Forum

Notifications
Clear all

குடை 10

1 Posts
1 Users
0 Reactions
78 Views
rajianbu
(@rajianbu)
Admin Admin
Joined: 4 months ago
Posts: 13
Topic starter  

அத்தியாயம் 10

 

அகிலா தனது அறையில் அமர்ந்துக் கொண்டு செல்பேசியை நோண்டி கொண்டிருந்த பொழுது.. “அகி!” என்று அழைத்தவாறு அகிலாவின் அன்னை மாலதி வந்தார்.

 

செல்பேசியில் இருந்து பார்வை எடுக்காமலேயே “என்னம்மா!” என்றாள்.

 

மாலதி “வாட்‌ எ லேஸி கேர்ள்! ஈவினிங் பார்ட்டி இருக்குனு சொன்னேன் தானே.. அதுக்கு ரெடியாக வேண்டாமா!” என்றுக் கேட்டார்.

 

அகிலா இன்னும் செல்பேசியை பார்த்தவாறு “அதுக்கு நான் என்ன செய்வது! வந்து நிற்கணும் அவ்வளவு தானே!” என்றாள்.

 

மாலதி “அவ்வளவு தானா! வாட்‌‌ எபௌட் யுவர் அப்பியர்ன்ஸ்! அன்ட் யு ஹெவ் டு சூஸ் வாட் யூ வியர் டுடே! அதுக்காக ரெடியாக வேண்டாமா! ப்யூட்டிபார்லர் இருந்து ஆள் வந்திருக்கு! கம் க்வீக்!” என்றார்.

 

‘எனக்கு அதிரா செய்து விடுவாள்.’ என்றுக் கூற வாயைத் திறந்து அகிலா அப்படியே மூடிக் கொண்டாள். முதலிலேயே இங்கு எதற்கு அழைத்து வந்தாய் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். தற்பொழுது அதிரா அழகு நிலையத்தில் பணி புரியும் பெண் என்றுத் தெரிந்தால்.. மட்டமாக நினைப்பார்கள் என்று.. வாய் வரை வந்த வார்த்தையை அடக்கி கொண்டாள். 

 

மாலதி “எழுந்திரு அகி! கீழே காஸ்ட்டியும் டிசைனர் வெயிட் செய்யறாங்க.. ட்ரஸ் செலக்சன் செய்துட்டு வந்துட்டா.. ப்யூட்டிஷன் உன் ரூமிற்கே வந்திருவாங்க! ரிலேக்ஸா எல்லாம் செய்யலாம்.” என்கவும், அகிலா “ஒகே! ஒகே! போறேன்..” என்றுவிட்டு எழுந்து சென்றாள்.

 

அவளது வாட்ரேப் திறந்திருக்க.. அதில் தாறுமாறாக துணிகள் தொங்குவதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு மாலதி.. துணிகளை நேராக தாங்கியில் பொருத்திவிட்டு வெளியே வந்தார். அப்பொழுது அதிரா சிரித்தவாறே அர்ஜுனின் அறையில் இருந்து ஓடி வருவதைப் பார்த்து திடுக்கிட்டு நின்றுவிட்டார்.

 

சிரித்தவாறு ஓடி வந்த அதிராவும்..‌ மாலதியை பார்த்து அதிர்ந்து நின்றுவிட்டாள்.

 

மாலதி மெல்ல எட்டிப் பார்த்தார், அர்ஜுனின் அறைக் கதவு திறந்திருந்தது. எனவே அதிராவிடம் வா என்பது போல் தலையசைத்து விட்டு அதிராவின் அறைக்குள்‌ சென்றார். அதிராவும் அச்சத்துடன் அவரது பின்னால் சென்றாள்.

 

உள்ளே நுழைந்ததும் கதவை சாத்த கூறியவர் அதிரா சாத்தியதும் எடுத்த எடுப்பில் “ஓ.. அப்போ இதுக்காக தான் அகிலாவை காக்கா பிடித்து வந்தியா! இந்த மாதிரி ஆள் தான் நீ என்று முதலிலேயே நான் சந்தேகப்பட்டேன். என் சந்தேகம் சரியாக தான் போச்சு! என்ன‌ என்‌ பையனை வளைத்து போட்டதா நினைப்பா..” கடுமையான குரலில் சாடினார்.

 

அவரது குற்றச்சாட்டில் அதிர்ந்த அதிரா “இல்லை ஆன்ட்டி! அவர்தான் முதலில்..” என்கையில் இடைப்புகுந்த மாலதி “அதுக்கு தானே.. அவன் இருக்கிற பக்கம் எல்லாம் போய்‌ ஆடிட்டு இருந்தே! அவனோட கவனத்தை உன் மேலே இழுக்கணும் அப்படித்தானே! இப்போ‌ என்ன பண்ண போறேன்னு தெரியும். அவன் கூட இருக்கிறதை ஃபோட்டோ பிடிச்சு.. அதை சோஷியல் மீடியால போட்டு..‌ மானத்தை வாங்க போறே! சொல்லு யார் உன்னை அனுப்பியது?” என்று‌ அதட்டினார்.

 

அதிரா அழுக்குரலில் “அப்படியெல்லாம் இல்லைங்க ஆன்ட்டி!” என்றுவிட்டு அடுத்து கூற வாயைத் திறப்பதற்குள்.. மாலதி இன்னும் அடங்காத ஆத்திரத்துடன் “அப்படியில்லைன்னா வேற எப்படி! ஓ‌‌.. அந்த ஃபோட்டோஸை சோஷியல் மீடியால போட்டு என் பையன் மேலே பொய்யா புகார் சொல்லி.. நீ பச்சாதாபத்தை சம்பாதித்து ஃபேமஸ் ஆகிடலான்னு நினைச்சியா! சில பேர் அப்படித்தானே ஃபேமஸ் ஆகறாங்க! எடு‌ உன் ஃபோனை! என் பையன் கூட எடுத்த ஃபோட்டோஸை காட்டு! எல்லாத்தையும் டெலிட் செய்!” என்று மிரட்டினார்.

 

மேலும் மேலும் அவள் மேல் குற்றம் சுமத்தி கொண்டே‌ போகவும்.. தற்பொழுது அதிரா அழுத்தமான குரலில் இடையிட்டாள்.

 

“அவர் என்னை காதலிக்கிறார் ஆன்ட்டி!” 

 

அதற்கு துச்சமாக அவளைப் பார்த்த மாலதி “அப்படின்னு நினைச்சுட்டு இருக்கியா இடியட்! அவன் உன்னை லவ் செய்கிறான் என்றால்.. நீ அவனுக்கு எத்தனாவது லவ்வர் என்றுத் தெரியுமா! உனக்கு பிறகும் ஆள் வரும்.. அது தெரியுமா! இதுக்கு தான்.. நானும் அவனோட அப்பாவும்.. அவனைத் திட்டிட்டு இருக்கோம்.” என்றார்.

 

அதிரா இன்னும் தனது கருத்தில் இருக்கும் உண்மை தன்மையை‌ நிரூபிக்க சற்று குரலை உயர்த்தி “அவர்‌ என்னை மனசார காதலிக்கிறார் ஆன்ட்டி! நானும் அப்படித்தான்!” என்றாள்.

 

உடனே மாலதி கோபத்துடன் “அவன் சொன்னதை நம்பிய நீ ஒரு வடிகட்டிய முட்டாள்! என்ன தைரியம் இருந்தால்.. என் மகனை லவ் செய்கிறேன் என்று என்கிட்டவே சொல்லுவே! இந்த பெண்ணை லவ் செய்யறேன்னு.. இதுவரை எங்க கிட்ட நாலு பெண்களை காட்டிட்டான்.  அதில் இரண்டு பேரை அவனே கை கழுவிட்டுட்டான். மற்ற இரண்டு பேர்.. அவர்களாக ஓடிட்டாங்க! இப்போ தான் சரியான பெண்ணை செலக்ட் செய்திருக்கிறான். ஆமா ரிஷிதாவோட அப்பா கிட்டவும் பேசிட்டோம். இவங்க இரண்டு பேரும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் என்று இருந்தால்.. இந்த பார்ட்டி கேம்ப் முடிவுல என்கேஜ்மென்ட் செய்யலானு இருக்கோம். இது அவங்களுக்கு சர்பரைஸ்ஸா இருக்கட்டும் என்று பிளன் போட்டுருக்கோம்‌. இந்த முறை பெரெண்ட்ஸ் சப்போர்ட்ம், எங்க விஷ்ஷும் இருப்பதால்.. அவன் அந்த பெண்ணை விட மாட்டான். இந்த நேரத்தில்..‌ கெட்ட சகுனம் மாதிரி எங்கே இருந்து நீ வந்தே! மரியாதையா வந்த மாதிரியே திரும்பி ஓடிரு! உன் நிழல் கூட அவன் மேலே படக் கூடாது. நீ வெறும் பாஸிங் க்லௌவ்ட்ஸ் என்று தெரியாமா.. உன்னை நம்பி..‌ அந்த பெண்ணை விட்டர போகிறான். நீயும் அவனை நம்பி வாழ்க்கையை தொலைச்சுக்காதே! பெரியவளா என்னோட அட்வைஸ் என்று எடுத்துக்கிட்டாலும் சரி.. அர்ஜுனோட அம்மாவா என்னோட வார்னிங் என்று எடுத்துட்டாலும் சரி! நாளைக்கு அகிலா கூட கிளம்பறே! அதுவரை இந்த ரூமை விட்டு வெளியே வரக் கூடாது. அர்ஜுன் வந்து கூப்பிட்டா.. வரலைன்னு சொல்லிரு! என்ன புரிஞ்சுதா!” என்று மூச்சிரைக்க பேசி முடித்தார்.

 

அதிரா பதில் கூடச் சொல்ல தெரியாமல் ஸ்தம்பித்து நின்றாள். 

 

சற்றுமுன் தான்.. அர்ஜுனின் அவள் கொண்ட ஈர்ப்பில் திணறலுடன் இருந்தவளை.. காதல் வார்த்தை பேசி உறுதி செய்தான். தற்பொழுது அந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஆட்டம் காண வைத்துவிட்டு அவளிடம் கருத்து கேட்கவும், அவளால் பதிலளிக்க முடியவில்லை.

 

அதிரா எதுவும் கூறாமல் இருப்பது.. மாலதியின் கோபத்தை மறுபடியும் கிளப்பவும், “என்ன அவன் கிட்ட இதைச் சொல்லி‌‌.. தூண்டி விடலாம் என்று யோசிக்கறியா! அப்படி எதாவது செய்தால்.. அப்போ வேணுன்னா.. அவன் உனக்கு சப்போர்ட்டா இருக்கலாம். அப்பறம் நான் சொன்னது தான் நடக்கும். உனக்கு என்று வாழ்க்கை ஒன்றும் இருக்காது.” என்றார்.

 

அதிராவின் கண்களில் இருந்து பொல பொல என்று கண்ணீர் வழிந்தது. அதைப் பார்த்தவர்.. “நிதர்சனத்தை புரிஞ்சுகிட்டு.. நீயே விலகிட்டா.. எல்லாருக்கும் ரொம்ப நல்லது. வீண் வாக்குவாதம் சச்சரவு இருக்காது.” என்றார்.

 

பின் அவரது முகம் சிறிது வாடியது. 

 

பின் “ஆமா! அவன் நாங்க சொல்ற பேச்சை கேட்கிறவன் இல்லை. அவனுக்கு என்ன தோணுதோ.. அதைத்தான் செய்வான். அதனால தான் அவனைக் கண்டிக்காம உன்னைக் கண்டிச்சுட்டு இருக்கேன். அவன் கிட்ட.. நான் இதைப் பற்றிக் கேட்டால்.. அதற்காகவே இந்த விசயத்தில் தீவிரம் காட்டி.. அவன் வாழ்க்கை பாழாக்கிறது மட்டுமில்லாம உன் வாழ்க்கையையும் பாழாக்கிருவான். நீ கொஞ்சம் சொன்ன கேட்கிற பொண்ணு மாதிரி.. இருக்கு! நீ ஆளைப் பார்த்த மயங்கின பெண் மாதிரி இருக்கிறே! அந்தஸ்த்தை பார்த்து.. அவனை மயக்கின பெண் மாதிரி இல்லை. அதுனால நீயே விலகிறது தான் நல்லது. பிடிக்கலைனு சொன்னா.. அவன் ரோஷக்காரன்.. அவனைப் பிடிக்கிற வரை விட மாட்டான். நீ வேற ஒருத்தரை லவ் செய்வதா சொல்லிரு! உன்னை வெறுக்கிற மாதிரி எதாவது சொல்லு!” என்று யோசனை கூறினார்.

 

அதிரா அவரை வெறித்து பார்த்தாள்.

 

மாலதி “சரி.. நான்தான்.. விலக சொன்னேன்னு சொல்லு! அதற்கு பிறகு நடப்பதையும் அனுபவிச்சுக்கோ! நீயெல்லாம் பட்டு திருந்துகிற.. ஜெ” என்றுக் கூறப் போனவர், நிறுத்திவிட்டு “பட்டா தான் புத்தி வரும்..” என்றுவிட்டு அவளைத் தாண்டிச் சென்றவர், கதவிடம் நின்று “நான் சொன்னதை நல்லா யோசி!” என்றுவிட்டு கதவை திறந்துக் கொண்டு சென்றார்.

 

மாலதி சென்ற வெகுநேரம் ஆகியும்.. அதிரா நின்ற இடத்திலேயே நின்றாள்.

 

மெதுவாக சென்று படுக்கையில் அமர்ந்தவளாள்.. அர்ஜுனின் காதல் மொழியில் இருந்தும் வெளி வர முடியவில்லை.. மாலதி கூறியதில் இருந்தும் வெளி வர முடியவில்லை. 

 

கண்களில் காதலை தேக்கி வைத்துக் கொண்டு..‌ தன்னிடம் காதலை சொன்னவனை பொய்யாக அதிராவிற்கு தெரியவில்லை. அதே சமயம் மாலதி கூறியவையும் அவளால் ஒதுக்க முடியவில்லை. 

 

ஏனெனில் இம்மாதிரி நடைமுறை சிக்கல்கள் வரும் என்று தான்.. அர்ஜுன் மேல் தோன்றிய காதலை மறைத்தாள்.. அவன் கேட்கும் போது.. மறுத்தாள். ஆனால் வலுக்கட்டாயமாக அவளது இதயத்தில் இருந்து காதலை அவன் வெளிக்கொணர்ந்து விட்டான். தற்பொழுது அக்காதல் அம்போ என்று தனித்து இருப்பது போன்று பிரம்மை தரவும், தலையை பிடித்துக் கொண்டு படுத்துவிட்டாள்.

 

மாலதி கூறிய விசயங்களில் ரிஷிதா விசயம்.. அவளை மிகவும்.. சஞ்சலத்திற்கு‌ உள்ளாக்கியது. ரிஷிதாவுடன் சுற்றுவதாக அகிலா கூட கூறியிருக்கிறாள். அவனும் ஒத்துக் கொண்டிருக்கிறான். அதை எப்படி அவள்‌ மறந்தாள்! அல்லது அவன் எப்படி ரிஷிதாவை மறந்துவிட்டு.. தன்னிடம் காதலை கூறினான். அவ்வளவு சீக்கிரம்.. ரிஷிதாவை மறந்துவிட்டு.. தன்னிடம் காதலை கூறினான்.. என்றால் மாலதி கூறியது உண்மையா! அவள் அவனின் முதல் காதலியும் இல்லை கடைசி காதலியும் இல்லையா! 

 

அவளது மனம் பந்தய குதிரையாய் துடித்தது. கண்களில் இருந்து தானாய் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அழுத்த துடைத்தவள், தற்பொழுது எதையும் நினையாதே மனமே! சிறிது அமைதிக்கு பின் யோசித்தால் தீர்வு கிடைக்கும்.. தற்பொழுது குழப்பமான மனநிலையுடன் யோசித்தால்.. மேலும் குழப்பம் தான் ஆகும், தீர்வும் கிடைக்காது.. என்று தன்னை அமைதிப்படுத்தி கொள்ள முயன்றாள்.

 

தனது பெற்றோர் பற்றியும்.. தொழில்முறை நண்பர்கள் பற்றியும் நினைத்துப் பார்த்தாள். ஆனால் தானாக அவளது நின்றுப் போன திருமணம் நினைவிற்கு வந்தது‌.

 

பெற்றோர்கள் பார்த்து வைத்த மாப்பிள்ளை தான்.. ஆனால் தனது எதிர்கால கணவன் என்று நிர்ணயத்து.. சில கற்பனைகளை செய்திருக்கிறாள். அந்த மாப்பிள்ளையின் மேல் காதல் எல்லாம் கொள்ளவில்லை என்றாலும்.. எதிர்கால கணவனாக கற்பனை செய்து பார்த்தது இல்லாது போனது.. அதிராவிற்கு வருத்தத்தை அளித்திருந்தது. அர்ஜுனின் மேல் கொண்ட காதலை மறைத்ததிற்கும் அதுவும் ஒரு காரணம்! தற்பொழுது அதே போல்.. அவள் விருப்பப்பட்ட அர்ஜுன் அவளுக்கு இல்லாது போகிறான்.. என்று நினைத்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது‌. அவனைப் பற்றி அவளது முதல் எண்ணமே சரி! அவனின் மேல் ஈர்ப்பு கொள்ளலாம்.. ஆனால் கிடைப்பான்‌‌ என்று எதிர்பார்க்க கூடாது என்பது சரியே! அவளது உறுதியின் நடுவில் புகுந்து மனதில் ஆசையை கிளப்பி விட்டுவிட்டான்.. என்று அர்ஜுனின் மேல் கோபம் கொண்டாள். 

 

ஆனால் அர்ஜுனின் மேல் நம்பிக்கை வர மறுத்தது. நம்பிக்கை கொள்ளும்படியான விசயங்களும் இல்லை. அனைத்தும் அர்ஜுனுக்கு எதிராகவே இருந்தது.

 

சிறிது நேரத்தில் வந்த அகிலா சிறிது நேரம் வளவளத்தாள். 

 

அதிராவின் முகம் சுருங்கி இருப்பதைக் கண்டு.. “என்ன அதிரா! ஜாலியா லவ் செய்யலாம்.. என்று வந்தேன். என் பிளன் எல்லாம் போச்சு! ஆக்சுவலி எனக்கு லவ் பெயிலியர்! சோ நீ என்னைத் தேற்றுவேனு பார்த்தா.. நான் வந்து உன்னை தேற்றுகிற மாதிரி முகத்தை வச்சுட்டு உட்கார்ந்திருக்கே! என்னாச்சு?” என்றுக் கேட்டாள்.

 

அவள் கேட்ட விதத்தில் சிரிக்க முயன்ற‌ அதிரா “நத்திங் அகிலா!” என்றாள்.

 

அகிலா “இல்ல என்னமோ இருக்கு!” என்றவள், சற்று தணிந்த குரலில் “அதிரா! நேத்து என்னாச்சு? அர்ஜு உன்கிட்ட தப்பா நடந்துட்டானா?” என்றுக் கேட்டாள்.

 

அவள் கேட்ட கேள்வியில் அதிரா திடுக்கிட்டு அவளைப் பார்த்து “உன்‌ அ..அண்ணன் அப்படி நடந்துக்கிற ஆ.. ஆளா?” என்றுக் கேட்டாள்.

 

அவளது பயம் புரியாது அகிலா “அப்போ அப்படி நடந்துக்கிலையா! அப்போ ப்ரீயா விடு! ஆனா அவன்கிட்ட ஜாக்கிரதையா இரு! ஒருநாள் பொருத்துக்கோ! நைட் ரூம்மை விட்டு வெளியே வராதே! நாளைக்கு நாம் இங்கிருந்து ஓடிரலாம்.” என்றுவிட்டு மாலை விருந்திற்கு தயாராக சென்றாள்.

 

என்ன முடிவு எடுப்பது என்று திணறிக் கொண்டிருந்தவளுக்கு.. தற்பொழுது என்ன‌ முடிவு எடுப்பது என்ற தெளிவு ஏற்பட்டது. ஆனால் காதல் தளும்பும் அவனது குறும்பு விழிகள் கண்முன் வந்து.. நெஞ்சில் பாரத்தை ஏற்படுத்தியது.

 

கனத்த இதயத்துடன் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தாள். இந்தியா சென்றதும் வந்து பார்க்கிறேன் என்றுக் கூறியிருந்தான். அப்பொழுது கண்டிப்பாக மறுத்து விட வேண்டும். அங்கு அவளுக்கு குடும்பம் இருக்கிறது, தொழில் இருக்கிறது. அதனால் மறுப்பது எளிதாக இருக்கும் என்று எண்ணினாள். மாலதியும் அகிலாவும் கூறியபடி.. பல மலர் தாவும் வாலிபனாக இருந்தால்.. தனது மறுத்தளிப்பை அவனும் ஏற்றுக் கொள்வான் தான் என்று நினைத்தாள். அந்த நினைப்பு அவளுக்கு கசப்பை தந்தது. அந்த கசப்பும்.. சற்றுமுன் அனுபவித்த தித்திப்பை விரட்ட தேவை தான் என்று நினைத்தாள்.

 

ஆனால் அவளுக்கு அர்ஜுனை பற்றி தெரியவில்லை. இங்கு அவளது மனதில் சிறிது சிறிதாக வெறுப்பை ஏற்றிக் கொண்டிருக்க.. அங்கே அவன் சிறிது சிறிதாக அல்ல.. முழுமையாக காதலில் வேரூன்றி விட்டான் என்பதை அவள் அறியவில்லை.

 

ஆசிரியர் பேசுகிறேன்:

 

மழையோட அருமை தெரியாம  நனைஞ்சுட்டோமேனு..‌ கவலைப்பட மாதிரி இருக்கு.. அதிராவோட நிலை!

 

உடம்பு மழையில் நனையாம இருக்க.. அவள் குடை பிடிக்காம இருக்கணும். பிடித்துவிட்டால்.. மழைக்காற்று.. குடையை தட்டிவிடும்‌ என்பதை அவள் அறிவாளா!


   
Quote
Share: