தீ 19
அத்தியாயம் 12
மற்றவர்களை பாதுகாப்பாக மறைந்து இருக்க கூறிவிட்டு கரண் செல்லவும், நவ்யா அதிர்ச்சியுடன் எழுந்து நின்று அவனை அழைக்க எதானித்தாள். ‘என் உயிரை கொடுத்தாவது உன்னை காப்பாற்றுவேன்.’ என்று கரண் கூறியது வேறு நவ்யாவிற்கு.. நினைவிற்கு வரவும், அழைப்பதை விட.. அவனைத் தடுக்க வேண்டும் என்று அவனைப் பின் தொடர்ந்தாள்.
வருகிறவர்கள் யார் என்றுத் தெரிந்து தான் கரண் முதலில் செல்ல முடிவு எடுத்தான். ஆனால் அவனது கணிப்பு சரியாக இருந்தால்.. அவர்கள் தப்பிக்க அருமையான வாய்ப்பு! அல்லது அவனது கணிப்பு தவறாகவோ.. அவர்களது மனநிலை வேறாக இருந்தால்.. அவர்கள் மீண்டும் மாட்டிக் கொள்ள நேரிடும். இதில் மற்றவர்களை உள்ளே நுழைத்து இன்னொரு உயிர் இழப்பை அவர்களுக்கு தர மனமில்லாமல்.. அவனே சென்றுப் பார்க்க தீர்மானித்தான். ஆனால் நவ்யா அவனது பின்னோடு வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
“நவி! இங்கே எதுக்கு வந்தே! இங்கிருந்து போயிரு!” என்றுப் பிடித்து தள்ளி விட்டான்.
ஆனால் நவ்யா “என்ன செய்யறே நீ! நீயும் வா..” என்று மீண்டும் அவனது கரத்தைப் பற்றி இழுத்தாள். அப்பொழுது சாலையில் வந்துக் கொண்டிருந்த வாகனங்கள்.. இருபது அடி தொலைவில் நின்றது.
உடனே நவ்யா அச்சத்துடன் அவனுக்கு முன் வந்து நின்று “டொன்ட் சூட் அஸ்! வி ஆர் இன்னசன்ட்ஸ்!” என்று அழுதாள்.
ஜீப்பில் இருந்து குதித்த இராணுவ வீரர் ஒருவன் “இன்னும் நீ போய் சேரவில்லையா! நடுரோட்டில் என்ன செய்யறே! உன் கூட வந்தவங்க எங்கே? என்னாச்சு?” என்று விசாரித்தான்.
இராணுவ வீரன் தெரிந்தவன் போல்.. கரணிடம் பேசவும், நவ்யாவிற்கு அவர்களை அடையாளம் தெரியவில்லை. பயத்துடன் அவர்களைப் பார்த்துவிட்டு திகைப்புடன் கரணை பார்த்தாள்.
கரண் “எஸ்டர்டே.. நமக்கு பாதுகாப்பா இருந்தவங்க இந்த குரூப் தான் நவி!” என்று அவசரமாக அவளுக்கு பதிலளித்துவிட்டு இந்த இராணுவ வீரனிடம் பதட்டத்துடன் நடந்ததைக் கூறியவன், அவர்களை காப்பாற்றுமாறு கூறினான்.
கரண் கூறியதைக் கேட்ட இராணுவ வீரனுக்கு.. சற்று தொலைவில் இருந்த பள்ளத்தாக்கு பகுதியில்.. சண்டை நடைப்பெற்றது என்றுக் கூறியது தான் பெரிய விசயமாக பட்டது. உடனே மேலிடத்தை தொடர்பு கொண்டு.. விபரங்களை கூறிய பின்பே கரணிடம் மற்றவர்கள் எங்கே என்றுக் கேட்டான். கரண் வருமாறு அவர்களைப் பார்த்து கையசைக்கவும், அவர்கள் மெல்ல வெளிப்பட்டார்கள். அவர்களும் வந்து தங்களைக் காப்பாற்றி.. தங்களது நாட்டில் சேர்த்து விடுமாறு கெஞ்சினார்கள்.
அதற்குள் சில வீரர்கள் இறங்கி வந்திருக்கவும், அவர்களுடன் பேசிவிட்டு.. அவர்களில் நான்கு வீரர்களை உடன் அனுப்பவதாகவும்.. அவர்களுடன் செல்ல கூறியவர்கள்.. அவர்கள் இரஷ்ய குடிமக்கள் என்பதற்கான அடையாளத்தை காட்ட கூறினார்கள். அது இருந்தால் தான்.. பதட்டமான இந்த சூழ்நிலையில் நாட்டிற்குள் உள்ளே நுழைய முடியும் என்றுக் கூறினார்கள். அவர்கள்.. தங்களது உடைமைகளுடன் பேருந்தில் இருப்பதாக கூறவும், முதலில் அங்கு அழைத்துச் சென்று அதை அவர்கள் பார்த்த பின்பே அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறினார்கள்.
