குடை 1
குடை வேண்டாமே.. இப்படிக்கு அடைமழை!
அத்தியாயம் 1
மாலத்தீவுகள்!
நெருக்கமான வீடுகளும், போக்குவரத்து நெரிசலும், தங்களது பகட்டை காட்ட.. மேலும் மேலும்.. வாங்கி போடும் சொத்துகளும், வாகனங்களும், ஒருத்தரின் சுவாசத்தை இன்னொருத்தர் சுவாசிக்கும் அளவிற்கு.. எங்கும் எதிலும் கூட்டமும், சுத்தமான காற்றை சுவாசிக்க.. யாரும் அதிகம் இருக்காத காலை பொழுதை தேர்ந்தெடுக்கும் நிலையும், பரந்த இடத்தை பார்த்தால் அதிசயமாக பார்க்கும்.. கண்களும்.. என்று இருப்பவர்களுக்கு மாலத்தீவுகள் ஒரு சொர்க்கம் என்றே கூறலாம்.
நவீனங்களால் அல்லாது.. இயற்கையால் பல சுற்றுலாவாசிகளை சுண்டியிழுக்கும் மாலத்தீவிற்கு செல்பவர்களுக்கு சுற்றிலும் இருக்கும் கடற்பரப்பில் விட்டு கண்களை எடுக்க இயலாது.
சில இடங்களில் பச்சை வண்ணத்திலும், சில இடங்களில் நீல வண்ணத்திலும், சில இடங்களில் வெள்ளை வண்ணத்திலும் காட்சியளிக்கும் கடல்கள்! சில இடங்களில் மூன்று வண்ண கடலலைகளும் சங்கமிப்பதையும் காணலாம்.
சிறு சிறு தீவுகளால்.. ஆனா மாலத்தீவுகளில் நாற்பது சென்ட் பரப்பளவு கொண்ட தீவுகளும் உண்டு. அதை பல கோடிகள் கொடுத்து வாங்கியிருக்கும் பணக்காரர்களும் உண்டு.
மனதைக் கொள்ளைக் கொள்ளும் அழகை கொண்ட மாலத்தீவில் சுற்றுலாவாசிகள் தங்கி மகிழ பல சொகுசு பங்களாக்கள் அமைந்துள்ளன. அதில் பல்வேறு நாட்டில் இருந்து வரும் பணம் கொழுத்தவர்கள் தங்கி.. தங்களது விடுமுறை நாட்களை இன்பமாக கழித்துக் கொண்டு செல்வார்கள். மாலத்தீவு அரசாங்கத்திற்கு பெருத்த வருமானம் சுற்றுலா துறையின் மூலமாக வருகிறது என்பதில் ஐயமில்லை.
விடுமுறைக்கு ஏற்ற மாதமான ஏப்ரல் மாதத்தில்.. அங்கு பல்வேறு நாட்டில் இருந்து சுற்றுவாசிகள் குவிந்திருந்தார்கள். முன் ஏற்பாடினின்றி அங்கு தங்க இடம் கிடைப்பதும் கடினம்!
சுற்றுலாவாசிகள் தங்குவதற்கு கடற்பரப்பில் வரிசையாக மதிற்சுவருடன் கூடிய சிறு சொகுசு மாளிகைகள் வரிசையாக அமைந்துள்ளன. அதில் ஒரு மாளிகை.. வெளியே கடல் நீலத்தில் வண்ணம் பூசப்பட்டிருக்க.. வீட்டின் உடற்புறத்தில் கடற்பாசி வண்ணத்திலும் வெள்ளை வண்ணத்திலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இரு தளங்கள் கொண்ட அந்த மாளிகையில் தரைத்தளத்தில் சமையலறை, வரவேற்பறை மற்றும் ஓய்வாக அமர்ந்து பேசும் கண்ணாடி அறை போன்றவை இருக்க.. மேல் இருக்கும் இரு தளங்களிலும்.. ஒவ்வொரு தளத்திலும் இரண்டு படுக்கையறைகளும்.. சிறு ஓய்வறையும் இருந்தன.
அதற்கும் மேல் இருந்த திறந்தவெளி தளத்தில் கண்ணாடி கூரையுடன் கூடிய.. உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய நீச்சல் குளம் ஒன்று இருந்தது. அந்த திறந்தவெளி மற்றும் மேல் இரு தளங்கள் என்று மூன்று தளங்கள் மட்டும் சிட்அவுட்டில் இணையும் படி.. மீன்கள் மற்றும் கடற்சிப்பிகள் வடிவில் படிகள் அமைக்கப்பட்டிருக்க.. சிறு சிறு நீருற்றுகளும் அமைக்கபட்டிருந்தன. அதில் இருந்து நீரின் சில்லிப்போடு காற்று வரும்படி தயாரித்திருந்தார்கள். ஆங்காங்கு கடலுக்கு அடியில் காணப்படும் தாவரங்கள் மாதிரியான செயற்கை தாவரங்களை வைத்து அழகுற அமைத்திருந்தனர். அதில் இருந்து சுகந்தமும் வீசியது. இவற்றுக்கு நடுவில் அமர்ந்து பேசும்.. ஷோபாக்கள் சிப்பி வடிவில் அமைந்திருந்தன. கண்ணாடி சுவற்றில் பரவ விட்டிருந்த தாவரங்களை விலக்கிப் பார்த்தால்.. சற்று தொலைவில் தென்படும் கடலை பார்க்கும் போது.. கடலுக்குள் இருப்பது போன்ற உணர்வைத் தரும்.
இவ்வளவு அருமையான இடத்தில் இங்கு வந்த இரண்டு நாட்களில் யாரும் அமர்ந்து பேசி அதிரா பார்த்தது இல்லை. நேற்று வரை ஏன் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவதில்லை என்று அதிசயமாக நினைத்த அதிராவிற்கு தற்பொழுது காரணம் தெரிந்திருந்தது. மனதில் மகிழ்ச்சியும் ஒருவருக்கு ஒருவருடன் பிணைப்பும் அக்கறையும் இருந்தால் தானே ஒன்றாக அமர்ந்து பேசுவதற்கு! இந்த மூன்றும் இங்கு இருப்பவர்களில் அவளது தோழி உள்பட யாருக்கும் இல்லை.
அதற்கு அவர்களையும் குற்றம் சொல்ல முடியவில்லை. இதோ இத்தகைய அழகான இடத்தில் அவள் நின்றிருக்கிறாள். ஆனால் அவளுக்கு இந்த இடத்தின் அழகு தெரியவில்லை. லயிப்பும் இல்லை. அதற்கு அவள் ஒன்றும் இரசனை கெட்டவள் என்றும் கூறி விட முடியாது. ஏனெனில் அவள் ஒரு அழகு கலை நிபுணர்!
அழகுக்கலையை படிப்பாக எடுத்து.. பயிற்சி பெற்று.. சென்னையின் பெரும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அழகு கலை பிரிவில் வேலை செய்கிறாள். அவளைப் பொருத்தவரை இந்த உலகில் பிறந்த அனைவருமே அழகானவர்கள் என்பதே அவளது கருத்து! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான முக அமைப்பை கடவுள் எப்படிப் படைத்தான் என்று அவள் வியந்திருக்கிறாள். அழகானவர்களை அழகுப்படுத்தி பார்ப்பவர் அவள்! அப்படியிருக்க இந்த மாதிரியான இடத்தில் அவளுக்கு லயிப்பு ஏற்படவில்லை எனில் அதற்கு.. அவளது மனதில் இருந்த வெறுமையை காரணம்! எனவே அவர்களையும் சொல்லி குற்றமில்லை என்று நினைத்தாள்.
ஏனெனில் தனது தோழி அகிலாவின் வற்புறுத்தலில் இங்கு வந்தது தவறோ என்று அதிரா காலம் தாழ்த்தி வருத்தம் கொண்டாள். இது அகிலாவின் குடும்பத்தினர் மாலத்தீவிற்கு மேற்கொண்ட இன்பசுற்றுலா.. கூடவே அவளது பெற்றோரை போன்ற பெரும் பணக்காரர்களின் கேளிக்கை சங்கமம்! இங்கு அவளுக்கு என்ன வேலை!
அகிலா தனது அன்னையிடம் தனக்கு துணைக்கு என்று யாரும் இல்லை! அவளது பெற்றோருடனும்.. அவனது அண்ணனிடம் அவளுக்கு பிடிப்பு என்று ஒன்று இல்லை. அதனால் அங்கு தனித்து விடப்பட்டு போன்றிருக்கும். அதனால் அதிரா கண்டிப்பாக வர வேண்டும் என்று வற்புறுத்தி அதிராவின் அன்னையிடம் அனுமதி பெற்று அழைத்து வந்தாள்.
அதிரா அவளது அன்னைக்கும்.. அதிரா சிறிது நாட்கள்.. சென்னையில் இருப்பது நல்லது இல்லை.. என்று இருக்கவும், அதிரா சம்மதம் தெரிவிக்க.. அவளது அன்னையும் சம்மதித்தாள். ஏனெனில் நின்று போன திருமணத்தைப் பற்றி துக்கம் விசாரிக்க என்று வரும் சொந்தங்களை எதிர் கொள்ளும் திறன்.. அதிராவிற்கு இல்லை.
அதிராவின் எண்ணங்கள் நின்று போன அவளது திருமணத்திற்கு சென்றது. முறைப்படி ஜாதகம் பார்த்து வந்த சம்பந்தம் தான்.. விசாகன்!
பெண் பார்க்கும் முன் தனியாக வந்து அவளைச் சந்தித்து.. பிடித்து போய் தான் திருமண தேதி குறிக்கும் வரை.. அவர்களது திருமண விசயம் சென்றது. ஆனால் திருமணத்திற்கு பத்து நாட்களுக்கு முன்.. ஒரு பெண்ணை அழைத்து வந்து.. இவள் தான் அவனது காதலி என்றும்.. அவள் மேல் உள்ள கோபத்தில் தான் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டேன் என்றும்.. ஆனால் அதன் பின்பே அவனது காதலியை அவன் எந்தளவிற்கு காதலிக்கிறான் என்று மறக்க முடியாமல் திணறிய போது கண்டுப்பிடித்ததாக மன்னிப்பு கேட்டவன், விரைவில் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொள்ள போவதாக கூறினான்.
அதிராவிற்கு உங்க காதலின் அளவு தெரிந்து கொள்ள நான்தான் கிடைத்தேனா என்று இருந்தது. அவர்களின் மீது கோபமும் கொள்ள முடியாமல் நல்லவேளை திருமணம் நடைப்பெறுவதற்குள் இது புரிந்ததே.. என்று வாழ்த்தி அனுப்பி வைத்தாள்.
இந்த சம்பவம் நடந்த போது.. அகிலா அங்கு தான் இருந்தாள். அவள்தான் அதிராவை கட்டிப்பிடித்து செமையான பதில் சொன்னே.. என்று அவளை உற்சாகப்படுத்தினாள்.
அங்கு அழகுப்படுத்தி கொள்ள அடிக்கடி வந்த போது தான் அகிலாவிற்கும் அதிராவிற்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. அதனால் பணத்தை பற்றிக் கவலைப்படாமல் கல்லூரி முடிந்ததும் தினமும் இங்கு வந்து சும்மா அமர்ந்து அரட்டை அடித்துவிட்டு.. ஹெர்ஸ்டைலிங் செய்து விடு என்றுக் கூறி பணம் கட்டிவிட்டு போவாள். அதனால் விசாகன் வந்த போது அகிலா அங்கிருந்தது ஆச்சரியமில்லை.
அகிலாவின் உற்சாகமூட்டலில் இது ஒன்றுமில்லாத விசயம் என்று நினைத்து வீட்டிற்கு போன போது தான் இது பெரிய விசயம் என்று அவளுக்கு புரிந்தது.
வீட்டில் இருந்த பெற்றோரிடம் செல்பேசியில்.. விசாகனின் பெற்றோர் விசயத்தை கூறி ஸாரியுடன் முடித்து விட்டனர். அதிராவின் பெற்றோர் அச்சடித்து வைத்திருந்த பத்திரிக்கையை பார்த்தும்.. வெளியூரில் வசிக்கும் உறவினருக்கு பத்திரிக்கை கொடுத்து முடித்துவிட்டாகிற்று அவர்களுக்கு எப்படி பதில் கூறுவது என்றும்.. திகைத்து போய் அமர்ந்திருந்தார்கள். அப்பொழுதும் அதிரா அவர்களைத் தேற்றி தன்னையும் தேற்றி கொண்டாள். ஆனால் உறவினர், அண்டை வீட்டார் என்று விசயம் பரவி.. ஆறுதல் கூறுகிறோம் என்று பேசிய பொழுது சங்கடத்திற்கு உள்ளானர்கள். இதனால் அவர்களுக்கு மனவுளைச்சல் ஏற்பட்டது புரிந்தது.
இந்த நேரத்தில் தான் அகிலா வந்து அழைத்தாள். அதனால் உடனே சம்மதம் தெரிவித்து அதிரா அவளுடன் இங்கு வந்து விட்டாள்.
ஆனால் தனது சொந்தங்களை எதிர்கொள்ள பயந்து.. அகிலாவின் துணைக்கு என்று வந்து தான் தனித்து விடப்பட்டு விட்ட உணர்வு தோன்றவும் தான்.. இங்கு வந்தது தவறோ என்று அதிராவிற்கு உறைத்தது.
ஏனெனில் அகிலா அவளை துணைக்கு அழைத்து வரவில்லை. அவளது பெற்றோரிடம் இருந்து தப்பித்து.. அவளது காதலனுடன் சுற்ற அதிராவை காரணம் காட்ட அழைத்து வந்திருப்பது புரிந்தது.
இங்கு வருவதற்கு விமானத்தில் வழக்கம் போல்.. அரட்டை அடித்தவாறு வந்த போது.. அதிராவிற்கு சந்தோஷமாக தான் இருந்தது. பெரிய மனவுளைச்சலில் இருந்து தப்பித்தாகி விட்டது என்ற நிம்மதி ஏற்பட்டது. மாலத்தீவுகளின் மேல் விமானம் பயணக்கும் போது.. சிதறிய நில துண்டுகள் போல் குட்டி குட்டியாக இருந்த தீவுகளை பார்க்கும் போது.. இந்த அழகிய இடத்திற்கு வந்திருக்கிறோமா என்று உற்சாகம் கூட பீறிட்டது. அவர்கள் தங்க ஏற்பாடு செய்திருக்கும் ஆடம்பர வீட்டிற்கு வந்ததும் தான் அகிலாவின் பெற்றோரை சந்தித்தித்தார்கள். அவர்கள் தனியாக.. அகிலாவும் அதிராவும் தனியாக தான் பயணித்து இங்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்த பொழுது அதிரா சிறிது சங்கடம் கொண்டாள். அகிலாவின் பெற்றோர்.. தோழியை அழைத்து வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை போல.. வெளிப்படையாகவே தங்களது வெறுப்பை காட்டினார்கள். அதிரா அதிர்ந்து நின்றாள். ஆனால் அவர்களைப் பற்றிக் கவலைப்படாத அகிலா தோழியை அழைத்து வருவது என் விருப்பம்.. என்று முதல் நாளில்.. அவளது பெற்றோருடனும்.. இன்னும் மாலத்தீவிற்கு வந்திராத அவளது அண்ணனை திட்டியும் சண்டையிட்டாள். பின் இரண்டாம் தளத்தில் அவளது அறைக்கு ஒட்டியிருந்த மற்றொரு படுக்கையை தாண்டி குளியலறை வசதியுடன் இருந்த சிறு அறையை அதிராவிற்கு ஒதுக்கி கொடுத்தாள்.
அதிரா அகிலாவிடம் அவளது பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்றால்.. திரும்பிச் செல்லட்டுமா என்றுக் கேட்டதிற்கு.. அகிலா எனக்கு துணையாக வந்துவிட்டு.. தனியாக விட்டு செல்வாயா.. என்று சண்டையிட்டு படுக்க அனுப்பினாள். அதிராவும்.. இப்படியொரு தோழி கிடைத்த சந்தோஷத்தில் தனது உடைமைகளை அங்கு அடுக்கிக் கொண்டாள்.
அடுத்த நாள் அகிலாவின் பெற்றோர் அவர்களுடன் அகிலாவை வரச் சொல்லிய பொழுது.. தான் தனியாக தோழியுடன் சுற்றிப் பார்த்துக் கொள்கிறேன். அவர்களுடன் வர விருப்பமில்லை.. என்று வெளிப்படையாக கூறியது.. அதிராவிற்கு தவறாக பட்டது. அதை அகிலாவிடம் கூறினால்.. அதை அவள் காதில் கூட வாங்காமல்.. அவளை அழைத்துச் செல்வதில் குறியாக இருந்தாள். அப்பொழுது உண்மையிலுமே தோழிக்காக வருந்தி.. அவளுடன் சென்றாள்.
ஆனால் அகிலாவுடன் வெளியே சென்ற பொழுது தான்.. தன்னை எதற்கு அழைக்க வந்திருக்கிறாள் என்று அதிராவிற்கு புரிந்தது. அங்கு ஒரு இளைஞனை அறிமுகப்படுத்தினாள். அவனைப் பார்த்தாலே மேல்தட்டு இளைஞன் என்றுத் தெரிந்தது. அவளுடன் பயிலும் இவனும்.. இந்த கிளப்பில் இருக்கும் பணக்கார தம்பதிகளின் மகன் என்றும் மட்டும் நினைத்திருந்தாள். ஆனால் அது மட்டுமில்ல இன்னொரு உறவும் உண்டு.. என்று அவர்கள் அவளின் முன்பே கட்டிப்பிடித்து முத்தமிட்ட போது புரிந்தது.
அதிரா திடுக்கிட்டு நிற்கவும், அவளைப் பார்த்து சிரித்த அகிலா “ஸாரி அதிரா! இவன் தீபக்.. ஒரு கிளப்பில் தான் ஒரு மாசத்துக்கு முன்னே பார்த்தேன். என் அப்பாவோட பிரெண்ட் சர்க்கிள்ல இருக்கிறவரோட பையன் தான்! முன்பே பார்த்திருக்கேன் என்றாலும்.. அங்கே இன்னும் பழக்கம் ஆச்சு! அந்த பழக்கம் அப்படியே லவ்வா மாறிடுச்சு! போன வாரம் தான் லவ்வையே டிக்ளேர் செய்தோம். உனக்கு சப்ரைஸ்ஸா இருக்கட்டும் என்று சொல்லாம இருந்தேன். சொல்லு எப்படி என் சப்ரைஸ்!” என்று அவனது இடுப்பை கட்டிக் கொண்டு கேட்டாள்.
அவளை விட மூன்று வயது சிறியவளான அதாவது இருபது வயது நிரம்பிய அகிலா இப்படி வெளிப்படையாக காதல் என்று அறிவித்து கட்டிப்பிடித்து முத்தமிடுவது அதிராவிற்கு ஒத்துக் கொள்ளும்படி இல்லை. அதைக் கூறவும்.. அவளுக்கு சங்கோஜமாக இருந்தது. எனவே சிறு முறுவலுடன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தாள். பின் சுற்றிப் பார்க்கலாம் என்று அவளை அழைத்துக் கொண்ட அகிலா.. தனது காதலனுடன் ஒட்டிக் கொண்டு சுற்றினாள். அவர்களுடன் வந்த அதிராவிற்கு மிகவும் சங்கோஜமாகி விட்டது. இது தொடரவும்.. அவர்களை விட்டு அதிராவே ஒதுங்கினாள். இங்கு வந்த இந்த இரண்டு நாட்களுக்குள்.. அவளுக்கு வெறுத்துவிட்டது.
காலையில் தாமதமாக எழும் அகிலா மதிய வேளை நெருங்கும் போது.. அவளது பெற்றோர்களுடன் கூட சொல்லாது.. அதிராவையும் இழுத்து கொண்டு வெளியே கிளம்பி விடுவாள். அகிலாவின் பெற்றோரும் எங்கும் கண்ணில் தட்டுப்படவில்லை என்பது வேறு விசயம்! ஆனால் அகிலாவோ அல்லது அவளது பெற்றோர்களோ ஒருத்தருக்கு ஒருத்தர் ஃபோன் கூட பேசிக் கொள்ள மாட்டார்களா என்று ஆச்சரியமாக இருந்தது.
அதிராவை பேருக்கு அழைத்துக் கொண்டு போனதாலும்.. அகிலாவும் தீபக்கும்.. ஒட்டி உரசி காதல் புரிவதை பார்த்ததாலும்.. என்னவோ சுற்றிலும் தெரிந்த அழகில் அவளால் முழுமையாக ஈடுபட முடியவில்லை. அழகை இரசிக்கும் குணம் கொண்ட அதிராவிற்கு இதுவே பெரும் தண்டனையாக இருந்தது. எனவே இங்கு இருப்பது அவளுக்கு வெறுமையாக இருந்தது. இன்று அழைத்த போது தலைவலி என்று காரணம் கூறி வீட்டிலேயே இருந்துவிட்டாள். ஆனால் இந்த பெரிய வீட்டிலும் தனித்து இருக்க முடியவில்லை. அதனால் இங்கிருந்து செல்ல வழியை தேடினாள்.
ஆனால் இனி அவளால் திரும்பி செல்லவும் இயலாது. எந்த பிளைட் பிடிக்க வேண்டும்.. அதன் நேரம் போன்ற விபரங்கள் தெரியும். ஆனால் பயணத்திற்காக பணம் அவளிடம் இல்லை.
என்ன செய்வது என்று திணறலுடன் சுற்றிலும் பார்த்தவாறு நின்றிருந்தவளுக்கு.. தன்னை யாரோ உற்று நோக்குவது போன்று இருக்கவும், இதயம் சில்லிட்டது. அந்த திசையை பார்க்க தைரியமில்லாது.. அசையாது நேராக பார்த்தவாறு நின்றாள்.
அவளது காதுகள் கூர்மை பெற யாரோ மேல் தள படிக்கட்டில் மெல்ல இறங்கியவாறு அவளை துளையிடும் பார்வையுடன் வருவது தெரிந்தது. கூட வாசனை திரவியத்தின் நறுமணமும் வரவும், அகிலாவின் தந்தை குளித்து விட்டு வந்திருப்பார். தன்னைப் பார்த்ததும்.. ஏற்கனவே அவள் மீது வெறுப்பு கொண்டிருப்பதால்.. முறைத்திருப்பார் என்றுப் புரியவும், அதற்கு மேல் அங்கு நிற்க விருப்பமில்லாமல்.. நிமிர்ந்து பார்க்காமல் தலையை குனிந்தவாறே அங்கிருந்து அகன்றவள், நேராக தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.
படுக்கையில் சாய்ந்து படுத்தவள் கண்களை மூடிய அடுத்த கணம்.. அவளது அறையின் கதவு தட்டப்பட்டது. அகிலா இல்லாத போது.. யார் தனது அறையின் கதவை தட்டுவது என்றுத் திகைத்தாள். ஒருவேளை அகிலா இல்லாத இந்த நேரத்தில் அவளை இந்த வீட்டில் இருந்து அனுப்பி விடுவார்களோ! அதற்கு தான் வேலைக்காரர்கள் விட்டு தன்னை அழைத்து வரச் சொல்கிறார்களோ என்று அவளது எண்ணங்கள் சென்றன. இதுவுமே நல்லது தான் என்று அதிராவிற்கு பட்டது. சற்றுமுன் தான்.. இங்கிருந்து இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தாள். ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை. தற்பொழுது அகிலாவின் பெற்றோர்களும் அதே முடிவு எடுத்திருந்தார்கள் என்றால்.. அவர்களிடம் உதவி கேட்டு இந்தியாவிற்கு சென்று விட வேண்டியது தான்! இந்தியாவிற்கு சென்று பின்.. அதற்கான செலவை திருப்பி தந்து விட வேண்டும்.. என்று எண்ணமிட்டவாறு அதிரா மெல்ல எழுந்து சென்று கதவை திறந்தாள். ஆனால் அங்கு யாரும் இல்லாதிருப்பதை கண்டு திகைத்தவள், மெல்ல அறையை விட்டு வெளியே வந்து அகிலாவின் அறை பக்கம் எட்டிப் பார்த்தாள்.
அப்பொழுது "கதவு தட்டினா உடனே திறக்க தெரியாதா! நீ கதவு திறக்கிற வரை அங்கே நிற்க எனக்கு பொறுமை இல்லை.." என்ற குரல் அவளுக்கு பின்னால் இருந்து கேட்கவும், திடுக்கிட்டவளாய் திரும்பிப் பார்த்தாள்.
அங்கு தண்ணீர் பாட்டில் இருந்த நீரை வாயில் கவிழ்த்தவாறு அவளை நோக்கி ஒரு இளைஞன் வந்தான்.
அவனை பார்த்த மாத்திரத்தில்.. அவன் இந்த வீட்டின் வேலைக்காரன் அல்ல என்றுத் தெரிந்துவிட்டது. யார் இவன்? இந்த இளைஞனோ இவ்வளவு உரிமையோடு பேசுகிறேனே.. என்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே.. வாய் நிறைய நீரை வைத்தவாறு சிறிது சிறிதாக பருகியவாறு அவளை மேலிருந்து கீழாக பார்த்தபடி அருகில் நெருங்கியிருந்தான். அதிராவும் தன்னிசை செயல் போல்.. பின்னால் ஒரு எட்டு வைத்து சென்றாள்.
"யார் நீ?" என்று அவன் கேட்ட தோரணையில் அவளது வாய் தானே பதில் கூறியது.
"அகிலாவோட பிரெண்ட்.."
"வாட்! அகிலா பாய்பிரண்ட் வச்சுருப்பான்னு பார்த்தா.. கேர்ள் பிரெண்ட் வச்சுருக்கா.." என்று ஒரு மாதிரி பொருள்படும்படி கூறி குறுஞ்சிரிப்பு சிரித்தான்.
அதைக் கேட்டு அதிராவின் முகம் தானே சுருங்கியது.
அதிரா முகம் சுருங்குவது பார்த்து.. அவனது விழிகள் இடுக்கியது.
"நீ யாருன்னு கேட்டா.. உன்னைப் பற்றித் தானே சொல்லணும். அகிலாவோட பிரெண்ட் தான் உன் ஐடின்டியா!" என்றுச் சிரித்தவன், "யார் நீ?" என்று மீண்டும் கேட்டான். அவனது குரலில் சிறு இறுக்கமும் அழுத்தமும் காணப்பட்டது.
அவனது பேச்சில் இருந்த அர்த்தம் புரியாது.. இந்த வீட்டிற்கு ஒன்றாத தன்னை சந்தேகிக்கிறானோ என்று மனதில் சிறு பயம் தோன்ற "நான் அகிலா பிரெண்ட் தான்.." என்று முடிப்பதற்குள்.. அவன் "நீ அகிலா பிரெண்டாக இருக்க சேன்ஸேயில்ல! அவ பிரெண்டா இருந்திருந்தா என்னோட ஜோக்குக்கு சிரிச்சுருப்பே! அட்லீஸ்ட் என்கிட்ட வழிஞ்சுட்டு ஒட்டி நின்றுப்பே.." என்றுவிட்டு கடகடவென சிரித்தான்.
பின் "அகிலாவை பிரெண்ட்டா சூஸ் செய்தது ராங் சாய்ஸ்! அதை விட பேட் சாய்ஸ்.. அவ கூட இங்கே வந்தது." என்றுச் சிரித்தவன், தொடர்ந்து "பை த வே.. ஐயம் அர்ஜூன்! அகி இஸ் மை சிஸ்டர்.." என்றான்.
ஆசிரியர் பேசுகிறேன்:
நீங்க முக்கியமான வேலையா வெளியே நடந்து போயிட்டு இருக்கும் போது.. மழை பெயரதுக்கு அறிகுறியா.. சூரியனை மேகமூட்டம் மறைத்து.. காற்று நின்று போய்.. ஒரு மாதிரி மந்தமான க்ளைமேட் வரும் பார்த்திருப்பீங்க! அந்த க்ளைமேட் உங்களுக்கு அவ்வளவா இதம் தராது. இந்த கதையில் கதாநாயகன் கதாநாயகி சந்திப்பும் அப்படித்தானோ!
காதல் அடைமழை பெய்வதற்கான அறிகுறியோ!
- 1 Forums
- 10 Topics
- 16 Posts
- 0 Online
- 28 Members