும் மேலும்.. நீ பெரியவனா நான் பெரியவனா.. என்று போட்டிக் கொண்டு கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள்! வரி ஏய்ப்பு செய்து.. வெளிநாட்டில் சொத்துக்களை வாங்கி குவிக்கும்.. பணமுதலைகள்! தாங்கள் தாழ்ந்து போக கூடாது என்று.. தங்களை பின்னுக்கு தள்ளிக் கொண்டு முன்னே செல்பவர்களின் காலை பிடித்து இழுப்பவர்கள்! தற்பொழுது முகத்தில் பொய்யாக சிரிப்பை வரவழைத்துக் கொண்டு.. பேசிக் கொண்டிருக்கும் இவர்கள்.. ஒருத்தரின் வீழ்ச்சியை மற்றவர்கள் விரும்புபவர்கள்!

 

தற்பொழுது இது பத்தாது என்று.. அவர்களின் வீழ்ச்சிக்காக இந்தியாவின் பொருளாதாரத்தை கெடுக்க தயாராகிவிட்டார்கள். மற்ற நாடு நிறுவனங்களுடன் கைக்கோர்க்க திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த விசயம் தான் அர்ஜுனை மேலும் கோபப்படுத்தியது. 

 

தற்பொழுது கூட.. அங்கு வந்திருப்பவர்களை முறைத்தவாறு தான் அமர்ந்திருந்தான்.

 

அனைவரும் வந்த பிறகு.. ஒவ்வொருத்தராக மேடை ஏறி ‘இந்த ‘கெட் டு கெதர் பார்ட்டியில் கலந்துக் கொண்டதால்.. இன்னொரு குடும்பத்துடன் கலந்துக் கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கிறது. அதனால் மகிழ்ச்சி அளிக்கிறது.’ என்ற ரீதியில் பேசினார்கள். விருந்து தொடங்கிய அரை மணி நேரத்திலேயே போரடித்து போய் அர்ஜுன் அமர்ந்திருந்தான்.

 

அப்பொழுது கிரிதரன் என்பவர் எழுந்தார். அவர் இவர்களின் முந்தைய தலைமுறையை சேர்ந்தவர்!

 

மேடைக்கு வந்து வணக்கம் தெரிவித்தவர் பேச ஆரம்பித்தார்.

 

“இந்த ட்ரிப்பிற்கு ஏற்பாடு செய்தவங்களுக்கு என்னோட நன்றிகள்! இந்த கெட் டு கெதர் பார்ட்டியால் ஒரு குடும்பத்து கூட இன்னொரு குடும்பத்திற்கு சுமூகமும் பிணைப்பும் ஏற்படுவதாக எல்லாரும் சொன்னாங்க! ஆனா அதை விட.. அந்த குடும்பத்துக்குள்ளவே இந்த கேம்ப்பால் பிணைப்பு ஏற்பட்டிருக்கு! எஸ்.. இரண்டு மாதங்களுக்கு பிறகு என்னோட பேரனை பார்க்கிறேன். பல மாதங்களுக்கு பிறகு எனது குடும்பத்தினர் அனைவரையும் ஒன்றாக பார்க்கிறேன்.” என்றுவிட்டு இறங்கினார்.

 

அங்கிருந்தவர்கள் கை தட்டுவதா வேண்டாமா என்று விழித்தார்கள். ஆனால் ஒருவரின் கரங்கள் மட்டும் நிதானமாக கைத்தட்டியது. அது அர்ஜுனுடைய கரங்கள்!

 

அர்ஜுன் கைத் தட்டவும், அந்த சத்தம் கேட்டு மற்றவர்கள் அவசரமாக கைத் தட்டினார்கள். பின் அவர் வந்தமர்ந்ததும்.. அனைவரும் அவரிடம் வந்து அருமையாக பேசினீர்கள்! நீங்கள் கூறுவது உண்மை தான்! என்ற ரீதியில் பாராட்டு தெரிவித்தார்கள்.

 

ஆனால் அவரது பார்வை அர்ஜுனின் மீது இருந்தது. அனைவரும் குற்றவுணர்வில் திருதிருவென விழித்துக் கொண்டிருக்கையில் முதல் ஆளாக கைத்தட்டி பாராட்டியவன், தற்பொழுது முகத்தில் கோணல் சிரிப்புடன் மேசையில் வைக்கப்பட்டிருந்த அலங்கார தட்டை நோண்டியவாறு அமர்ந்திருந்தான்.

 

சுற்றிலும் நடப்பதில் லயிப்பு இல்லாமல்.. அமர்ந்திருந்த அர்ஜுனின் தோளில் யாரோ கை வைக்கவும்.. யார் என்று திரும்பிப் பார்த்தான். சற்றுமுன் பேசிய கிரிதரன் தான் நின்றிருந்தார். 

