தீ 16
அத்தியாயம் 16
நவ்யாவின் இதழ்களில் இருந்து தனது உதடுகளை மெல்ல பிரித்துவிட்டு நிமிர்ந்த கரணை விழியகல பார்த்தாள். அவளது பார்வையை பார்த்த கரண்.. முறுவலித்துவிட்டு அவளது இமைகளின் மேல் முத்தமிட்டான்.
பின் “ஸாரி நவ்யா! என்னோட லவ் உனக்கு இப்படி ஷாக் கொடுக்குமினு நினைச்சு பார்க்கலை.” என்றுச் சிரித்தான்.
நவ்யாவிடம் இருந்து பதிலில்லை. ஆனால் அவளது விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அது ஆனந்த கண்ணீர் என்றுத் தெரிந்திருந்த கரண்.. சட்டென்று அவளது பின்னந்தலையில் கையை வைத்து அவளது முகத்தை இழுத்து தனது மார்பில் வைத்து அழுத்திக் கொண்டான். அவளும் அவனது மார்பில் பாந்தமாய் அழுத்தமாக முகத்தை புதைத்துக் கொண்டாள்.
பின் மெல்ல நவ்யாவே நிமிரவும், கரண் “வேண்டாம் நவ்யா! இந்த காதலுக்கு அவ்வளவு ஹோப் வச்சுக்காதே! நம் காதல் நிறைவேறாது. அதுனால தான் முதலில் இருந்தே மறுத்துட்டு இருந்தேன். முதலில்.. உன் மேலே இருக்கிற அக்கறையால.. மறுத்தேன். அப்பறம்.. உன் மேலே தோன்றுக் கூடாது என்று நினைச்ச காதல் உணர்வுடன் உன் காதலை மறுப்பதில் திடமாக இருந்தேன் நவ்யா! எனக்கு தோன்றிய உணர்வு காதலா இருக்க கூடாதுனு.. எனக்கு நானே எத்தனை தரம் சொல்லிக்கிட்டேன் தெரியுமா! இது வெறும்.. அக்கறை.. உனக்கு நான் செய்துக் கொடுத்த ப்ராமிஸ்.. அதுவும் இல்லைன்னா மனிதாபிமானம் என்று எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். ஆனா என்னோட இன்னொரு மனசு.. அட முட்டாளே.. இது காதல் தான் என்றும் சொல்லிட்டு இருந்துச்சு! இப்போ பார்.. அடக்க முடியாம வெளியே வந்திருச்சு..” என்றுச் சிரித்தவன், தொடர்ந்து “ஆனா நோ யூஸ் நவ்யா! இந்த காதல் நிறைவேறாது. இந்த காதல் உனக்கும் எனக்கும் வந்திருக்க வேண்டாம்.” என்று முறுவலித்தவனின்.. உள்ளம் கசந்தது.
நவ்யா குழப்பமும் திகைப்புமாக பார்க்கவும்.. கரண் "இன்னும் நான் அதே கொலைக்காரன் தான்! இந்தியாவிற்கு வந்தாலோ.. இங்கே காவல்துறையினரின் கண்ணில் பட்டாலோ.. எனக்கு கடும் சிறை வாசம் உறுதி! பிகாஸ் நான் கொன்ற இருவரும் மேரேஜ் ஆனவங்க.. அவங்களுக்கு குழந்தைகளும் இருக்கு! ஆனா அவங்க இராட்சஷர்களுன்னு கோர்ட் ஒத்துக்காது. நான் செய்தது குற்றம் தான்னு சொல்வாங்க.." என்று தலைகுனிந்தான்.
பின் தொடர்ந்து "நான் ஓடி ஒளிந்து.. என்னோட அடையாளத்தை மறைத்தால் தான் என்னால வாழ முடியும். அதற்கும் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது வரும். நீ என் கூட வாழ்வது என்றால்.. இப்படித்தான் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது வரும். நிம்மதியா டாக்டர் தொழிலை பார்த்துட்டு வாழ முடியாது. உன் அப்பா அம்மா கூடவும் இருக்க முடியாது. இந்த வாழ்வு உனக்கு வேண்டாம் நவ்யா! இப்போ நீ இந்தியாவிற்கு தனியாக போய் தான் ஆகணும். இப்போ சொல்லு.. இன்னும் என்னை லவ் செய்யறீயா?” என்றுக் கேட்டவனின் கண்களில் எவ்வித உணர்ச்சியும் இல்லை. எத்தகைய பதிலாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தான்.
அவன் கூறியதைக் கேட்டு தலைகுனிந்தவளைப் பார்த்து.. முறுவலித்தவன், அவளது கன்னங்களை பற்றி.. தனது முகத்தைப் பார்க்க வைத்த கரண் “ஹெ! என் கூட வரீயானு நான் கேட்கலை. அதில் இருக்கிற கஷ்டத்தை தான் சொல்லிட்டேனே! இன்னும் என்னை லவ் செய்யறீயானு தான் கேட்டேன். நான் எதிர்பார்க்கிற பதிலை சொன்னால் ரொம்ப சந்தோஷப்படுவேன். நான் எதிர்பாராத பதிலை சொன்னால்.. உன்னை கண்டிப்பாக மகிழ்ச்சியாக வைப்பேன்னு.. நான் ப்ராமிஸ் தரேன்.” என்றான்.
கரண் கூறியதைக் கேட்டவளின் கண்களில் இருந்து கண்ணீருடன் காதலும் வழிந்தது.
என்ன மாதிரியான காதலன் இவன்! அவனுடனான காதல் வாழ்வு என்பது முழுமையான மகிழ்ச்சியை தராது என்பதால்.. அவளுடைய காதலை மட்டும் அவளிடம் எதிர்பார்க்கிறான்.
நவ்யாவிற்கு வார்த்தைகள் வராமல் சண்டித்தனம் செய்தன. அவளின் காதலின் கதி இதுதானா.. என்று அவளது மனம் அலறியது.
அவளது திணறலை பார்த்த கரண் “நான் எதிர்பார்க்கிற பதிலை சொன்னால்.. உன் காதல் குறைஞ்சு போயிறாது நவ்யா. என்னை காதலிக்க வைத்தவளே நீதான்! அதை மட்டும் ஞாபகத்தில் வச்சுக்கோ! நீ முதல்ல சொன்னியே.. நான் என் போக்கில் காதலிச்சுட்டு இருக்கேன்னு.. அதைத்தான் இப்போ செய்ய சொல்றேன். நாம் ஒருத்தரை ஒருத்தர் காதலிப்போம். ஒன்று சேர விதி இருந்தால் சேருவோம். அப்படி இல்லைன்னா.. நீ உன் வாழ்க்கையை வாழணும். அதாவது இன்னொருவருடன் காதல் வாழ்க்கை வாழ்ந்து.. குடும்பம் குழந்தை என்று சந்தோஷமாக இருக்கணும்.” என்றான்.
அதைக் கேட்ட நவ்யாவிற்கு ஓ என்று அழ வேண்டும் போல் இருந்தது. முயன்று அடக்கிக் கொண்டவளுக்கு கோபமே வந்தது.
"காதலை ஒத்துக் கொண்ட அடுத்த நொடியே அதுக்கு மூடுவிழாவிற்கு நாளும் குறிக்கிறீயே கரண்! இதுக்கு நீ காதலை ஒத்துக் கொள்ளாமலே இருந்திருக்கலாம்." என்று கோபமாக தொடங்கியவள், அழுகையுடன் முடித்தாள்.
உடனே சட்டென்று ஆவேசத்துடன் அவளை அணைத்து கரண் "என்னை எங்கே நீ கன்ட்ரோல்லா இருக்க விட்டே! நானும் எவ்வளவு நேரம் தான் கன்ட்ரோல் செய்வது! என்னை மறந்துடுனு வாயால் பொய் சொல்லிட்டு.. உன் கண்ணுல தெரிகிற காதலை பார்த்துட்டு என்னால் எப்படி கன்ட்ரோல்லா இருக்க முடியும்! நானும் மனிதன் தானே நவ்யா! உன்னை காதலிக்கறேன்னு கத்தி சொல்ல ஆசை இருக்காதா! பட் ஐயம் ஸாரி நவ்யா! நான் என் காதலை ஒத்துக்காம இருந்திருந்தா.. உன்னோடது ஒருதலைக் காதல் என்று நினைச்சு வருத்தப்படரதோட முடிஞ்சுருக்கும். இப்படி நிறைவேறாத காதலா என்று நினைச்சு மனம் அலற வச்சுருக்காது. ஐயம் ஸாரி நவ்யா! என்னால் முடியலை நவ்யா!" என்று மேலும் அவளை இறுக்கி அணைத்தான்.
நவ்யா மெல்ல நிமிர்ந்து அவனது முகம் பார்த்து “உன் கூட வாழ ஆசைப்படறேன் கரண்! நீ சொன்ன மாதிரி என்னைக் கண்டிப்பா சந்தோஷமா வச்சுப்பே! ஆனா என்னை சந்தோஷமா வச்சுக்க.. நீ ரொம்ப கஷ்டப்படணும் கரண்! அதுக்கு.. நான் உன்னை லவ் செய்துட்டே இருந்துடறேனே! நம்ம காதல் சக்ஸஸ் ஆகலைன்னாலும்.. நீயும் நானும் காதலிச்சுக்கிறோம்.. என்கிறதே போதும்.” என்றவளின் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் பொல பொல என்று கொட்டியது.
அவன் இந்த பதிலை தான் வேண்டினான். ஆனால் அவனது இதயத்தில் திருகாணி கொண்டு திருகுவது போன்று வலி எடுத்தது. அதை மறைத்துக் கொண்டு புன்னகையுடன் அவளது கண்ணீரை துடைக்க போனான். ஆனால் அவனது கரத்தைப் பற்றிய நவ்யா “நான் முதலில் விளையாட்டா தான் சொன்னேன். நான் என் போக்கில் லவ் செய்துட்டு போறேன்னு.. சொன்னேன். அது இப்படி நிஜமாகுனு நினைச்சு பார்க்கலை.” என்றவள், எம்பி அவனது உதடுகளிடம் சரண் அடைந்தாள்.
அவனும் அவளது இதழ்களுடன் ஐக்கியமானான்.
சிறிது நேரத்திற்கு பின் இதழ்களை பிரித்துக் கொண்ட இருவரும்.. ஒருவரை ஒருவர் இறுக அணைத்துக் கொண்டார்கள்.
அவளது முதுகை ஆதரவாக தடவியவாறு கரண் "ஒகே நவ்யா! பெரலாக்ஸ் நாட்டிற்கு போக வேண்டாம். அந்த பைக்காரன் சொன்ன வழியாக கார்கீவ் சிட்டிக்கு உன்னைக் கூட்டிட்டு போய் விடரேன். அங்கிருந்து.. இந்தியாவிற்கு போக ஏற்பாடு செய்ய முடியுதான்னு பார்க்கலாம். கொஞ்சம் சுத்து வழி தான்! நடுவிலும் நமக்கு ஆபத்து வரலாம். நாம் ஜாக்கிரதையா போகணும். ஆனால் எந்த ஆபத்தும் என்னைத் தாண்டித் தான் உன் கிட்ட வரணும். உன்னைக் கண்டிப்பா சேஃப்பா கூட்டிட்டு போயிருவேன்." என்றவன், மெலிதாக முறுவலித்து "இதுவும் உன் மெடிக்கல் லேங்வேஜ் தான் நவ்யா! ஹோப் கொடுத்துட்டு.. அது நிறைவேறணும் என்றால்.. கடந்து போகும் ஆபத்தை பற்றியும்.. ஓப்பனா சொல்வது.." என்றான்.
அதைக் கேட்டு நவ்யா "நீ என்ன சொன்னாலும் எனக்கு ஒகே கரண்! நீ சொன்னியே நான் அதிர்ஷ்டம் செய்தவன்னு! என் அதிர்ஷ்டம் எப்படி வொர்க்அவுட் ஆகுனு நான் பார்க்கணும்." என்று முறுவலித்தாள்.
அதைக் கேட்டு அவளை அழுத்தமாக பார்த்த கரண் “வேண்டாம் நவ்யா! இந்த விசயத்தில் என் ஆசையை கிளப்பாதே! அப்பறம் அது நிறைவேறாமல் போயிட்டா.. ப்ச் அது ரொம்ப கஷ்டம் நவ்யா! அதன்போக்கில் போய் பார்க்கலாம்.” என்றவனின் குரலில் சிறுத் தவிப்பு தெரிந்தது. ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் போய்.. இன்னும் இரணத்தை ஏற்படுத்திக் கொள்ள அவன் விரும்பாதது புரிந்தது. எனவே நவ்யா ஆறுதலுடன் அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
ஒரு நிமிடம் அதை அனுபவித்தவன், பின் அவளது கரத்துடன் தனது கரத்தை இணைத்துக் கொண்ட கரண் அந்த சாலையின் ஓரத்தில் இருந்த புதர்கள் வழியே நவ்யாவை நடத்தி சென்றான்.
நவ்யா "எப்போ இருந்து என்னை லவ் செய்ய ஆரம்பிச்சே?" என்றுக் கேட்டவளின், உள்ளம் அவளையும் மீறி குதுகலித்தது. அந்த குதுகலம் அவளது கண்களிலும் வழிந்தது.
கரண் “லவ்வா” என்றுச் சிரித்தவன், பின் தொடர்ந்து “தெரில நவ்யா! அதுதான் சொன்னேனே! உன் மேலே தோன்றிய ஃபீலிங்.. அக்கறை என்று நினைச்சுட்டு இருந்தேன். அது காதல் என்று ஒவ்வொரு தரமும் நீ உன் கண்களால் உணர்த்தும் போது கோபம் வரும். அதுதான் உன் மனசு வருத்தபடற மாதிரி பேசிருவேன். இன்னொரு விசயம் தெரியுமா.. அன்னைக்கு நீ என்னை லவ் செய்யறதைக் கண்டுப்பிடிச்சு.. அதை மறந்துட சொன்னேனே! நிஜமா சொல்றேன்.. நீ என்னை லவ் செய்கிறது தெரிந்து சில்லென்று ஒரு ஃபீல் இருந்துச்சு! ஆனா உன்னை மறுப்பதிலும் உறுதியா இருந்தேன். ஆனா அன்னைக்கு நீ என்னை விட உறுதியா உன் லவ்வில் உறுதியா இருந்தே பார்த்தியா! எனக்கு ஒரு பக்கம் சிரிப்பா இருந்துச்சு! ஒரு பக்கம் பாவமா இருந்துச்சு! ஆனா உள் மனசுல ஒரு வித குறுகுறுப்பும் இருந்துச்சு! இந்தளவிற்கு.. பார்த்த இரண்டு நாள்ல ஒரு பெண்ணுக்கு லவ் இருக்கா என்று ஆச்சரியமா இருந்துச்சு! ஆனா அன்னைக்கு உன் கிட்ட இருந்து கீளின் கட் என்பதில் உறுதியா இருந்தேன். ஆனா விதி நம்மளை இப்படிச் சேர்க்கும் என்று நினைச்சு பார்க்கலை.” என்று அவர்களது இணைத்த கரங்களை உயர்த்தி அவளது கரத்தில் முத்தமிட்டான்.
பின் “இன்னொரு லவ் எனக்கு வராதுனு நினைச்சுட்டு இருந்தேன் நவி! பிகாஸ் ஐ லவ் ஹெர் லாட்! பின்னே இது எப்படி!” அவனையும் அவளையும் சுட்டிக்காட்டி கேட்டான்.
அதற்கு நவ்யா “ப்ச்! சிலதுக்கு காரணம் காரியம் லாஜீக் எல்லாம் தேடிட்டு இருக்க கூடாது.” என்று அசட்டையாக கூறிவிட்டு.. அவளது கரத்தோடு இணைத்த அவனது கரங்களை ஆட்டியவாறு சென்றாள்.
சாலையில் செல்லாமல்.. ஆளுயரத்திற்கு வளர்த்த புற்கள் நிறைந்த பகுதியிற்குள்ளவே நவ்யாவை கரண் அழைத்து சென்றான். சட்டென்று பார்த்தால்.. யாருக்கும் தெரிந்து விடக் கூடாது. அப்படி இராணுவத்தினரை இவர்கள் பார்த்து விட்டாலும் பதுங்கியவாறு செல்ல ஏதுவாக இருக்கும் என்று நினைத்தான். அவள் பசிக்கிறது என்கையில் பையில் கொண்டு வந்த உணவு பொட்டலம் ஒன்றை பிரித்துக் கொடுத்தான். அதில் அவள் அவனுக்கு.. இரு வாய் ஊட்டி விட்ட பின்பே அவள் சாப்பிட்டாள். வழியில் ஏதேனும் அழகான மலர்கள் தென்பட்டாள். அதைப் பறித்து அவளது ஒரு காதின் ஓரம் கூந்தலை ஒதுக்கி.. அந்த மலரை சொருகி அவன் அழகு பார்த்தான். அவள் கால் வலிக்கிறது என்கையில் முதுகில் சுமந்துக் கொண்டு சென்றான். பாம்பு போன்றவைகள் அவர்களது பாதையில் குறுக்கிடுக்கையில்.. கரண்.. நவ்யாவை பாதுகாப்பாக அழைத்துச் சென்றான். பின் இருவரும் ஓய்வாக அமர்ந்திருக்கையில்.. கரணின் முகத்தில் இருந்த யோசனையையும் அமைதியின்மையையும்.. யாராவது வந்து விடுவார்களா என்று எச்சரிக்கையுடன் நாலா புறமும் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து.. அவனது தலையை தனது தோளில் சாய்த்து வருடிக் கொடுத்தாள். இருவரும் அவர்களது குடும்பத்தினர் பற்றிய விபரங்களையும் இந்திய முகவரிகளை பரிமாறி கொண்டார்கள்.
இவ்வாறு காதலை வார்த்தைகளால் பரிமாறிக் கொண்ட பின்.. கடந்த இரண்டு மணி நேரத்தில் தங்களது.. எதிர்காலம் இல்லா இக்காதலை இருவரும் மகிழ்ச்சியாக அனுபவித்தார்கள்.
மாலை நெருங்கி விட.. இருள் சூழும் போது.. எவ்வாறு நடையை தொடர்வது.. எங்கு தங்குவது என்ற யோசனையுடன் கரண் நடந்துக் கொண்டிருந்தான்.
அவ்வாறு சென்றுக் கொண்டிருந்த பொழுது.. நவ்யா “இன்னும் டிஸ்டன்ஸ் அதிகமா?” என்றுக் கேட்டாள். ஆனால் அவனது கவனம் வேறு எங்கோ இருந்தது. அவனது நாசி.. எதையோ நுகர்ந்தது. அவளை அங்கேயே இருக்க கூறிவிட்டு மெதுவாக புதர்களில் இருந்து வெளிப்பட்டவன், வளைந்து சென்ற அந்த சாலையில் மெல்ல சென்று எட்டிப் பார்த்தவன், அப்படியே முகத்தை மூடியவாறு அமர்ந்துவிட்டான்.
கரண் அமர்ந்த நிலை.. நவ்யாவிற்கு ஏதோ விபரீதம் என்று உணர்த்தியது. எனவே சிறு நடுக்கத்துடன் அந்த வளைத்த சாலையிடம் வரும் போதே அவளது நாசி கேரோஸின் உடன் கூடிய வேறு ஒரு நாற்றத்தையும் உணர்ந்தது.
நவ்யா அருகே நிற்பதை உணர்ந்து கரண் எழுந்து வேண்டாம் என்று மறுப்பதற்குள்.. நவ்யா அந்த கோரக் காட்சியை கண்டுவிட்டாள்.
பைக் ஒன்று தீ பற்றி எரிந்துக் கொண்டிருக்க.. அதன் அருகே கருகி உடல் ஒன்று இருந்தது. அதைப் பார்த்த நவ்யா அதிர்ச்சியுடன் சிலையென நின்றுவிட.. கரண் அங்கிருந்து அவளை அகற்றிக் கொண்டு சென்றான். சற்று தொலைவு வரை உள்ளே வந்தும்.. அவள் கண்ட காட்சி அவளது கண்களிலேயே நின்றது. இமை கூட அசைக்காமல் அந்த காட்சியை மனக்கண்ணால் பார்த்தவாறு.. கரண் இழுத்த இழுப்பிற்கு வந்தவளின் நிலையை கரண் நன்றாக உணர்ந்தான்.
எனவே அவளை அவனைப் பார்த்தவாறு நிற்க வைத்தவன், அவளது தோள்களைப் பற்றி குலுக்கி.. அவளது கவனத்தை தன் பக்கம் திருப்ப முயன்றான். ஆனால் அவளது பார்வை எங்கோ வெறித்திருந்தது. பின் அவளது கன்னங்களைப் பற்றிக் குலுக்கியவன், தனது முகத்தைப் பார்க்க வைத்தான். பின் சட்டென்று குனிந்து அவளது இதழில் அழுத்த முத்தமிட்டு.. அவளது உயிருடன் கலப்பது போன்று தனது உதடுகளைக் கலக்க விட்டான். அவளுடன் கலந்துவிட்ட அந்த முத்த சங்கமத்தில் அவனது மனமும் சாந்தப்படுவதை உணர்ந்தான். உயிரையே உறிஞ்சு எடுத்துவிடும் போன்ற அவனது ஆழ்ந்த முத்தத்தில் நவ்யா.. சுயவுணர்வை அந்த காட்சியில் இருந்து தன்னை மீட்டு.. அவனிடம் தொலைந்தாள்.
தன்னிடம் லயிப்பதை உணர்ந்த கரண்.. நிம்மதியுடன் அவளது இதழ்களை விடுதலை செய்தான். கரண் உதடுகளைப் பிரித்ததும்.. நவ்யா விசும்பலுடன் அவனது தோள்களைக் கட்டிக் கொண்டாள். தன்னைக் கட்டிக் கொண்டவளை இறுக அணைத்துக் கொண்ட கரண்.. அவளது முதுகை ஆறுதலாக தடவிக் கொடுத்தான். அவனும் தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டான்.
ஏனெனில் கரண் முன்பு.. நவ்யாவை பைக்கில் வந்தவருடன் அனுப்பி வைக்க முடிவு செய்திருந்தவனை தான் சற்றுமுன்.. உயிரற்ற சடலமாக பார்த்தார்கள். மனம் சாந்தப்பட்டதும்.. மெல்ல விலக முயன்ற நவ்யாவை தற்பொழுது கரண் விடவில்லை. மேலும் மேலும் இறுக அணைத்தான். தற்பொழுது அவனது நிலையை உணர்ந்த நவ்யா.. அவனது அணைப்பில் வாகுவாக தன்னை இறுக்கி கொண்டாள்.
கரண் மெல்ல “நல்லவேளை நீ அவன் கூடப் போகலை என்றுச் சந்தோஷப்படுவதா! இல்லை.. அவனோட பேமலியை பார்க்க பயமும் ஆர்வமுமாக போனவன் நிலை இப்படி ஆகிருச்சே என்று வருத்தப்படுவதா!” என்றவன், சிறு பெருமூச்சுடன் விலகினான்.
இருந்தும் அவனால்.. தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முடியவில்லை. நின்ற இடத்திலேயே அமர்ந்துவிட்டான். தன்போக்கில் பேசினான்.
“அவன் வருவான் என்று அவனோட வீட்டில் வெயிட் செய்துட்டு இருப்பாங்களே நவி! அவன் இனி வர மாட்டான் என்றுத் தெரிந்தால்.. அவங்க நிலை!” என்றவனின் கண்கள் கலங்கின. நவ்யாவும் கலக்கத்துடன் அவனது ஒரு கரத்தை தனது கரங்கள் கொண்டு வளைத்துப் பிடித்துக் கொண்டு.. அவனது தோளில் தலையை சாய்த்துக் கொண்டாள்.
பெருமூச்சை இழுத்துவிட்டவன், மெல்ல நவ்யாவின் தலையை வருடிக் கொடுத்தான்.
“ஸாரி நவி! நீ முதலிலேயே பயந்துட்டு இருந்தே! நானும் வெர்ரி பண்ணி உன்னை இன்னும் பயமுறுத்திட கூடாதுன்னு தான்.. உன்னை இவ்வளவு டிஸ்டன்ஸ் இழுத்துட்டு வந்தேன். ஆனா காலைல பார்த்தது.. இப்போ பார்த்தது.. என் கண்ணில் படாமல்.. இன்னும் இந்த மாதிரி அப்பாவி உயிர் எத்தனை பிரிந்திருக்கிறதோ என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து.. நான்தான் இப்போ டவுன் ஆகிட்டேன்.” என்றுவிட்டு முகத்தை அழுத்தி துடைத்தவன்.. அவள் புறம் திரும்பி “போகலாமா..” என்றுக் கேட்டான்.
நவ்யா போகலாம் என்பது போல் தலை ஆட்டினாள். ஆனால் அவனுடன் எழுந்து கொள்ளாமல் அங்கேயே அமர்ந்திருந்தாள். அவளது நிலை புரிந்த கரண் அவள் முன் மண்டியிட்டு “என் உயிர் போனாலும் போகுமே தவிர.. உனக்கு ஒன்றும் ஆக நான் விட மாட்டேன் நவி!” என்றான்.
அவன் கூறியதைக் கேட்ட நவ்யா அவனது சட்டையை பற்றி இழுத்து அணைத்து.. “இப்படியெல்லாம் பேசாதே கரண்! உனக்கு எதாவது நடந்து.. அதன் மூலம் நான் உயிர் பொழைச்சா.. அந்த வாழ்வை நான் சந்தோஷமா வாழ்வேன் என்று நினைச்சுட்டியா! நாம் லவ் பெயிலியரும் ஆகலாமினு நீ சொன்னதையே இன்னும் என்னால ஜீரணிக்க முடியலை. இப்படியெல்லாம் பேசாதே!” என்று அழுதாள்.
அவளது முகத்தை நிமிர்த்தி கண்ணீரை துடைத்து விட்ட கரண் “ஒகே இனி இப்படி பேச மாட்டேன். ஆனா எனக்கு ஒரு ப்ராமிஸ் மட்டும் கொடு! நாம் போற வழியில்.. உனக்கு எதுவும் ஆக நான் விட மாட்டேன். ஆனா எனக்கு எதாவது நடந்தா.. நீ தயங்கி நிற்காம.. தப்பித்து போயிரணும்.” என்றான்.
உடனே நவ்யா பளார் என்று அவனது கன்னத்தில் அறைந்தாள்.
பின் கோபத்துடன் “என்ன மாற்றி சொன்னா.. எனக்கு தெரியாதுனு நினைச்சுட்டியா! என்ன சுயநலம் உனக்கு! ஏன் என் உயிரை கொடுத்து நான் உன்னைக் காப்பாற்ற கூடாதா! நானும் சொல்வேன் கேட்டுக்கோ! எனக்கு எதாவது நடந்தா.. என்னைப் பற்றிக் கவலைப்படாம நீ தப்பிச்சு போயிரணும்.” என்று மூக்கு விடைக்க கூறினாள்.
அவனது முகத்தில் மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது. பின் அவளது தலையை வருடி விட்டவாறு.. “சரி! ரெண்டு பேரும் தப்பிச்சு.. நல்லபடியா வாழ்வோம். இது ஒகேவா!” என்றுக் கேட்டான்.
நவ்யா “ம்ம்! இனி இந்த மாதிரியே பேசு..” என்றாள்.
முறுவலுடன் அவளது கரத்தை பற்றி எழுப்பினான். பின் இருவரும் ஒரு கணம் தயங்கி தலையைத் திருப்பிப் பார்த்தார்கள். பின் தங்களது நடையை தொடர்ந்தார்கள்.
அந்த சாலை வழியில் சென்றால்.. இராணுவத்தினரை எதிர்கொள்ள நேரிடும் என்று.. பாதையை மாற்றி நடந்தார்கள். அடுத்து இருள தொடங்கிவிடும். அதற்குள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்.. என்ற கவலை மீண்டும் கரணை ஆட்கொண்டது. சற்று தூரத்தில் நான்கு வாகனங்கள் அணிவகுத்து வருவதைப் பார்த்த கரண்.. நவ்யாவை இழுத்து கொண்டு சென்று.. பாறையின் பின் ஒளிந்துக் கொண்டான். பின் மெல்ல எட்டிப் பார்த்தான்.
அந்த வாகனத்தில் இருந்த இரஷ்ய கொடியை பார்த்து நல்லவேளை மறைத்துக் கொண்டோம் என்று நிம்மதி மூச்சு விட்டவன், நவ்யாவை நன்றாக மறைந்து உட்கார சொல்லிவிட்டு.. அவனும் அமர்ந்தான். பின் ஏதோ தோன்ற.. மீண்டும் எட்டிப் பார்த்தவனின் மூளையில் யோசனை ஒன்று தோன்றியது. உடனே உற்சாகத்துடன்.. நவ்யாவின் கரத்தை பற்றி எழுப்பியவன், அணிவகுந்து வந்துக் கொண்டிருக்கும் வாகனங்களை நோக்கி ஓடினான்.
அவனது முரணான செயலில் குழப்பமுற்ற நவ்யா “என்னாச்சு கரண்!” என்றுக் கேட்டாள்.
அதற்கு கரண் ஓடியவாறு “வந்துட்டு இருக்கிறது.. இரஷ்யன் சர்க்கஸ் விகிக்கள்ஸ்! இப்போதைக்கு இரஷ்யன் ஆர்மி கிட்ட இருந்து தப்பிக்க.. அவங்க நாட்டு.. வண்டியில் ஏறி ட்ரவல் செய்வது தான் சேஃப்! இந்த எல்லையை தாண்டி நம்மை விட்டுட்டா போதும்.. நாம் சேஃப்பா போய் சேர்ந்திரலாம். அவங்க நாட்டுக்காரங்க சர்க்கஸ் வண்டினு.. இந்த எல்லையில் சுற்றிட்டு இருக்கிற இரஷ்யன் ஆர்மிஸ் விட்டுருவாங்க..” என்று சாலையை நோக்கி ஓடினான்.
நவ்யா அவனுடன் ஓடியவாறு “ஆனா.. அவங்க நாட்டு ஆர்மி கிட்ட.. அவங்களே நம்மை பிடிச்சு கொடுத்துட்டா..” என்றுக் கேட்கையில்.. இருவரும் நடுசாலைக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு நேர் எதிர்.. இரஷ்ய நாட்டு சர்க்கஸ் தொழிலாளர்களின் வாகனங்கள் வந்து.. அவர்களைப் பார்த்து நின்றன.
கரண் நவ்யா கேட்டதைக் கேட்டு.. பதில் கூறாமல் அவளைப் பார்த்தவாறு நின்றான்.
நடுசாலைக்கு வந்து நின்றவர்கள்.. அமைதியாக நிற்கவும், வண்டியில் இருந்து குரல் கேட்டது.
“கொ டெ? (நீங்கள் யார்?)” என்று இரஷ்யன் மொழியில் கேட்டார்கள்.
அதற்கு கரண் “நாங்களும் உங்களைப் போல் அகதிகளாக இந்த யுத்தத்தில் அகதிகளாக மாட்டிக் கொண்டவர்கள் தான்! எங்களுக்கு உதவுங்கள்!” என்று இரஷ்யன் மொழியில் கத்தினான்.
(இனி கரண்.. இரஷ்யன் சர்க்கஸ் ஆட்கள் மற்றும் மற்றவர்களும் பேசுவது இரஷ்யன் மொழியில்.. உங்களுக்காக தமிழில்..)
அவ்வாறு கத்திவிட்டு நின்றிருந்த.. கரணுக்கு.. சிறிது பயம் தொற்றிக் கொண்டது. மனம் பலவீனமாக இருக்கும் இந்த நேரத்தில்.. நவ்யாவின் சிறு வார்த்தை கூடத் தனக்கு பயத்தை தோற்றுவிப்பதை நன்கு உணர்ந்தான். எனவே எதற்கும் தயாராக.. நவ்யாவின் கரத்தை இறுக பற்றியவாறு நின்றிருந்தான்.
லாரியின் டிரைவர் இருக்கையில் இருந்து மெல்ல ஒருவன் எட்டிப் பார்த்தான். இரஷ்யன் மொழியில் “நீங்க தென் ஆசியாவை சேர்ந்தவர்களா?” என்றுக் கேட்டான்.
அதற்கு கரண் “ஆம் நாங்கள் இந்தியர்கள்!” என்றான்.
அதற்கு அந்த டிரைவர் உள்ளே திரும்பிப் பார்த்து யாரிடமோ பேசிவிட்டு “வண்டியில் ஏறுங்
கள்!” என்றான்.
நவ்யா மகிழ்ச்சியுடன் கரணை பார்த்தாள். கரண் முறுவலுடன் “மனிதநேயம் இன்னும் சிலரிடம் வாழ்கிறது.” என்றான்.
- 1 Forums
- 20 Topics
- 46 Posts
- 0 Online
- 29 Members