அதைக் கேட்டு அனைவரும் சந்தோஷப்பட்டார்கள்.. இருவரை தவிர!
அவர்களுக்கும் பின்பே நினைவு வர.. அனைவரும் கரண் மற்றும் நவ்யாவை பார்த்தார்கள்.
இம்முறை.. அவர்களுக்கு ஆதரவாக பேச எவரும் வரவில்லை. அதற்கு அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. எனவே கரண் பெருமூச்சுடன் முன்னே வந்து.. “நாங்கள் இந்த சர்க்கஸ் குரூப்பை சேர்ந்தவங்க இல்லை. உயிருக்கு பயந்துட்டு பொய் சொன்னோம். நாங்க இந்தியாவை சேர்ந்தவங்க தான்! ஆனா எங்களோட ஐடென்ட்டி உக்ரைனில் தான் இருக்கு! நான் அங்கே வொர்க் செய்கிறே என்ஜீனியர்! இவ அங்கே படிக்க வந்த.. டாக்டர்! பட் நாங்க லவ்வர்ஸ் என்பது உண்மை தான்! ப்ளீஸ் ஹெல்ப் அஸ்! எங்க கிட்ட இரஷ்யன் ஐடென்ட்டி இல்லை. வொர்க்கிங் பாஸும் இல்லை. இரஷ்யாவிற்கு டுரிஸ்ட்டா வந்ததிற்கான எந்த ப்ரூஃப்பும் இல்லை. இல்லைன்னா கூட மிஸ்ஸிங் என்று சமாளிக்கலாம். ஆனா கெடு கேட்ட கம்யுட்டர் உண்மையை சொல்லிரும். ப்ளீஸ் ஹெல்ப் அஸ்!” என்றான்.
அவர்களது முகத்தில் யோசனை படர்ந்தது.
பின் முதலில் பேசியவன் “உங்களை எங்க நாட்டிற்கு அழைத்துச் சென்றால்.. விபரீதம் ஆகிடும்.” என்றான்.
எதை விபரீதம் என்றுக் குறிப்பிடுகிறார் என்று கரணுக்கு தெரிந்ததால்.. என்ன பதில் சொல்ல போகிறார் என்றுச் சிறு பதட்டத்துடன் நின்றிருந்தான்.
அவர் சிறு அமைதிக்கு பின்.. “இப்படி வேண்டுமென்றால் செய்யலாம். உங்களோட ஐடென்ட்டி உக்ரைனில் தானே இருக்கு! அவங்க கிட்ட பணய கைதியாக உங்களை ஒப்படைக்கிறேன். ஆனால் அங்கே என்ன நிலவரம் நிலவுகிறது என்று எங்களுக்கு தெரியாது. அங்கே உங்களோட பாதுகாப்பிற்கும் நாங்க உத்திரவாதம் கொடுக்க முடியாது.” என்றான்.
கரண் உடனே நிம்மதியும் மகிழ்ச்சியுமாக சம்மதித்தான்.
உடனே மற்றவர்களை ஏற்றிக் கொண்டு நான்கு வீரர்கள் கொண்ட ஒரு வேன் புறப்பட்டது. அவர்கள் இருவரையும் மட்டும் விட்டு.. மற்றவர்கள் செல்லவும், நவ்யா அச்சத்துடன் கரணை உலுக்கினாள்.
“கரண்! அவங்க நம்மளை விட்டுட்டு போறாங்க!”
கரண் “அவங்க இரஷ்யா போகிறாங்க நவி! இரஷ்யன் சிட்டிஷேன்ஸிற்கு மட்டும் தான் பர்மிஷன்! அவங்களுக்குமே ஐடிடென்ட்டி கேட்கிறாங்க! நம்ம ஐடென்ட்டி உக்ரைன்ல இருக்கு! நாம் இப்போ கார்கீவ் பார்டருக்கு போக போகிறோம். அங்கிருந்து நான் உனக்கு முதலில் ப்ராமிஸ் செய்த மாதிரி.. இந்தியன் அம்பஸில உன்னை சேர்த்துருவேன்.” என்றான்.
மலர தொடங்கிய நவ்யாவின் முகம்.. சுருங்கியது.
“அப்போ நீ?!” என்றுக் கேட்டாள்.
கரண் “நான் கண்டிப்பா உன் கூட வரேன் நவி! நீ இந்தியாவிற்கு சேஃப்பா போய் சேருவே என்ற கெரண்டி கிடைக்காம நான் உன்னை விட்டு போக மாட்டேன். அதுக்கு பிறகு.. விதி என்னை எங்கே அனுப்புகிறது என்றுப் பார்க்கலாம்.” என்று விரக்தியான குரலில் கூறினான்.
அவனது விரக்தியின் அர்த்தம் புரியப்பட நவ்யா “வேண்டாம் கரண்! நம்மளை வேற எங்காவது விட்டுர சொல்லு! அங்கே உன் ஐடென்ட்டியை செக் செய்தா நீ மாட்டிப்பே!” என்று பதட்டத்துடன் கூறினாள்.
அதற்குள் “ஜீப்பில் ஏறுங்கள்!” என்று அதட்டவும், தயங்கி நின்ற நவ்யாவின் கரம் பற்றி ஜீப்பில் அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டான்.
நவ்யா தவிப்புடன் கரணை பார்க்கவும் கரண் “இப்போ உனக்கு அதுதான் சேஃப்பான பிளேஸ் நவி! உன்னை பத்திரமா இந்தியாவிற்கு அனுப்பி வைப்பாங்க! மற்ற நாட்டு கிட்ட நல்ல பெயர் வாங்கணுமே! அப்போ தான் அவங்களுக்கு சப்போர்ட் செய்வாங்க! அந்த ரிஷன் உன்னை சேஃப் செய்யும்.” என்றான்.
அதற்கு நவ்யா “என்னை மட்டும் தான் அனுப்புங்களா! உன்னையும் அப்படி அனுப்ப மாட்டாங்களா?” என்றுக் கேட்டாள்.
கரண் “தெரியலை!” என்றுத் தோள்களைக் குலுக்கினான்.
நவ்யா “சரி நான் மட்டும் போயிக்கிறேன். நீ கார்கீவ்விற்கு போனதும்.. எப்படியாவது தப்பிச்சு போயிரு!” என்றாள்.
அதற்கு அவளை உதட்டோரம் துடித்த முறுவலுடன் பார்த்தான். அவனது முறுவலுக்கு அர்த்தம் புரிந்த நவ்யா “அப்படித்தானே.. நாம் முதலில் பேசிட்டோம். நாம இரண்டு பேரும் சேர முடியலைன்னா! நீ எங்கிருந்தாலும் நல்லாயிருக்கணும். நான் எங்கிருந்தாலும் நல்லாயிருக்கணும். ஆனா இப்படி நீ ஒரு இடத்தில மாட்டிக்கிட்டு.. நான் மட்டும் நல்லாயிருக்க நான் ஒத்துக்க மாட்டேன்.” என்று வெடித்தாள்.
அதற்கு கரண் “கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி.. எதையும் பற்றியும் யோசிக்காம என்னைக் காப்பாற்ற வந்தியே! அது மட்டும் எனக்கு ஒகேவா இருந்துச்சு என்று நினைக்கறீயா!” என்றான்.
அப்பொழுது அங்கிருந்த மற்றொரு இராணுவ வீரன் அமைதியாக வருமாறு அதட்டவும், கரண் நவ்யாவின் கரத்தை அழுத்தி இமைகளை மூடி அமைதிப்படுத்தினான். நவ்யா விசும்பியவாறு அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
அதன்பின் அவர்களிடையே பேச்சில்லை.
ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி அமைதியாக வந்தார்கள். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்றுத் தெரியாது. எனவே அவர்களுடன் அமர்ந்திருந்த இராணுவ வீரர்களை அடிக் கண்ணால் எச்சரிக்கையுடன் பார்த்தவாறு தான் கரண் வந்தான்.
சிறிது தொலைவு சென்றதும்.. ஜீப் நின்றது, ஏன் என்று குழம்பியவாறு அவர்கள் பார்க்கும் போதே.. இருவரையும் ஜீப்பில் இருந்து தள்ளிவிட்டார்கள். பின் அந்த ஜீப் வேகமெடுத்து சென்றது.
தடுமாறி விழுந்தவளைப் பற்றி எழுப்பிய கரண்.. சுற்றிலும் பார்த்தான். அங்கு கையில் துப்பாக்கி ஏந்திய உக்ரைன் நாட்டு இராணுவ வீரர்கள்.. இவர்களை குறி வைத்தவாறு ஓடி வந்தார்கள்.
நவ்யாவை கரங்களை உயர்த்த கூறிய கரண்.. தானும் கரங்களை உயர்த்திக் கொண்டு “ப்ளீஸ்! எங்களை சுட்டு விடாதீர்கள்! நாங்கள் இந்தியர்கள்! இவள் இங்கே படிப்பு சம்பந்தமாக வந்திருக்கிறாள். நான்.. ஒரு என்ஜீனியர்! வொர்க் விசயமா நான் உக்ரைன்ல ஸ்டே செய்திருக்கேன்.” என்றுவிட்டு.. நவ்யா பயிற்சி எடுத்த.. மருத்துவமனையை பற்றியும்.. அவன் வேலை செய்த நிறுவனத்தை பற்றிய விபரங்களைக் கூறினான்.
ஆனாலும் கரண் மற்றும் நவ்யாவின் மேல் இரஷ்ய உளவாளிகளோ என்று சந்தேகம் கொண்டவர்கள்.. துப்பாக்கி முனையிலேயே அழைத்துச் சென்றார்கள். முற்றிலும் மூடப்பட்ட வண்டியில் அவர்களை அழைத்துக் கொண்டு வெகுநேரம் பயணம் செய்தார்கள். முடிவில் ஒரிடத்தில்.. வண்டி நின்றதும்.. இருவரும் இறக்கப்பட்டார்கள்.
சுற்றிலும் பார்த்தவர்களின் விழிகள் திகைப்பில் விரிந்தது.
ஏனெனில் கடந்த இரு நாட்களாக காடுகளையும், பரந்தவெளியையும்.. இராணுவ வாகனங்களில் உறுமல்களையும், துப்பாக்கி குண்டின் சத்தத்தையும், ஷுக்களின் சத்தத்தையும் மட்டுமே கேட்டிருந்தவர்கள்.. கட்டிடங்கள் நிறைந்த நகர பகுதியையும்.. மற்ற மனிதர்களின் ஆட் நடமாட்டத்தை பார்த்தார்கள். அவர்களுக்கு கார்கீவ் நகரத்திற்கு வந்துவிட்டோம் என்ற நிம்மதி ஏற்பட்டது. கூடவே இருவரின் மனதிலும் சிறு திகில் ஏற்பட்டது.
அவர்களை கார்கீவ்வின் இராணுவ துறை கட்டிடத்திற்குள் அழைத்துக் கொண்டு சென்றவர்கள், அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்லாமல்.. கீழ் தளத்திற்கு செல்லும் படிக்கட்டில்.. அழைத்துச் சென்றார்கள். கரணுக்கு எங்கே அழைத்துச் செல்கிறார்கள்.. என்ற அனுமானம் இருந்தது. எனவே திடத்துடன் நவ்யாவின் கரத்தை இறுக பற்றிக் கொண்டான்.
அவன் நினைத்தது போல் பிணை கைதிகள் அடைக்கப்பட்டிருந்த ஜெயிலுக்கு அழைத்து சென்றான்.
கரண் “எங்களை எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்தீங்க! நாங்க.. இந்த நாட்டுக்காரங்க இல்லை. இரஷ்யன் நாட்டுக்காரங்களும் இல்லை. இந்தியன் அம்பஸியை நாங்க பார்க்கணும். எங்களை இந்தியாவிற்கு போக ஏற்பாடு செய்யுங்க! எங்களை எப்படி இவங்க கூட அடைத்து வைக்கலாம்.” என்று சத்தம் போட்டான்.
அதற்கு அவனது தலையில் கையை வைத்து.. ஜெயிலுக்குள் தள்ளியவன் “நீ சொன்ன விபரங்களை விசாரிக்கிற வரை.. நீங்க இங்கே தான் இருக்கணும்.” என்றுவிட்டு பூட்டிவிட்டு சென்றான்.
அவர்களை அடைத்துவிட்டு ஒரு மணி நேரம் கடந்த பின்பும்.. யாரும் வரவில்லை. கரண் அடிக்கடி கம்பியிடம் நின்று எட்டிப் பார்ப்பதும்.. சோர்வும் அச்சமுமாக அமர்ந்திருக்கும் நவ்யாவிற்கு.. தைரியம் கூறுவதுமாக இருந்தான்.
அவ்வாறு எட்டிப் பார்த்துவிட்டு.. சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்த.. நவ்யாவிடம் வந்தவன் “ஹெ நவி! ஒருவேளை நாம ஒண்ணா இருக்கிறது இதுதான் கடைசி என்று ஆகிட்டா.. நீ இப்படி முகத்தை வச்சுட்டு இருக்கிறது தான்.. நான் கடைசியாக பார்க்கிற உன் முகமா இருக்கணுமா! ப்ளீஸ்டா! சிரி.. சந்தோஷமா இரு!” என்றான்.
ஆனால் நவ்யா முகத்தை திருப்பாமல் சுவற்றை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.
கரண் “ப்ளீஸ் நவி! நிதர்சனத்தை ஏற்றுக்கோ! தீ ஊற்றி பூ மலராது. இது தீக்காடு நவி! நம்ம காதல் இதற்கு மேல் வளர்வது கஷ்டம் தான்!” என்றான்.
கரண் கூறியதைக் கேட்டு சத்தம் போட்டு அழத் துடித்த மனதை அடக்கியபடி.. இராணுவ வீரர்கள் வந்து என்ன கூறுவார்களோ என்றுப் பயத்துடன் நவ்யா அமர்ந்திருந்தாள்.
கரண் அவளது தலையை வருடியவாறு “நவி! ஒருவேளை நான் பண்ண க்ரைமிற்கு என்னை அரெஸ்ட் செய்துட்டா நீ அமைதியா போயிரணும். கத்தி ஆர்ப்பட்டாம் செய்ய கூடாது.” என்றான்.
அதைக் கேட்டு திரும்பியவள், அவனை முறைத்தாள். அவளது மூக்கு நுனியில் சிறு முத்தமிட்டவன், தொடர்ந்து “அப்படி நீ கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால்.. நான் உன் வாயை அடைப்பேன். எப்படியினு தெரியும் தானே!” என்று குறும்புடன் கேட்டவனின் கண்கள் கலங்கியது.
நவ்யாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. இருவரும்.. பழைய நினைவுகளில்.. ஆழ்ந்திருந்தார்கள்.
அப்பொழுது இருவர் வந்தார்கள்.. ஒருவன் ஆங்கிலத்தில் “மிஸ் நவ்யா! உங்க ஐடென்டென்டி செக் செய்துட்டோம். நீங்க வரலாம். உங்க கூட படிக்க வந்தவங்க! அம்பஸி கார்ட்ஸ் பாதுகாப்பில் கவுர்மென்ட் ஆபிஸில்.. தான் தங்கியிருக்காங்க! அவங்களுக்கு.. இன்னும் நாலு மணி நேரத்தில் இந்தியாவிற்கு பிளைட் இருக்கு! நீங்களும் அவங்க கூட ஜாயின்ட் ஆக.. உங்களுக்கு பர்மிஷன் கிடைச்சுருக்கு..” என்றான்.
அதைக் கேட்டு கரண் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. நவ்யாவை அணைத்து “நான்தான் சொன்னேனே! நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி! எல்லாவற்றிற்கும் மேலே.. நீ பயந்த மாதிரி.. உன் பிரெண்ட்ஸிற்கு ஒண்ணும் ஆகலை. இனி உனக்கு எல்லாம் சரியாக தான் நடக்கும் நவ்யா! கோ நவி! கோ!” என்று ஆர்ப்பரித்தான்.
மகிழ்ச்சியுடன் ஆம் என்று தலையை ஆட்டிய நவ்யாவின் முகத்தில் சிறு யோசனையும் படர்ந்தது. அவளது முகத்தைப் பார்த்த கரண் “நோ நவி!” என்று தடுப்பதற்குள்.. அவளை அழைத்துக் கொண்டு போக வந்தவர்களிடம் திரும்பி ஆங்கிலத்தில் “இவரும் தானே என் கூட வருவார்?” என்றுக் கேட்டாள்.
அதற்கு அவன் “நோ மிஸ்! உங்களை மட்டும் தான் அழைத்துக் கொண்டு வருமாறு ஆர்டர்!” என்றான்.
நவ்யாவிற்கு திக்கென்று இருந்தது. எது நடக்க கூடாது என்று நினைத்தாளோ அது நடந்துவிட்டது.
அவனுடன் வந்த இன்னொருவன் திடுமென கையில் வைத்திருந்த துப்பாக்கி கொண்டு கரணை அடித்தான்.
பின் “இரண்டு கொலையை செய்துட்டு.. தப்பியோட பார்க்கிறாயா! இதுல இவங்க கூட அடைச்சு வைக்க கூடாது என்று என்கிட்டவே சண்டைக்கு வேற வரீயா! உனக்கு வேற ஸ்பெஷல் ஜெயில் காத்துட்டு இருக்கு!” என்று மீண்டும் அடிக்க போனான்.
அதற்குள் அவர்களுக்கு இடையில் புகுந்த நவ்யா “அவரை அடிக்காதீங்க! அவர் செய்தது குற்றம் என்றால்.. இங்கே நடந்துட்டு இருப்பதும் குற்றம் தான்! நீங்களும் கொலை தானே செய்துட்டு இருக்கீங்க! அடுத்த நாட்டு ஆர்மிஸ் பீப்பிளை மட்டுமில்லை. எத்தனை அப்பாவி உயிர்களை பறிச்சுருக்கீங்க தெரியுமா! அதுவும் கொலை தானே! ஆனா இவர் கொன்றது அப்பாவிகளை அல்ல! இவரை அரெஸ்ட் செய்ய நான் விட மாட்டேன்.” என்று கரண் குறுக்கிட முயன்றதை கண்டுக்கொள்ளாமல் நவ்யா படபடவென பேசிக் கொண்டே போகவும், கரண் சட்டென்று அவளது முகத்தை பற்றித் திருப்பி அவளது இதழ்களில் தனது வலிய உதடுகளை அழுத்த பதித்து அவளது பேச்சை நிறுத்தினான்.
கண்களில் கண்ணீர் வழிய.. அவனது உதடுகளோடு பூட்டி கொண்ட தனது இதழ்களை விடுவிக்கும் எண்ணம் இல்லாமல் நவ்யா நின்றிருந்தாள்.
சிறிது நேரத்திலேயே அவளது இதழ்களுக்கு விடுதலை கொடுத்த கரண் “நான் கிஸ் செய்யணும் என்றுத் தானே! நீ பேசினே..” என்று விளையாட்டாய் பேசி.. அவளைச் சமாளிக்க நினைத்தான். ஆனால்.. நவ்யா கண்களில் கண்ணீர் வழிய உள்ளம் உருக அவனைப் பார்க்கவும், தனது பார்வையை திருப்பிக் கொண்ட கரண் “அதிகம் பேசி.. உனக்கு கிடைத்த சான்ஸை கெடுத்துக்காதே நவி! ஜஸ்ட் கோ! என்னைத் திரும்பியும் கூடப் பார்க்காதே!” என்றான்.
அதற்குள் “மிஸ் நவ்யா! எங்க கூட வர ஐடியா இருக்கா?” என்றுக் கேட்கவும், அவசரமாக கரண் “அவள் வருவாள்.. ப்ளீஸ் கூட்டிட்டு போங்க! அவளுக்கு காதல் கண்ணை மறைக்குது. ப்ளீஸ் கூட்டிட்டு போங்க..” என்றான்.
அதற்கு நவ்யா “ஐ ஹெட் யு கரண்!” என்றுத் திடுமென கத்தினாள்.
பின் “என்னை கடைசில சுயநலம் பிடித்தவள் ஆகிட்ட இல்ல! இதுதான் தெய்வீக காதல் என்றால்.. என் காதல்.. சாதாரணமான காதலாகவே இருந்துட்டு போகட்டும். ஒய் கரண் ஒய்! கேட்டா.. இதுக்கு தான் ஆரம்பித்தில் இருந்தே என்னை லவ் செய்யாதேனு சொன்னேன்னு சொல்லுவே! நான் ஒரு டாக்டர்.. எனக்கே நீ செய்த கொலைகள் நியாயமா தெரியுதே.. இந்த ஆபிஸர்ஸிற்கு தெரியாதா!” என்றுக் கதறினாள்.
கரண் வாயைத் திறந்தால்.. அழுது.. அவளது கிளம்புவதை இன்னும் சிக்கல் ஆக்கி விடுவோமோ என்று அமைதியாக நின்றான்.
பின் நவ்யா கண்களை அழுத்த துடைத்தவாறு “சரி கரண்! நான் போகிறேன். ஆனா என்னால் இன்னொரு லவ், மேரேஜ் எல்லாம் செய்ய முடியாது. உனக்காக வெயிட் செய்துட்டு இருப்பேன். நீ வந்தே ஆகணும்.” என்றுவிட்டு அவருடன் செல்ல இரு எட்டுக்கள் எடுத்து வைத்தவள் “என்னால் உன்னை விட்டுட்டு போக முடியலை கரண்!” என்று அழுதவாறு அமர்ந்துவிட்டாள்.
திரும்பியும் கூடப் பாராமல் செல்.. என்றுக் கூறியவன், அவள் திரும்பி இரு எட்டுக்கள் எடுத்த வைத்த அரை நொடி கால அளவை கூட அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கம்பிகளை பிடித்தவாறு “நவி!” என்றழைத்தவன், “நான் வருகிறேன் நவி! நமக்காக நான் வருகிறேன் நவி! இந்தியாவிற்குள்.. குற்றம் சுமத்தப்பட்டவனா வர விரும்பாமல் தான்.. வர மறுத்தேன். என் மேலே இருக்கிற க்ரைமை கிளியரை செய்யாம இத்தனை நாட்கள் ஓடி ஒளிஞ்சுருக்கேன். இப்போ நான் இந்தியாவுக்குள்ள.. என் மேலே சுமத்திய குற்றத்தை கிளியர் செய்துட்டு தான் வருவேன். என் பெரெண்ட்ஸ் முன்னாடியும்.. உன் பெரெண்ட்ஸ் முன்னாடியும் கௌரவத்தோட தான் வருவேன். அதுக்காக இத்தனை நாட்கள் போரடினது இல்லை. இனி செய்வேன் நவி! எனக்காக வெயிட் பண்ணு!” என்றுக் கத்தினான்.
கரண் கூறியதைக் கேட்டு.. கண்களை துடைத்தவாறு எழுந்த நவ்யா “இது போதும்.. கரண்! நீ சொன்ன அதைச் செய்வே! நீ வருவே என்ற நம்பிக்கையோட போறேன்.” என்றுவிட்டு அவனைத் திரும்பி திரும்பிப் பார்த்தவாறு சென்றாள்.
இந்தியன் அம்பஸிக்கு வந்தததும்.. அவள் முதலில் கேட்டது.. கரணை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுத் தான்! கரணை பற்றிய கோப்பை கம்யூட்டரில் தேடிப் பார்த்தவர், “இவரைத் தான்.. ஆறு மாதங்களுக்கு முன் உக்ரைன் நாட்டு போலீஸ் தேடினாங்க! அது மட்டுமா.. எங்களுக்கு இவனைக் கண்டுப்பிடித்து தருமாறு நெருக்கடி கொடுத்தாங்க! இந்தியாவிற்கு வந்து விசாரிச்சுட்டு கூடப் போனாங்க! இவனை இப்போ விடுவாங்களா! அதுவும் இந்த சிட்டிவேஷனில் கண்டிப்பாக மாட்டாங்க!” என்றார்.
நவ்யா “இங்கேயும் கொலைகள் தானே நடந்துட்டு இருக்கு!” என்றாள்.
அதற்கு அவர் எரிச்சல் மிகுந்த குரலில் “இது போர் அதுவும் இதுவும் ஒன்றே! அவன் செய்தது திட்டமிட்ட கொலைகள்!” என்றார்.
நவ்யா “அப்போ ஆர்மிஸ் ஒருத்தரை ஒருத்தர் சுட்டுக்க வேண்டியது தானே! எதுக்கு அப்பாவி சனங்க மேலே கையை வைக்கிறாங்க! பழிக்கு பழி என்ற பெயரில் மோசமான கொலைகள் அதுவும் கொடூரமாய் பெண்களையும் ஆண்களையும் டார்ச்சர் செய்து கொன்று குவிச்சுருக்காங்க! இதுக்கு பேர் போரா! இந்த கொடுமை எல்லாம் நான் நேரில் பார்த்துட்டு வந்திருக்கிறேன்.” என்று குமைந்தாள்.
அவர் மேலும் எரிச்சலுடன் “இப்போ எல்லாரும் உயிரோட ஊர் போய் சேரலாமா வேண்டாமா! அவங்க அரெஸ்ட் செய்து வைத்திருக்கிற ஆளை விடுவிக்க சொல்லி கேட்டு.. எல்லாரையும் பிடிச்சு வைக்கிறதுக்கா! உன் கூடச் சேர்ந்து எல்லாரையும் மாட்டி வைக்க போகிறே!” என்றார்.
அதற்கு மேல் பேச முடியாமல் விக்கித்து நின்றாள். அவளது வாழ்வு மட்டும் என்றால் பரவாயில்லை. இவர் மற்றவர்களையும் அல்லவா பாதிப்பார்கள் என்றுக் கூறுகிறார். எனவே அமைதியாக அவர்கள் அழைத்து சென்ற இடத்திற்கு சென்றவளின் உடல் மட்டும் தான் அங்கே இருந்தது. அவளது நினைவுகள் முழுவதும் கரணை சுற்றியே இருந்தன.
ஹால் ஒன்றுக்கு அழைத்து சென்றார்கள். அங்கே அவளது நண்பர்களை கண்டதும் அவள் அழுதே விட்டாள்.
புகைக்குள் பேருந்து புகுந்ததை தான் அவள் கடைசியாக பார்த்தாள். இவர்களது நிலை என்னவாகிற்று.. என்று பல்வேறு அச்சத்துடன் இருந்தவள், சில காயங்களுடன் அனைவரையும் உயிருடன் பார்த்ததில் மகிழ்ந்தாள்.
புகைக்குள் புகுந்த பேருந்தை டிரைவர் கடைசி நேரத்தில் திருப்பி அருகே இருந்த கார் ஒன்றில் இடித்து நின்றுவிட.. சிறு காயங்களுடன் அனைவரும் தப்பித்தார்கள்.. என்றும் பின் பேருந்தை தங்கியிருந்த ஹோட்டலுக்கே திருப்ப கூறிய பொழுது தான் நவ்யா அங்கு இல்லாதிருப்பதை கண்டார்கள் என்றும்.. ஆனால் இறங்கி அவளைத் தேட முடியாது நிலையை கூறி வருந்தினார்கள். பின் இந்த நான்கு நாட்களாக எங்கே இருந்தாள்.. என்றுக் கேட்டதும்.. பொங்கிய அழுகையை அடக்க முடியாமல் கரண் அவளைக் காப்பாற்றி அழைத்துச் சென்று தங்க வைத்ததில் இருந்து.. அனைத்தையும் கூறினாள். இறுதியில் அலுவலரிடம் அவனை மீட்க போராடியது கூறி அழுதாள்.
அவர்களுக்கும் என்ன பதில் கூறுவது என்றுப் புரியவில்லை. மிருதுளா ஆறுதலாக அவளது தோழியின் முதுகை வருடிக் கொடுத்தாள்.
அவர்களது லெக்சரர் கமலம் முன்னே வந்து.. “இந்த நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது நவ்யா! நீ எப்படி கேட்டாலும் அவங்க பதில் இதுவாக தான் இருக்கும். நாம் இந்தியாவிற்கு போய்.. நம்ம கவுர்மென்ட் மூலம் நடவடிக்கை எடுத்தால்.. பலன் கிடைக்கும்..” என்றுத் தேற்றினார். போர் நடந்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்.. கரண் ஜெயிலுக்குள் இருப்பது பாதுகாப்பானது தான்.. என்று அவளைச் சமாதானப்படுத்தினார்கள்.
ஆனால் நவ்யாவிற்கு.. அவள் வருவதற்கு முன்.. காவலர் கரணை அடித்தது தான் நினைவிற்கு வந்தது. எனவே மனம் தேறாது அழுதாள்.
ஒருவழியாக இந்தியாவை சென்றடைந்தார்கள். கண்களில் கண்ணீருடன் அவளை வரவேற்ற.. பெற்றோரை பார்த்ததும்.. உலகத்திலேயே நிம்மதியான இடம் எது என்று அவளுக்கு புரிந்தது. அதனால் தான்.. தான் கரணுடன் வேற நாட்டிற்கு வருகிறேன்.. என்றுக் கூறிய போதெல்லாம் மறுத்து.. அவளது பெற்றோர்களுடன் இருக்க வேண்டும் என்றுக் கூறியிருக்கிறான். அன்றே தனது பெற்றோர்களிடம் கரணை காதலிக்கும் விசயத்தை கூறி.. அவன் தற்பொழுது மாட்டிக் கொண்டிருக்கும் விசயத்தையும் கூறி அழுதாள்.
மகளின் மனநிலை புரிந்தவர்கள்.. அவளை அழைத்துக் கொண்டு உக்ரைன் அம்பஸி மற்றும் இந்திய வெளியுறவு துறை போன்ற அலுவலகங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ஒரு கொலைக்காரனுக்கு உதவ முடியாது என்றும் அவன் தண்டனை அனுபவிப்பது சரிதான் என்றார்கள். பதறிப் போன நவ்யா அவர்களிடம் அங்கே வாதாடியது போல் பேசிப் பார்த்தாள். அப்பொழுதும் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. எனவே தொண்டு நிறுவனங்களை நாடினாள். அவர்களும் அதே பதிலை கூறினார்கள். அடுத்த ஊடகத்தினரை அணுகினாள். அவள் கூறியதை அவர்களது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டவர்கள்.. கரணை வெளிக் கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு நடுவில் கரணின் ஊருக்கு சென்று அவளது குடும்பத்தினரை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டு வந்தாள். கரண் ஜெயிலில் இருப்பதைக் கூறி.. அவர்களை வேதனையில் ஆழ்த்த விரும்பவில்லை.
அவள் மீது அக்கறை கொண்ட சிலர்.. தனியாக வழக்கறிஞர் வைத்து.. முயற்சிக்கலாம் என்றுக் கூறினார்கள். ஆனால் மகளின் மருத்துவ படிப்பு மற்றும் வெளிநாட்டு பயிற்சிக்கு என்று வைப்புநிதியை கரைத்துவிட்ட மத்திய தரப்பு குடும்பத்தை சேர்ந்தவர்களால்.. வெளிநாட்டில்.. இன்னொரு வழக்கறிஞரை வைத்து வாதாடும் அளவுக்கு பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. நண்பர்கள் பணம் திரட்டி.. அவளை அங்கே அனுப்ப தயாராக இருந்தார்கள். ஆனால்.. இன்னும் யுத்தம் நடந்துக் கொண்டிருக்கும் நாட்டிற்கு விசா கிடைக்கவில்லை. நவ்யாவின் பெற்றோர்களுக்கு மகளை அனுப்பவும் மனமில்லை.
உக்ரைன் நாட்டில் இருந்து வந்த இந்த ஒரு வருடத்தில் தன்னால் ஆனா எல்லா வழிகளையும் முயன்று
விட்டு.. கடைசியாக நான் வருவேன் காத்திரு.. என்று கரண் கூறிய வார்த்தையை கெட்டியாக பிடித்துக் கொண்டு நம்பிக்கையுடன் வாழ்க்கையை ஓட்டினாள்.
மற்றொரு வருடமும் கடந்தது.
- 1 Forums
- 20 Topics
- 46 Posts
- 0 Online
- 29 Members