 

வயதில் மூத்தவரான அவரைப் பார்த்ததும் மரியாதை நிமித்தமாக எழப் போனவனை தோளை‌ நன்றாக அழுத்தி அமர வைத்தவர் அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து “நான் பேசியதில் எது சரின்னு தெரிஞ்சுருச்சு! ஆனா எது தவறுனு தெரியலையே! கொஞ்சம் சொல்றீயாபா!” என்றார்.

 

அதற்கு அர்ஜுன் “நீங்க பேசியதில் இருந்த உண்மைக்கு கைத்தட்டினேன். ஆனா அதை சொல்லி ஆதங்கப்பட உங்களுக்கு தகுதியில்லை. நீங்களும் ஒரு வகையில் காரணம்.. அதனால உங்களைப் பார்க்க பிடிக்காம உட்கார்ந்துட்டேன்.” என்றான்.

 

அதற்கு கிரிதரன் “நீ சொல்றது.. உழைச்சு உழைச்சு தேய்ஞ்சு போன என் மூளைக்கு புரியலைபா! கொஞ்சம் விளக்கி சொல்றீயா!” என்றுக் கேட்டார்.

 

அதற்கு அர்ஜுன் “உழைச்சு உழைச்சு மட்டுமில்ல.. பணம் தொழிலை தவிர குடும்பத்தை பற்றி‌ நினைக்காத உங்க மூளைக்கு இது புரியாது தான்!” என்றவன், அவரை பார்த்து நன்றாக அமர்ந்துக் கொண்டு “நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க! இப்போ இப்படி புலம்பறீங்களே! நீங்க உழைச்சுட்டு இருந்த சமயத்தில்.. உங்க பையனோட தேவைகளை நிறைவேற்றினால் போதும்.. என்கிறதை தவிர.. அவங்க கூட உட்கார்ந்து பேசணும், என்ன நினைக்கிறாங்க.. என்ன செய்யறாங்க என்று தெரிஞ்சுக்கணும் என்று‌ ஆசைப்பட்டுருக்கீங்களா? உங்க பையனுக்கு கல்யாணம் ஆகி.. பிறந்த உங்க பேரப்பிள்ளையை‌ மடியில் எடுத்து கொஞ்சிருக்கீங்களா? அதை நீங்க செய்து காட்டாத போது.. உங்களை பார்த்து வளர்த்தவங்க.. மட்டும் அதை செய்வாங்க என்று எப்படி எதிர்பார்க்கறீங்க? இப்போ உங்களுக்கு வயசாகிருச்சு! உழைக்க தெம்பில்லை. பொழுது போகலை என்கிற போது.. உங்க பையனையும் உங்க பேரனையும் பக்கத்தில் வச்சு பார்க்கணும் என்று ஆசைப்படறீங்க! அது எப்படி நடக்கும். அந்த தவறு உங்க கிட்ட இருந்து தான் வந்திருக்கு என்றுக் கூட உங்களுக்கு தெரியலை. இப்போ சொல்லுங்க! அவங்க தவறை சுட்டிக்காட்ட உங்களுக்கு தகுதியில்லை தானே!” என்றான்.

 

அர்ஜுன் கூறிய வார்த்தைகள் அவரது தலையில் சம்மட்டியால் அடிப்பது போன்று இருந்தது. அமைதியாக தலைகுனிந்து அமர்ந்துவிட்டார். பின் மெல்ல நிமிர்ந்து.. “நீ கார்த்திகேயன் பையன் தானே..” என்றுச் சிறு சந்தேகத்துடன் கேட்டார்.

 

அவர் கேட்ட தோணியில் சிரித்த அர்ஜுன் “என் அப்பா.. இதையெல்லாம் சொல்லி வளர்த்திருக்கிறார் என்று நினைச்சீங்களா! அவர் தொழில் பணம் விசயத்துல உங்களுக்கே பாடம் எடுப்பார்.” என்றான்.

 

பின் எங்கோ வெறித்தவாறு அர்ஜுன் “என் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் மூன்றாம் நபராக நின்று.. நாங்க வாழ்கிற வாழ்க்கையை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சுது. பணக்காரங்கள் வாழ்க்கை என்றாலே இப்படித்தான் என்கிற முத்திரையை குத்திட்டு வாழ்வது தெரிந்தது.” என்றான்.

 

பின் முகத்தில் பழைய துள்ளலுடன் “சோ! நீங்கெல்லாம் எப்படியோ போங்க! என் மகன் மகளையும், பேரக்குழந்தைகளையும் நல்லபடியாக வளர்த்த தீர்மானம் செய்துட்டேன்.” என்றுச் சிரியாமல் கூறினான்.

 

கிரிதரன் சத்தமாக சிரித்தே விட்டார். பின் கிரிதரன் “ரொம்ப நல்லதுபா! ஆனா உன்னைப் பற்றி வேற மாதிரி கேள்விப்பட்டேனே..” என்று இழுக்கவும், அவர் கூற வருவது புரிய “இன்னும் எனக்கு இவரது மகனாக சுதந்திரம் கிடைக்கலை. நல்ல பிள்ளையா நின்று அட்வைஸ் செய்தால்.. ஓரமா போய் உட்காரு கம்னீயூசம் பேசாதேனு சொல்லிராங்க! அதனால பணக்கார திமிர் பிடித்த பிள்ளையா இருந்து.. இப்போ உங்களுக்கு குத்தி காட்டினேன் பார்த்தீங்களா! அந்த மாதிரி அப்பப்போ.. தலையில் ஏறி உட்கார்ந்துட்டு குத்திட்டே இருப்பேன்.” என்றுக் கண்ணடித்து சிரித்தான்.

 

கிரிதரன் “எப்படியோ! எல்லாரும் மாறினா சரி!” என்றுச் சிரித்தார்.

 

அதற்கு அர்ஜுன் “அதுக்கு தானே இங்கே இருக்கேன். எல்லாரும்‌ ஒண்ணா வேற மாட்டியிருக்காங்க! எப்படி‌ விடுவேன்.” என்றுச் சிரித்தான்.

 

கிரிதரன் அவனை சந்தேகமாக பார்க்கவும், அர்ஜுன் “ஒகே இங்கே போரடிக்குது. நான் கிளம்பறேன்.” என்று எழுந்தான்.

 

கிரிதரன் எங்கே என்பது போல் பார்க்கவும், அர்ஜுன் “மகனை பெற்று.. பேரக்குழந்தையை கொஞ்சறதுக்கு முதல்ல மனைவியை‌ ரெடி‌ செய்ய வேண்டாமா.. அதுக்கு தான் போறேன்.” என்றுவிட்டு செல்லவும், கிரிதரன் அதையும் விளையாட்டாக எண்ணி சிரித்தார்.

 

அந்த விருந்தில் கலந்துகொண்டவர்கள்.. கார்த்திகேயனிடம் அர்ஜுனை‌ பற்றி விசாரித்துக் கொண்டிருக்க.. அவனோ கிரிதரனிடம் கூறியது போல் அதிராவை காண சென்றான்.

 

படுக்கையில் வாகுவாக சாய்ந்துக் கொண்டு செல்பேசியில் ரீல்ஸ் ஓடிக் கொண்டிருக்க.. அவள் எங்கோ வெறித்தவாறு படுத்திருந்தாள். அர்ஜுனிடம் பிரிவை சொல்லி கிளம்பி விட வேண்டும் என்ற முடிவு ஏன் இத்தனை பாரத்தை தருகிறது என்று அதிர்ச்சியுடன் உணர்ந்தாள். அப்பொழுது கன்னத்தில் ஈரம் உணர.. மெல்ல தொட்டு‌ பார்த்தாள். கண்ணீர் வழிந்திருந்தது.‌ அதை அதன் போக்கில் விட்டாள். இந்நேரத்தில் இந்த கண்ணீர் அவளுக்கு தேவைப்பட்டது.

 

அந்த கண்ணீர் கன்னம் வழியே வழிந்து உதட்டை அடைந்தது. உப்பு கரிக்கும் கண்ணீர் கசப்பை கொடுப்பது போன்று உணர்ந்தாள்.

ஆசிரியர் பேசுகிறேன்:

 

மழைக்கு அழகிய குணம் இருக்கு.. சில்லென்று நமது உள்ளங்கையில் விழுந்தாலும்.. சட்டென்று நம்முடைய மனமும் நனைவதை உணருவீங்க! 

 

ஒரு பாடல் வரி‌ கூட இருக்கு!

 

சட்டென்று நனைந்தது நெஞ்சம்..

சர்க்கரை ஆனது கண்ணீர்..

 

இந்த மாதிரி.. அர்ஜுனோட காதல் மழை அதிராவின் நெஞ்சை நனைத்திருக்க.. அது தித்திப்பு கண்ணீராக வராமல்.. அர்ஜுனை சரியாக புரிந்துக் கொள்ளாமல் உள்ளம் கசக்க.. கசப்பு சுவையுடன் கண்ணீராக வருகிறதோ!

 

இதை அறிந்தால் அந்த மழை தாங்குமா!


   
Quote
Share: